சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இல்லை என்னும் நிலை உருவானதால் அங்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட வுகான் மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்தனர்.

சீனா

எனினும் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு சீனாவில் தடை தொடர்கிறது. சீனாவில் கொரோனா முதல் முதலாக `வெட் மார்க்கெட்’ என்று அழைக்கப்படும் இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக நம்பப்படுகிறது. சில விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகவும் பாம்புகளிடமிருந்து பரவியதாகவும் சொல்கிறார்கள். எனினும், இதற்கு இன்னும் முழுமையான அறிவியல் ரீதியான முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.

Also Read: 3 வாரங்களில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா.. 76 நாள்களுக்குப்பிறகு வெளிக்காற்றை சுவாசிக்கும் வுகான்!

இந்த நிலையில்தான் சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது இறைச்சி சந்தைகளும் திறக்கப்பட்டது. ஆனால், பாம்புகளை வளர்க்கும் பண்ணைகளுக்குத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பாம்பு அதிகம் ரசித்து உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் மருந்துகளுக்கான தேவை அதிகரிக்க சீனாவில் பாம்புகளுக்கான தேவையும் அதிகரித்தது. இதனால் பாம்பு வளர்ப்பு ஒரு பெரும் தொழிலானது. ஆண்டுக்கு சீனா 9,000 டன் பாம்புகளை உணவுக்காகவும் மருந்துகளுக்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் வர்த்தகம் செய்து வந்தது.

சிசிகியாவ் கிராமம்

இந்தப் பாம்பு வர்த்தகத்துக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது சீனாவின் பாம்பு கிராமம். ஆம், சீனாவில் உள்ள செஜியாங் மாகாணத்தில் இருக்கும் குக்கிராமம்தான் சிசிகியாவ். தோராயமாக 600 பேர் வாழும் இந்தக் கிராமத்தில் மக்களின் பிரதான தொழில் பாம்பு வளர்ப்புதான். இந்த மக்கள் தினமும் கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான பாம்புகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இன்று பாம்பு பண்ணைகளாக இந்தக் கிராமம் காட்சி அளித்தாலும், 50 வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதி இப்படி இல்லை.

இந்தக் கிராமமே சற்று வறண்ட நிலப்பரப்புதான். இயற்கையாகவே இந்த நிலப்பரப்பில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. அந்தப் பகுதியில் இருக்கும் நீர் நிலைகளிலும் பெரும்பாலும் பாம்புகளின் ஆதிக்கம்தான். இதைக் கவனித்த யாங் ஹாங்சாங் என்பவர், இங்கு முதன்முதலாகப் பாம்புகள் பண்ணையை உருவாக்கினார். பின்னாள்களில் இவரை அவ்வூர் மக்கள் பாம்புகளின் ராஜா என்று அழைத்தனர்.

சிசிகியாவ் கிராமம்

சீனாவில் பசிக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்குச் செல்வத்தை அள்ளித்தரும் தொழிலாக மாறியது இதன் பின்புதான். அதன் பின்னர், கடந்த 40 ஆண்டுகளில் சிறிது சிறிதாகப் பாம்புப் பண்ணைகள் முளைத்தது. பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில் அதிக அளவில் பெருகியது. கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், அதிகமான விலைக்கு அந்நிய மருந்து உற்பத்தி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் இந்தக் கிராமத்தில் வீட்டுக்கு வீடு பாம்பு வளர்ப்பு என்பது குடிசைத் தொழிலானது.

நாளடைவில் மருந்துகளின் தேவை அதிகரித்ததால், இந்தக் கிராம மக்களின் வளர்ப்புப் பாம்புகளின் தேவையும் பன்மடங்கு அதிகரித்து. இதனால் பாம்புகளின் விற்பனை டன் கணக்கில் நடந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பாம்புகள் உள்ளிட்ட அனைத்து விதமான இறைச்சிகளுக்கும் தடை வித்தது.

சிசிகியாவ் கிராமம்

தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் பாம்புப் பண்ணைகள் மீது இருந்த தடை விலகும் என நினைத்திருந்தனர். ஆனால், பாம்புகள் பண்ணைக்கும் அதன் உற்பத்திக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்தக் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “இங்கு இருக்கும் மக்கள் வேறு தொழிலுக்கு மாற வேண்டும். அவர்கள் வேறு விதமான உயிரினங்களை வளர்க்கலாம்” என உள்ளுர் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், இது தற்காலிகத் தடைதான் எனக் கிராம மக்கள் நம்பி காத்திருக்கின்றனர். எனினும், இந்தத் தடை நிரந்தரமானது எனச் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: சீனா, இத்தாலி, ஸ்பெயின் முதல் அமெரிக்கா வரை… அந்த நாடுகளில் லாக் டவுன் நிலை என்ன?

பாம்புகள் அடைக்கப்பட்டிருக்கும் கூடுகள் காலியாக உள்ளது. ஏற்கெனவே 2002-ம் ஆண்டு சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸுக்கும் அந்நாட்டில் இயங்கி வரும் இறைச்சி சந்தையே காரணமாகச் சொல்லப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸும் வெளவால் அல்லது ஊர்வன விலங்குகளின் இறைச்சியிலிருந்துதான் பரவியதாக நம்பப்படுகிறது. இதனால்தான் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 40 வருடங்களாக ஆண்டுக்கு 30 லட்சம் பாம்புகளை உற்பத்தி செய்து வந்த மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.