மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர்கள் அனுப் – வந்தனா திவாரி தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை காலை 5 மணிக்கு உள்ளூர் காவல்நிலையத்துக்கு போன் செய்த அனுப் தன் மனைவி அப்பார்ட்மென்டின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வந்தனாவின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Also Read: `கொரோனா உயிரிழப்பைத் தடுக்கத் தவறிய சி.எம்.சி மருத்துவமனை?’ – எச்சரித்த வேலூர் கலெக்டர்
கணவன் மனைவிக்கு இடையேயான தகராறில் வந்தனா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அப்பார்ட்மென்டில் பணியில் இருந்த இரவு காவலர் எதோ விழும் சத்தம் கேட்டு வந்து பார்த்துள்ளார். அப்போது வந்தனா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மாடியில் இருந்த வந்த அனுப் மனைவி மேலே இருந்து குதித்துவிட்டதாகக் கூறியுள்ளார். போலீஸாரின் விசாரணையின்போது, குடும்ப பிரச்னை காரணமாக இருவருக்கும் கடந்த சில நாள்களாகத் தகராறு இருந்தது, நான் தூங்கிக்கொண்டிருந்தேன். ஆத்திரத்தில் இருந்த வந்தனா சுடுதண்ணீரை என் மீது ஊற்றினாள். அதன் பின்னர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்” எனத் தெரிவித்தார்.
சுடுதண்ணீர் ஊற்றியதால் அவரது உடலில் காயம் இருந்தது இதன்காரணமாக அனுப் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வந்தனாவின் 5-வயது மகனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டவதில் ’உன்னை கொன்னுடுவேன்னு அப்பா அடிக்கடி அம்மாவ மிரட்டுவாரு’ எனக் கூறியிருந்தான். வந்தனா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அனுப் தொடர்ந்து காவல்துறையினரிடம் கூறிவந்துள்ளார்.

வந்தனாவின் குடும்பத்தினர் தகவல் அறிந்து அங்கு வந்தனர். வந்தனாவ திட்டமிட்டே அனுப் கொலை செய்துள்ளார். இது தற்கொலையல்ல எனத் தெரிவித்தனர். மேலும், வந்தனா கர்ப்பமாக இருக்கும் தகவலையும் கூறியுள்ளனர்.
வந்தனாவின் சகோதரர் போலீஸாரிடம் கூறுகையில், `என் சகோதரி கணவருக்கும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் பழக்கம் உள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்து என் சகோதரி கேட்டதற்கு உன்னைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் என் சகோதரியை விட்டுவிட்டு அந்த இளம்பெண் வீட்டில் தங்கியுள்ளார்.
Also Read: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை 74 வயது மூதாட்டி குணமடைந்தது எப்படி?
இதுகுறித்து தெரிந்த என் தங்கை அந்த இளம்பெண்ணின் தந்தைக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார். ஆனால், அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதன் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. எனக்கு போன் செய்த என் சகோதரியின் கணவர், அவளை அழைத்துச் செல் இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். ஊரடங்கு முடிந்ததும் அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தேன். உன் சகோதரியை அழைத்துச் செல்லவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார்” என்றார்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வந்தனா தற்கொலை செய்துகொள்ளவில்லை, இது கொலை என உறுதியாகியுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் அனுப் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் காதலியும் கைது செய்யப்பட்டுள்ளார்.