அன்புள்ள பட்டுக்குட்டிக்கு,

மாமா உனக்காக ஆஸ்பத்திரி வாசலில் காத்துக் கொண்டிருக்கிறேன் விடியற்காலையில் இருந்தே… அன்று காத்துக்கொண்டிருந்தது போலவே!

இல்லை… அன்றைக்கு நான் பொழுது விடியும்போது மேரி மாதா முன்னால் மண்டியிட்டு நின்றுகொண்டிருந்தேன். அன்னையே… ஏழாண்டுக்காலம் காத்திருந்த என் தங்கையை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறாய்… அவள் பட்ட துயரங்களை எல்லாம் இன்றோடு போக்கிவிட்டாய்… இனியாவது அவளுக்கு அவள் கணவன் வீட்டில் சந்தோஷம் உண்டாகட்டும்… நன்றி மரியன்னையே… உனக்கு ஸ்தோத்திரம்…’ என் மனம் இடைவிடாது அரற்றிக் கொண்டே இருந்தது.

திருமணம் ஆன மறுவருடம் முதலே, என்னம்மா… சும்மாதான் இருக்கியா… ஒண்ணும் விசேஷமில்லையா..? னு முகத்துக்கு எதிராகவும், கிரேஸ் குடும்பம் விக்டரோட முடிஞ்சிரும் போல இருக்கே… அவனே கிரேஸுக்கு ஒத்தைப் புள்ளை… இப்ப அவனுக்கு புள்ள பொறக்குமானு தெரியலையே என்று முதுகுக்குப் பின்னாலும் கேள்விகள் உன் அம்மாவைத் துரத்திக்கிட்டே இருந்துச்சு. அதற்கு முற்றுப் புள்ளியாக நீ பிறந்தாய்.

Representational Image

பிறந்தாய்னு ஒற்றை வார்த்தையிலே சொல்லிட்டாலும் உன் அம்மாவும் அப்பாவும் அதற்காக செய்த தவம் ரொம்பப் பெருசு. மூன்று வருடங்கள் காத்திருந்த பிறகு மருத்துவத்தை தேடிப் போனாங்க. ரெண்டு பேர்கிட்டேயும் குறை எதுவும் இல்லை… ஆனாலும், நாம வெயிட் பண்ணாம மருந்து உதவியோட சீக்கிரமா பெத்துக்கலாம்னு முடிவு பண்ணினாங்க… உங்கப்பாவுக்குச் சீக்கிரம் வம்சம் தழைக்கணும்னு ஆசை… உங்கம்மாவுக்கு ஊர் வாயிலே விழாம இருக்கணும்னு நினைப்பு… எனக்கு மட்டும்தான் நான் சைக்கிள் சொல்லிக் குடுக்க, நீச்சல் கத்துக் குடுக்க, மட்டியை வெச்சு மாமனைக் கடிக்க ஒரு மருமகப் பிள்ளை வேணும்னு ஆசையா இருந்தேன். அதிலேயும் என் தங்கச்சி மாதிரி பொம்பளப் புள்ள வேணும்னு ஆசைப்பட்டேன்.

உன்னை ரெடி பண்ணி உங்கம்மா வயித்துக்குள்ளே வெச்ச நாள்ல இருந்து ஊசி ஊசினு அவ உடம்புல ஊசி படாத இடமே இல்லை. முந்நூறு நாளும் ஊசிதான்… இத்தனை ஊசி போட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்னு கேட்டவங்ககிட்டே எம்புள்ள வந்து ஒத்தடம் போடும்… உங்களுக்கு என்னனு கேட்டா உங்கம்மா!

நீ இந்த உலகத்துக்கு வரப் போற நாள் விடியப் போகுதுனு நினைக்கறப்பவே எனக்கு உறங்கப் புடிக்கலை. ஆஸ்பத்திரியிலே இருந்த உங்கம்மாவுக்கு பிரஷர் ஏறிடக் கூடாதுனு மருந்து குடுத்து தூங்க வெச்சுட்டாங்க… உங்கப்பா… டக்குனு ரெண்டு பெக் போட்டுட்டு தூங்கிட்டாரு… நான் மட்டும் விடிய விடிய முழிச்சுகிட்டே இருந்தேன்…

Representational Image

அடுத்தநாள் பொழுது எல்லாருக்கும் ஆஸ்பத்திரியில் விடிஞ்சது… எனக்கு மட்டும் நம்ம மாதா கோயில்ல விடிஞ்சுது… பூசை வைக்க வந்த ஆரோக்கியசாமி ஃபாதர் கோயிலே சுத்தமா இருக்கிறதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனாரு… நான் மாமா ஆகப் போறேன் ஃபாதர்… காலைல டெலிவரி… புள்ள பொறக்கறப்ப நான் மாதா பாதத்துல இருக்கணும்னு இங்கே வந்துட்டேன்னு சொன்னேன்… நீ எப்பவுமே மாதா பாதத்துல இல்ல… மடியிலயே இருக்கற அருள் பெற்ற குழந்தைதான்… இப்ப ஆஸ்பத்திரிக்குப் போ… பொறக்கற புள்ளைய கையிலே வாங்க வேணாமா… போனு துரத்தி விட்டார். நான் ஓடி வந்து ஆஸ்பத்திரி வாசல்ல நின்னுகிட்டிருந்தேன்… மனசுக்குள்ளே ஆண்டவா… இறைவனேனு வேண்டிகிட்டே இருந்தேன்…

சொன்ன நேரம் தாண்டிப் போச்சு… ஆபரேசன் தியேட்டர் வாசக்கதவையே பார்த்துகிட்டு நின்னேன். வெள்ளை உடுப்பு போட்ருந்ததால மட்டுமில்ல… உன்னைத் தூக்கிட்டு வந்து என் கையிலே தந்ததாலயும் நர்ஸ் அம்மா தேவ தூதரா இருந்துச்சு. ‘அய்யா… பொம்பளப் புள்ள பொறந்திருக்குனு கண்ணுல காட்டுனாங்க. கையை நீட்டிக் குடுங்கனு கேட்டேன்… இல்ல… புள்ள கொஞ்சம் நோஞ்சானா இருக்கு… இன்பெக்‌ஷன் ஆகிரும்… அப்புறமா கையிலே தூக்கிப் பார்க்கலாம்னு உன்னைக் கூட்டிட்டு உள்ளே போயிருச்சு… கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையேனு வருத்தமா இருந்துச்சு.

அப்புறம் முழுசா ஒருமாசம் ஆகிருச்சு, உன்னைத் தொட்டு தூக்கறதுக்கு. பால் குடிக்க மட்டும் உங்கம்மா கிட்ட கொண்டாந்து குடுத்துட்டு, குடிச்சதும் கொண்டு போய் தனியா வெதுவெதுனு இருக்கற இடத்துல படுக்க வெச்சிருவாங்க. மூணு வாரத்துக்குப் பிறகுதான் உங்கம்மா சூட்டையே உனக்குக் குடுத்தாங்க… அவ பக்கத்துல படுத்திருந்த உன்னைய பார்க்கவே விட்டாங்க.

Representational Image

முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுகிட்டு நீ படுத்தே கிடப்ப… டாக்டர் வீட்டுக்குப் போலாம்னு சொன்ன அன்னிக்கு கார்ல ரோஜாப் பூ எல்லாம் ஒட்டி அலங்காரம் பண்ணி எடுத்துட்டு வந்தேன். என் தேவதை ஏறப் போற வண்டி… சும்மா தேர் மாதிரி இருக்க வேண்டாமா..?

கார்ல உங்கப்பா முன்சீட்ல ஏறிக்கிட்டாரு… உங்கம்மா பக்கத்துல நான் இருந்தேன். வீட்டுல வந்து இறங்கறப்ப பார்த்தா என் விரலை நீ இறுக்கமா புடிச்சுகிட்டிருந்தே… எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா..? உங்கம்மா கூட என்னடி… இப்பவே மாமன் கையப் புடிச்சுகிட்டியா… உட்றாத… உன்னைக் கரை சேர்க்கிற மட்டும் அவன் கையை உட்றாதனு சொல்லிட்டேதான் இறங்குனா!

அன்னிக்கு புடிச்ச கை… அப்புறம் எங்கூடவேதான் இருப்பே… தாயோட கதபதப்பை விட இந்த மாமனோட நெஞ்சுக் கூடு தந்த இதம்தான் உனக்கு அதிகம் கிடைச்சிருக்கும். ஆனா, நாம ரெண்டுபேரும் பாதி நேரம் ஆஸ்பத்திரிலதான் இருப்போம். ஊருக்குள்ளே முதல் தூறல் போடுறதுக்கு முன்னே உனக்கு முதல் தும்மல் விழுந்துரும். வெயில் காலம் தொடங்கறதை உன் வேர்வைதான் ஊருக்கே சொல்லும். டாக்டர்கூட ‘ரமணன் ரிட்டயர்ட் ஆகிட்டாருல்ல… பேசாம உன் மருமகளை வானிலை ஆராய்ச்சி மையத்துல வேலைக்குச் சேர்த்துடேன்… கரெக்டா சொல்றா க்ளைமேட்டை… ரொம்ப அபூர்வமான பொண்ணுப்பா’னு கேலி பண்ணுவாரு.

Representational Image

ஆனா, நீ நெஜமாகவே அபூர்வமான பொண்ணு. உங்கப்பா அவரோட அம்மா பேரான கிரேஸியைத்தான் உனக்கு வைக்கணும்னு ஆசைப்பட்டாரு… உங்கம்மாவுக்கு அவளோட அம்மா பேரு… எங்கம்மாதான்… சகாய மேரினு வைக்கணும்னு ஆசை. ஆனா, தேவதை மாதிரி இருக்கற உனக்கு எதுக்குத் தனியான பேரு… வேணும்னா ஏஞ்சல்னு வெச்சுக்கோங்கனு சொல்லிட்டேன். இந்தக் கறுப்பா இருக்கறவனுக்கு வெள்ளைச்சாமினு பேர் வைப்பாங்க இல்ல… அப்படி இல்லாம உன் பேரைச் சொன்னதுமே பொண்ணுக்கு ஏத்த பேருனு எல்லாருமே சொல்லுவாங்க!

எல்லாருமேனு நான் சொல்றது உனக்கு ஞானஸ்தானம் பண்ணுன ஃபாதர்ல இருந்து இப்ப… இந்த ஆஸ்பத்திரில உன்னைச் சேர்த்தப்ப, பேர் சொல்லுங்கனு கேட்ட ரிசப்ஷனிஸ்ட் வரைக்கும் எல்லாருமே!

எனக்கு என் பேரே மறந்து போச்சு தெரியுமா பட்டுக்குட்டி… பாதி நாள் ஏஞ்சல் அட்டெண்டர் யாருங்கனு குரல் கேட்டா தலை தெறிக்க ஓடுற அளவுக்கு என் பேரே ஏஞ்சல் அட்டெண்டர் ஆகிடுச்சு. பட்டுக்குட்டி… நாளைக்கு நீ படிச்சு கலெக்டர் ஆகிட்டன்னா என்னை உன் டவாலியா வேலைக்கு வெச்சுக்கோ… ஏன்னா, நான் எப்பவும் ஏஞ்சல் அட்டெண்டராகத்தான் இருக்கணும்னு சொல்லும்போது உங்கம்மா, ஏண்ணா… உனக்கு உன் குடும்பம். உன் புள்ளைனு வாழ்க்கை வேண்டாமானு கேட்பா! நீ என் கையை இறுக்கிப் புடிச்சுக்குவே… நான் சிரிச்சுக்கிடுவேன்.

Representational Image

நீ யூகேஜி படிக்கிறப்ப உனக்காக லஞ்ச் எடுத்துகிட்டு வந்து ஸ்கூல்ல வெயிட் பண்ணுன ஒருநாள் இன்னமும் ஞாபகம் இருக்கு… நாங்க நாலைஞ்சு பேர் ஆபீஸ் ரூம் பக்கமா நின்னுகிட்டிருந்தோம்… அப்ப வேகமா ஓடி வந்த ஒரு ஆயா, ‘ஏஞ்சல் அட்டெண்டர் இருக்கீங்களா?னு கேட்டாங்க. என்னாச்சும்மானு ரெண்டு அடி முன்னே போனேன். கையிலே உனக்குப் புடிச்ச கறிக் குழம்பு ஊத்தி பிசைஞ்ச சாதம் இருந்துச்சு. சூடு ஆறிடக் கூடாதுனு ஹாட் பாக்ஸ்ல போட்டு வெச்சிருந்தேன். அதை ஓரமா வெச்சுட்டு உடனே வாங்கனு கூப்டாங்க. ஓடினேன்.

உன்னை க்ளாஸ் ரூம் பெஞ்சில் படுக்க வெச்சிருந்தாங்க… உனக்கு மூச்சுத் திணறிகிட்டு இருந்துச்சு. பதற்றத்துல கிளாஸ் மிஸ் விசிறிவிட்டுக்கிட்டு இருந்தாங்க… லஞ்ச் பிரேக் விடுற நேரம்… ஏஞ்சல் திடீர்னு சரிஞ்சுட்டா… தூக்கினா உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுது… மூச்சு வாங்குது… இதுக்கு முன்னே இப்படி வந்திருக்கா..?னு மிஸ் கேட்டாங்க. நான் பதறிப் போய் உன் கையை எடுத்து என் கைக்குள் பொதிஞ்சுகிட்டு பட்டும்மா… மாமா வந்துட்டேண்டா… உனக்கு ஒண்ணுமில்லைனு சொல்லும்போதே அழுதுட்டேன். ஆனா, நீ சிரிச்சே… அத்தனை அவஸ்தையிலேயும் உன் மாமனைப் பார்த்து நீ சிரிச்சே!

அவங்கம்மாகிட்டே ஒரு ஆள் அனுப்பி தகவல் சொல்லிடுங்க… நாங்க ஆஸ்பத்திரிக்குப் போறோம்னு சொல்லிட்டு உன்னைத் தூக்கிட்டு ஓடினேன். அன்னிக்குதான் டாக்டர் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாரு. உங்க ஏஞ்சல்… உள்ளுறுப்புகள் எல்லாம் சரியா முழுமையா வளர்ச்சி அடையாத குழந்தையா இருக்கா… அதனால், அவளால் வெளிச் சூழல்களை எல்லாரையும் போல எதிர்கொள்ள முடியாதுனு சொன்னாரு. ஏற்கெனவே ஊருக்கு முன்னே சளி பிடிக்கும்… ஆளுக்கு முன்னே காய்ச்சல் வரும்னு சொன்ன மனுஷன் தானே… இதுவும் அதுமாதிரிதான்னு நினைச்சதால அவர் சொன்னப்ப எனக்குப் பெரிசா வருத்தம் வரலை.

Representational Image

இந்த உலகம் ஏஞ்சலுக்குப் பொருத்தமா இல்லைன்னா என்ன… என் ஏஞ்சலுக்காக நான் ஒரு உலகத்தை உருவாக்குவேன்னு வீம்பாச் சொல்லிட்டு வந்தேன். அன்னிக்கோட பள்ளிக்கூடம் கட் ஆகிருச்சு… வீட்டுல ஒரு ரூம்… அதிலே ஏசி போட்டேன். உனக்காக நான் ஒண்ணாங்கிளாஸ் புக்ஸை எல்லாம் படிச்சேன்… நானே ஆசிரியரா மாறுதனால அவளுக்குப் பெரிய சந்தோஷம். பின்னே… இன்னிக்குப் படிச்சது போதும்னு சொன்னா, சரினு கூட உட்கார்ந்து விளையாடுற வாத்தியார் யாருக்குக் கிடைப்பாங்க! என் ஏஞ்சலோட சிரிப்புதான் எனக்கு முக்கியம். அதனால, குடும்பமே வாத்தியார்களா இருக்கற எங்க குடும்பத்துல அந்த வேலைக்குப் போயிடக் கூடாதுனு வைராக்கியமா இருந்த என்னையே வாத்தியார் ஆக்கிட்டே நீ!

வீட்டுல இருந்தாலும் உற்சாகமாகத்தான் இருந்தே… ஆனாலும் என் ஏஞ்சலா நீ இல்ல… மாசத்துல பாதி நாள் ஆஸ்பத்திரியில் கழியத் தொடங்குச்சு. ஒண்ணாங்கிளாஸ் முடிச்சு ரெண்டாங்கிளாஸ் வர்றப்ப, ஆஸ்பத்திரியில் வெச்சு பாடம் நடத்துற அளவுக்கு அதிக நாள்கள் அங்கே இருக்க ஆரம்பிச்ச… ஒத்தைப் பிள்ளை இப்படி சொத்தைப் புள்ளையா இருக்கேன்னு உங்கப்பாவுக்கும் உங்க ஆச்சிக்கும் கவலை. என்னப்பா… புள்ளையக் கூட்டிட்டு ஒரு கல்யாணம் காட்சினு போனோம்… நல்லது கெட்டதுல கலந்துகிட்டோம்னு இருக்க முடியலையே… உன்கிட்ட இவளை விட்டுட்டுப் போனாலும் ஊரெல்லாம் போற இடத்தில் இவளைப் பற்றிதான் கேட்கிறாங்க… சங்கடமா இருக்கு மாப்ளேனு வருத்தப்பட்டார் உங்கப்பா!

உங்கம்மா ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்க்கிற மாதிரி டியூஷன் எடுக்க ஆரம்பிச்சுட்டா… எனக்கு இதெல்லாம் வருத்தம் கிடையாது. ஏன்னா, உனக்கு உன் மாமன் இருக்கேன், எனக்கு என் தேவதை இருக்கே… நம்ம உலகத்துல நாம இருப்போம் சந்தோஷமானு நான் பாட்டுக்குதான் இருந்தேன்!

Representational Image

ரெண்டாங்கிளாஸ் கிருஸ்துமஸ் லீவுல… ஆமா, நாமளா நடத்துற பள்ளிகூடத்துல உனக்கு விட்ட கிருஸ்துமஸ் லீவுலதான்… உனக்குக் குளிர் தாங்காம உடம்பு தூக்கித் தூக்கி போட ஆரம்பிச்சுது… ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடியாந்தேன்… அன்னிக்குதான் மொத தடவையா உன்னை ஐசியூவுல வைக்கணும்னு என் கையிலே இருந்து பிரிச்சு கூட்டிட்டுப் போனாங்க… என்னங்க… ஐசியூவுல வைக்கிற அளவுக்கு என்ன என் புள்ளைக்குனு கேட்டப்ப… நெஞ்செல்லாம் சளி கட்டியிருக்கு… அதுனால நுரையீரல்ல வீக்கம் இருக்கு… அது போய் இதயத்தை அழுத்துதுனு என்னவெல்லாமோ சொன்னாங்க!

ஒருவாரம்… முழுசா ஏழு நாள்… உன் கைச்சூடு படாம இருந்தேன் இந்த மாமன். உடம்பெல்லாம் குழாய் மாட்டி உன்னைக் கொண்டாந்து ஆஸ்பத்திரி ரூம்ல போட்டாங்க… அப்பவும் நீ கண்ணு முழிக்கலை… உனக்கு மாட்டுன மாதிரியே ஆக்சிஜன் மாஸ்க், சலைன் டியூப் எல்லாம் எனக்கும் வாங்கி வெச்சுகிட்டேன்… நீ கண்ணு முழிக்கறப்ப நானும் அதையெல்லாம் மாட்டிக்கிட்டேன். என்னைப் பார்த்து நீ சிரிச்சே!

என்ன மாமா… ஏலியன் மாதிரி இருக்கேனு சிரிச்ச உனக்கு பதிலுக்கு என்னால சிரிக்க முடியல… ஏன்னா, என் ஏஞ்சல்… நீயும் ஏலியன் மாதிரிதான் இருந்தே… அன்னிக்கே ராத்திரி மறுபடியும் உனக்கு மூச்சுத் திணறல் வந்துருச்சு. அப்படியே ஐசியூவுக்கு அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க!

Representational Image

யூகேஜில இருந்து இந்த ரெண்டாங்கிளாஸ் வரைக்குமான உன் வாழ்க்கைய யோசிச்சுப் பார்த்தேன். அப்பா மெல்ல மெல்ல விலகிட்டாரு. அவருக்கு அவரோட வேலை… ராத்திரியான ரெண்டு ரவுண்ட் விஸ்கி… அதுலயே ரிலாக்ஸ் ஆகிடுறாரு… உங்கம்மா… பகலெல்லாம் சமைக்கிறா… வீட்டைக் கவனிக்கிறா… சாயங்காலம் ஆனா, உங்கப்பா குடிக்கிற விஸ்கியை விட கடும் போதையா ஓடி ஓடி டியூஷன் எடுக்கிறா… பணத்துக்காக இல்லை… தன்னை ஒளிச்சு வச்சுக்கறதுக்காக!

ரெண்டு பேர்… நீயும் நானும்தான்… நாம ரெண்டு பேரும்தான் சிரிச்சாலும் சேர்ந்து சிரிச்சுகிட்டு அழுதாலும் சேர்ந்து அழுதுகிட்டு ஒண்ணா அலையறோம்… இனிம் சிரிக்கிற காலம் கிடைக்குமானு தெரியலை… நடு ராத்திரியில் நீ மூச்சுத் திணறுனதைப் பார்க்கிறப்ப என் மூச்சு நின்னு போன மாதிரி இருந்துச்சு… என் ஏஞ்சலுக்கு ஏன் இவ்ளோ கஷ்டம்… டாக்டர் கூடச் சொன்னாரு… மற்ற பிள்ளைகளா இருந்தா இதைத் தாங்கிட்டிருக்க முடியாது… உன் மருமக கடும் போராளியா இருக்காப்பானு! நீ எப்படி இவ்ளோ போராளியா இருக்கேனு எனக்குத் தெரியும்… உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா இந்த மாமன் உடைஞ்சு போயிருவான்னு உனக்குத் தெரியும்… அதான், உடம்புல என்ன நோவு வந்தாலும் நீ மல்லுக் கட்டுறே…

Representational Image

உன் கஷ்டத்தைப் பார்க்கிறப்ப எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு பட்டுக்குட்டி… எனக்காக நீ கஷ்டப்படாதே… நீ விடுதலை ஆகி சந்தோஷமா போயிடு… நான் ஆறு மாசமோ ஒருவருஷமோ அழுதுட்டுக் கிடப்பேன்… பிறகு மெல்ல மெல்ல நார்மலுக்கு வந்திருவேன்… ஒரு கல்யாணம் கூட பண்ணிக்கிடுவேன்… நீயே எனக்கு மகளா கூட மறுபடியும் பொறந்து வந்துடலாம்… நாம இன்னும் ஜாலியா சந்தோஷமா இருக்கலாம்!

காலைல சர்ச்சுக்குப் போய் கர்த்தர்கிட்டே அதைத்தான் வேண்டிகிட்டேன்… என் ஏஞ்சலை சீக்கிரம் விடுதலை பண்ணி விட்ரு… இப்ப அவ சரியாகி ஐசியூவிலே இருந்து வந்தாக் கூட அவளால நார்மலா இருக்க முடியாது. என் பட்டுக்குட்டிக்கு எதுக்காக இவ்ளோ அவஸ்தை… அவளை விடுதலை பண்ணிரு ஆண்டவரேனு வேண்டிட்டு வந்துதான் நிக்கிறேன்.

டாக்டர் வர்றாரு பட்டுக்குட்டி… வந்து உங்க ஏஞ்சல் இப்ப ஸ்டேபிளா இருக்கா… டோன்ட் வொர்ரினு சொல்லிட்டுப் போறாரு பட்டுக்குட்டி..!

கர்த்தரே!

சி.முருகேஷ் பாபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.