கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பரவல் தடுப்புப் பணிகளை உலக நாடுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவிலும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதுடன், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு வருகிறது.

இயற்கை கிருமி நாசினி தெளிப்பு

அரசு மற்றும் தனியார் அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள் கிருமி நாசினி மற்றும் பாதுகாப்புக் கவசங்களையும் மக்களுக்கு வழங்கிவருகிறார்கள். நகர்ப் பகுதிகளில் அரசு சார்பாகப் பல இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கிராமப் புறங்களில் கிராம இளைஞர்கள் தாங்களாக முன்வந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு ஊராட்சியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் தங்கள் கிராமக் கோயில் திருவிழாவில் தெளிக்கும் பூவரசன் பூ உடன் மஞ்சள் மற்றும் வேப்பிலை சாறு கலந்து கிருமி நாசினி தெளித்துள்ளனர். இதுகுறித்து மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்த வேலு நம்மிடம், “ஆண்டுதோறும் பங்குனி மாதம் எங்கள் கிராமத்தில் உள்ள முத்துமாரி அம்மனுக்குக் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

பூவரசன் பூ கிருமி நாசினி

இந்தாண்டு நாடு முழுதும் கொரோனோ பாதிப்பு ஊரடங்கு உத்தரவால் திருவிழா நடைபெறவில்லை. ஆனால், ஆண்டு தோறும் பூவரசன் பூ இலையைக் காடுமேடுகளில் பிடிங்கிவந்து ஒரு நாள் முழுவதும் ஊர வைத்து மஞ்சள் தண்ணி ஊற்றி திருவிழாவில் தெளிப்போம். இந்தப் பூவில் உள்ள மஞ்சள் நிறம் நீரில் இறங்கி இருக்கும். அதனால் மஞ்சத் தண்ணீர்போல இருக்கும்.

அது வாசனையாகவும் இருக்கும். இதைத் தெளிப்பதால் பல்வேறு வகையான தோல்நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமடையும் என்பது எங்கள் மூதாதையரின் வாக்கு. இந்த முறையைப் பயன்படுத்தி இதனுடன் மஞ்சள் மற்றும் வேப்பிலை சாறைக் கலந்து மேலவண்ணாரிருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட கீழவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி ஆகிய 3 கிராமங்களில் கிருமி நாசினியைத் தெளித்தோம்

பூவரசம் பூ

இதனால் பல்வேறு நோய்த் தொற்றுக்கள் வராமல் பாதுகாக்க முடியும்” என்றார்.

ஊராட்சிமன்றத் தலைவர் ஜோதி பித்திரைச் செல்வம், “கொரோனோ பாதிப்பிற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இந்நிலையில் எங்கள் மேலவண்ணாரிருப்பு ஊராட்சி இளைஞர்கள் எங்கள் பாரம்பர்ய விளையாட்டான பூவரசன் பூ மஞ்சள் தெளிப்பு நிகழ்வை, தற்போது நோய்த்தொற்று கிருமி நாசினியாகப் பயன்படுத்துகின்றனர்.

`பூவுக்கெல்லாம் அரசன் பூவரசன்’ என்று புகழப்படுகிறது. இந்த மரத்தில் உள்ள பூ முதல் வேர் வரை அத்துணையும் மருத்துவக் குணம் உள்ளது என்பார்கள். அவை சித்த மருத்துவக் குறிப்புகளிலும் உள்ளது. இந்தாண்டு முத்துமாரி அம்மன் கோயில் திருவிழா நடைபெறவில்லை என்றாலும் அதன் முக்கிய நிகழ்வான இந்த மஞ்சள் தெளிப்பை இளைஞர்கள் முன்னெடுத்துச் செய்துள்ளனர்.

பூவரசன் பூ கிருமி நாசினி

இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும், சமூக இடைவெளி உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கி இளைஞர்களுக்கு ஆதரவு கொடுத்தேன். அதை இளைஞர்கள் தொடர்ந்து முறையாகச் செய்துவருகின்றனர்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.