‘உலகம் தட்டையானது’ ‘எல்லாம் ஏலியன் வேலை’ ‘அவர் ஒரு இல்லுமினாட்டி’ என கான்ஸ்பிரஸி தியரிகள் சூழ்ந்த உலகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் ஆராய்ச்சிகள் முழுமையாக முடிவு பெறாததால் கொரோனா வைரஸ் விஷயத்திலும் பல கான்ஸ்பிரஸி தியரிகள் உருவாகியுள்ளன. அப்படிதான் இங்கிலாந்தில் 5G நெட்வொர்க் சம்பந்தப்பட்ட ஒரு கான்ஸ்பிரஸி தியரி வலம் வந்துகொண்டிருக்கிறது. இதன்படி கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் 5G மொபைல் டவர்களே எனச் சிலரால் கூறப்படுகிறது. இதையடுத்து மக்கள் 5G மொபைல் டவர்களுக்குத் தீ வைத்துக் கொளுத்தும் சம்பவங்கள் கடந்த சில நாள்களாக அங்கு நடந்தேறியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இதுவரை பர்மிங்ஹாம், லிவர்பூல், மெல்லிங்க் ஆகிய இடங்களில் நிகழ்ந்துள்ளன.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை மைய (National Health Service) இயக்குநர் ஸ்டீபன் கூறுகையில், “மக்கள் இவ்வாறு தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது கோபத்தையும் வெறுப்பையும்தான் வரவழைக்கிறது. இதுபோன்ற செயல்களை அவசரக் காலத்தில் நிச்சயம் நாம் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார். இவ்வாறு 5G நெட்வொர்க் மூலம் கொரோனா பரவுவதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இவை எல்லாம் வெறும் கட்டுக்கதைதான் என இங்கிலாந்தின் உண்மை கண்டறியும் (Fact-checking) தொண்டு நிறுவனமான ஃபுல் பாக்ட் (Full fact) தெரிவிக்கிறது. மேலும், 5G-யிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு அலையானது மின்காந்த கதிர்வீச்சை விடக் குறைவானதே. இதனால் மனித உடலில் உள்ள செல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் ஃபுல் பாக்ட் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையிலும் அங்குள்ள மக்கள் 5G அல்லாத டவர்களைக்கூட நெருப்பு வைத்துத் தாக்கி வருகின்றனர்.
Also Read: 5G சேவை வேண்டுமா, துல்லியமான வானிலை அறிவிப்பு வேண்டுமா?- கேட்கும் நாசா
இதற்கு முக்கியமான காரணம் இந்த கான்ஸ்பிரஸி தியரியை உருவாக்கியவர்கள் முன்வைக்கும் ஆய்வு நூலே ஆகும். ஒரு பாக்டீரியா மற்றுமொரு பாக்டீரியாவுடன் தகவல்களை மின்காந்த (electro-magnetic) கதிர்வீச்சு சமிக்ஞைகள் மூலமே பரிமாறிக் கொள்கிறது என்கிறது அந்த ஆய்வுக் கட்டுரை. இதை முற்றிலுமாக மறுத்துள்ள ஃபுல் பாக்ட் அந்த அனுமானமே சர்ச்சையானது எனக் கூறியது. மேலும், இந்த ஆய்வே பாக்டீரியா பற்றியது, வைரஸுக்கும் பாக்டீரியாவிற்கும்கூட வித்தியாசம் தெரியாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உலகமே கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட சில போலி செய்திகளும் தகவல்களும் பரவிய வண்ணமே உள்ளன. இதை மக்களும் பெரிதும் யோசிக்காமல் உண்மை என நம்பி எதிர்வினையாற்றுவதுதான் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இந்தியாவிலும் இது போல் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைதளங்களிலும் பொய் தகவல்கள் மற்றும் பரப்புரைகள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் பார்க்கும் அனைத்தையும் நம்பாமல் தீர விசாரிப்பதே சரி!