கொரோனா ஊரடங்கு நிலையில், காவல் துறையினர் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். தங்கள் குடும்பங்களிலிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவரின் தந்தை டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், அந்த தந்தைக்கு லேசாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அவரைப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்த நிலையில், காவலருக்கும் கொரொனோ தொற்று இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் அந்தக் காவலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருக்கிறார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் பேசினோம். “திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஒரு காவலரின் அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் காவலரின் அப்பா டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்தவர்.

இந்த நிலையில், காவலருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்று அவருக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை. ஆனாலும், அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். அதோடு, அந்தக் காவலர் பணியாற்றிய காவல் நிலையத்தில் உள்ள சக காவலர்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் காவலர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை” என்றார்.