கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் லெவனைத் தேர்ந்தெடுப்பது எளிதான காரியமல்ல. சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த பல வெளிநாட்டு வீரர்களில் நால்வரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சிரமம் என்றால், பௌலர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது அதைவிடச் சிரமம். எங்கிருந்து தொடங்கி எங்கு முடிப்பது என்பது புரியாததால், முதலில் நான்கு ஓவர்சீஸ் வீரர்களை முதலில் முடிவு செய்துவிடலாம்.

ஷான் மார்ஷ் & டேவிட் மில்லர்… வருடத்துக்கு ஒருமுறை பயிற்சியாளரையும் கேப்டனையும் மாற்றும் கிங்ஸ் லெவனில் பிரீத்தி ஜிந்தாவுக்கு அடுத்தபடியாக அதிக சீசன்கள் இருந்திருப்பது இவர்கள் இருவரும்தான். அதற்காகவே அவர்களை அந்த அணியின் ஆல்டைம் லெவனில் சேர்க்க வேண்டும். மார்ஷ் 10 ஆண்டுகளும், மில்லர் 8 ஆண்டுகளும் அந்த அணிக்காக விளையாடியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் பங்களிப்புகளும் புறக்கணிக்கமுடியாதது. முதல் சீசன் ஒன்று போதும் ஷான் மார்ஷை சேர்ப்பதற்கு. 2016-ல் கோலி கொண்டிருந்த சீசனுக்கு அடுத்து, ஒரு வெறித்தனமான பெர்ஃபாமன்ஸ் என்றால் அது மார்ஷின் முதல் சீசன்தான். முதல் 3 போட்டிகளிலும் தோற்றிருந்த அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்ததென்றால், முழுமுதற் காரணம் மார்ஷ்தான்.

Shaun Marsh

அதேபோல், டேவிட் மில்லர்… கடந்த 4 சீசன்களுமே மிகவும் சுமாராகத்தான் ஆடியிருக்கிறார். ஆனால், அதற்கு முந்தைய 3 சீசன்களும் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஒரு சீசனில் சுமார் 60 என்ற சராசரியும் மற்றொரு சீசனில் சுமார் 44 என்ற சராசரியும் வைத்திருந்தார். கிங்ஸ் லெவனுக்கு ஒரு வீரர் 3 ஆண்டுகள் சிறப்பாக ஆடியிருக்கிறார் என்பதே போதுமானது. சொல்லப்போனால், ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான அந்த அசாத்திய சதம் போதும் ஆல்டைம் லெவனில் இடம்பிடிக்க!

மேக்ஸ்வெல்… ஒரு சூப்பர் சீசன், ஒரு சுமார் சீசன், இரண்டு மோசமான சீசன்கள். ஆல்டைம் லெவனில் இடம்பிடிக்க ஒரு சூப்பர் சீசனும், ஒரு சுமார் சீசனும் போதுமா? நிச்சயம் போதாது. ஆனால், அந்த ஒரு சீசன்… கிங்ஸ் லெவனின் வரலாற்றின் ஒரேயொரு மகத்தான சீசன். அந்த ஒரு சீசனை சாத்தியப்படுத்திய மேக்ஸ்வெல்லை நிச்சயம் கிங்ஸ் லெவன் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். அதற்காக மேக்ஸ்வெல் இந்த அணியின் மிடில் ஆர்டரில் இடம்பெறுகிறார்.

Glenn Maxell

கடைசி ஓர் இடம் யாருக்கு? சங்கக்காரா, அசார் மஹ்மூத், கிறிஸ் கெய்ல்… இவர்கள் மூவருமே கிங்ஸ் லெவனுக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சங்கக்காரா, ஆடிய 3 சீசன்களிலும் 30 என்ற சராசரியில் ஸ்கோர் செய்திருக்கிறார். கேப்டன், கீப்பர் என இரண்டு பாக்ஸ்களையும் டிக் செய்கிறார். அசார் மஹ்மூத், ஆடிய இரண்டு சீசன்களில் தலா 14,15 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். அதுபோக சுமார் 20 என்ற சராசரியில் 382 ரன்களும் (186 + 196) அடித்திருக்கிறார். கிறிஸ் கெய்ல் – கிட்டத்தட்ட 40 என்ற சராசரியில் சுமார் 850 ரன்கள் எடுத்திருக்கிறார். அதுவும் இரண்டு சீசன்களில்! இவர்களில் யாரைத் தேர்வு செய்வது? மற்ற இடங்களைத் தேர்வு செய்துவிட்டு பின்னர் இந்த ஒரு ஸ்லாட்டை முடிவு செய்வோம்.

கே.எல்.ராகுல் – கிங்ஸ் லெவனின் வரலாற்றில் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்துக்கொண்டிருப்பவரைத் தேர்வு செய்யக் காரணம் ஏதும் தேவையில்லையே! மிடில் ஆர்டரில் யுவி… முதல் 3 சீசன்களில் (2018 சீசனை கனவாக நினைத்து மறந்துவிடலாம்) பெரிய தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால், 894 ரன்களும் 14 விக்கெட்டுகளும் மோசம் இல்லையே! அதுமட்டுமல்லாமல் பஞ்சாப்பின் மார்க்கீ வீரரை எப்படி விட முடியும். அடுத்து, அக்சர் படேல். 2018 தவிர, ஒவ்வொரு சீசனிலும் 13+ விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு இல்லையென்றாலும், சில நல்ல கேமியோக்கள் கொடுத்திருக்கிறார் அக்சர்.

K.L.Rahul

அப்படியே பௌலிங் யூனிட் பக்கம் போகலாம். 2014-ம் ஆண்டு 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய மிட்செல் ஜான்சன், அதன்பிறகு பெரிதாக விக்கெட் வேட்டையில் ஈடுபடவில்லை. சொல்லப்போனால், அதிக போட்டிகளில் அவர் விளையாடவுமில்லை. அதனால், அவரைத் தேர்வு செய்யமுடியாது. அதேபோல், ரயான் ஹாரிஸ், ஒரு 16 விக்கெட் சீசனுக்குப் பிறகு பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால், ஆண்ட்ரூ டை… ஒரே சீசனில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனால், கடந்த சீசனில் பெரிதாக ஏதும் செய்யவில்லை. மேக்ஸ்வெல்லைத் தேர்வு செய்ததைப்போல், ஒற்றை சீசனுக்காக இவரைத் தேர்வு செய்யலாமா? கடினமான சூழல். அதனால், இவரையும் சங்கா அண்ட் கோவுடன் வெய்ட்டிங் லிஸ்டில் வைக்கலாம்.

இந்திய பௌலர்களைக் கருதினால், பியூஷ் சாவ்லாவைத் தவிர்க்க முடியாது. 6 சீசன்களில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அதேபோல் ஆடிய 3 சீசன்களிலும் 15+ விக்கெட்டுகள் வீழ்த்திய இர்ஃபான் பதானும் இந்த அணியின் தவிர்க்க முடியாத வீரராகிறார். சந்தீப் ஷர்மா… கிங்ஸ் லெவன் கண்டெடுத்த மிகமுக்கிய டொமஸ்டிக் வீரர். அந்த அணிக்காக 71 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அவரையும் நிச்சயம் தவிர்க்க முடியாது. அதனால், இந்த 3 இந்திய வீரர்களும் கட்டாயம் ஆல்டைம் லெவனில் இடம்பெற வேண்டும்.

Sandeep Sharma

இன்னும் இரண்டு இடங்கள் இருக்கிறது. ஓவர்சீஸ் பௌலர் ஒருவரைத் தேர்வு செய்தால், இந்திய பேட்ஸ்மேனைத் தேர்வு செய்ய வேண்டும். கிங்ஸ் லெவன் அணியில் நல்ல தாக்கம் ஏற்படுத்திய இந்திய பேட்ஸ்மேனைக் கண்டுபிடிப்பது கடினம். மந்தீப் சிங் மட்டுமே ஓரளவு அருகில் வருவார். மனன் வோரா, வால்தாடி போன்றவர்கள் ஒரேயொரு நல்ல சீசனோடு காணாமல் போய்விட்டார்கள். சேவாக்கும் 2014 சீசனில் மட்டும்தான் சிறப்பாக ஆடினார். அதனால், ஓவர்சீஸ் பேட்ஸ்மேன், இந்திய பௌலர் காம்பினேஷனை டிக் செய்வோம். கடந்த சீசனில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய முகமது ஷமிக்கு இடம் தரலாம். ஒரு சீசன்தான் அந்த அணிக்காக ஆடியிருக்கிறாரென்றாலும், இனி வரும் சீசன்களில் விக்கெட் வேட்டை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

அந்தக் கடைசி ஓர் இடம் யாருக்கு? 4 பௌலர்கள் + அக்சர் + யுவி இருப்பதால் அசார் மஹ்மூத் இந்த அணியில் இடம்பெறுவதற்கான தேவை இல்லாமல் போகிறது. சங்கக்காராவின் 30 என்ற சராசரியைவிட கெய்லின் 40 சராசரி பல இடங்கள் முன்னால் இருப்பதால், பிக் பாஸுக்கு ஓப்பனர் ஸ்லாட்டை வழங்கிவிடலாம்! கெய்ல், ராகுல் ஓப்பனிங் காம்பினேஷன் நிச்சயம் அந்த அணிக்கு வொர்க் அவுட் ஆகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.