தஞ்சாவூரைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் ஒருவன், தான் ஓராண்டாகச் சேமித்த வைத்த பணம் 1,500 ரூபாயை கொரோனா தடுப்பு நிதிக்காக கலெக்டரிடம் வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மருத்துகல்லுாரி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், தம்பதியின் 5 வயது மகன் சாய்க்ரிஷ். தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வருகிறார் சாய்க்ரிஷ். பெற்றோர்,உறவினர் தனக்குக் கொடுத்த பணத்தை, ஓராண்டுக்கு மேலாக உண்டியலில் சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காகப் பலரும் நிவாரண நிதி வழங்கியதை அறிந்த சிறுவன்தான் சேமித்த பணத்தையும் கொரோனா தடுப்பு பணிக்குக் கொடுக்க நினைத்து, அதைத் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தன் மகன் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த பெற்றோர் உடனே ஓகே சொல்லியதுடன் இதனை தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவிடம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுவன் சாய்க்ரிஷ் ஓராண்டாக தான் உண்டியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து பெற்றோரிடம் கொடுத்தார். அதில் மொத்தம் ரூ.1,500 இருந்தது.
Also Read: `அவங்களுக்கு உணவு கொடுக்க முடியலைங்கிற வருத்தம் இருந்துச்சு!’ – பிறந்தநாளில் நெகிழவைத்த சிறுவன்
இந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வு செய்வதற்காக கலெக்டர் வருவதை அறிந்த பெற்றோர் தங்கள் மகன் மற்றும் அவன் சேமித்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கலெக்டர் கோவிந்தராவைச் சந்திக்க வந்தனர். அப்போது சிறுவன் சாய்க்ரிஷ், `வணக்கம் சார்.இது நான் சேமித்து வைத்த பணம் இதைக் கொரோனா தடுப்புப் பணிக்குப் பயன்படுத்திக்கங்க சார்’ எனக் கொடுக்க ஆச்சர்யமுடன் அந்தச் சிறுவனிடமிருந்து 1,500 ரூபாயைப் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ் சிறுவனை வாழ்த்தி பாராட்டியதுடன் குழந்தைகளுக்குக் கொரோனா தொற்று அபாயம் உள்ளது. இதனால் பெற்றோர் இது போல் குழந்தைகளை வெளியில் அழைத்துச்சென்று வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இந்தச் செயல் மருத்துவக்கல்லூரி வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.