இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் இந்தியா, பல முக்கிய மருந்துகளின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இதனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா உள்ளிட சில நாடுகள் இன்னலைச் சந்தித்தது. இந்த நிலையில் மோடியைத் தொடர்புகொண்டு பேசிய ட்ரம்ப், “மருந்துப் பொருள்கள் மீதான தடையை நீக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப், “மோடி மருந்துப் பொருள்கள் வெளிவருவதற்கு உதவவில்லை என்றால், ஒன்றும் பிரச்னை இல்லை.. ஆனால்… பதிலடி இருக்கலாம்” என்று எச்சரிக்கும்விதமாகப் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. எனினும் அவர், தான் பிரதமரிடம் பேசிய பிறகு இந்தியா அது குறித்து தீவிரமாகப் பரிசீலிப்பதாகவும் ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், நேற்று அண்டை நாடுகளுக்கும் கொரோனாவால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் முடிவை இந்தியா எடுத்தது. மனிதாபிமான அடிப்படையில் பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

மேலும், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவி வரும் சூழலில் நாட்டில் போதுமான அளவில் மருந்துகள் கையிருப்பு இருக்கிறதா என்பதை மக்களிடம் அரசு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் இதுதொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சா, “இந்த விஷயத்தை தேவையில்லாமல் அரசியலாக்குகிறார்கள். பொறுப்புள்ள அரசாங்கமாக முதற்கட்டமாக நாட்டில் உள்ள மக்களுக்குத் தேவையான மருந்து கையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு சில தடைகளை விதித்தோம்” என்றார்.

இந்த நிலையில், இன்று ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த ட்ரம்ப், இந்தியா மருந்து அளித்தது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தார். “நான் அமெரிக்காவுக்கு மில்லியன் கணக்கான மருந்துகளைக் கொண்டு வந்திருக்கிறேன். 29 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகள் வந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து அதிகமாக வந்திருக்கிறது” என்றார் ட்ரம்ப்.
Also Read: `மோடியிடம் கேட்டிருக்கிறேன்; அனுமதி கிடைக்காவிட்டால்.. பதிலடி?!’ -மருந்து விவகாரத்தில் ட்ரம்ப்
தொடர்ந்து. “நான் மோடியிடம் பேசியிருந்தேன். நான் அவரிடம் மருந்து வகைகளை அமெரிக்காவுக்கு வர அனுமதிக்க முடியுமா எனக் கேட்டிருந்தேன். மோடி சிறந்த மனிதர். அவர் நல்லவர். உங்களுக்கே தெரியும், இந்தியாவுக்குத் தேவை என்பதால்தான் அவர்கள் அந்த மருந்து வகைகளுக்கான ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தனர். இப்போது அதனால் நிறையவே நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது” என்றார்.
Also Read: `ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?’ – இந்த வரலாறு முக்கியம் பாஸ் #MyVikatan
மேலும், “நிறைய பேர் இது தொடர்பாகப் பேசுகிறார்கள். ஆனால், நான் கெட்ட விஷயங்களைக் கேட்பதில்லை. நல்ல விஷயங்களை மட்டுமே கேட்கிறேன்” என்றார் ட்ரம்ப். இந்தியா மருந்து வழங்காவிட்டால் பதிலடி இருக்கலாம் என்று தெரிவித்த ட்ரம்ப் தற்போது மோடி நல்லவர் எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது