கொரோனா தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 21 நாள் ஊரடங்குக் காரணமாக, ஆரம்பத்தில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த நம் வீட்டு குழந்தைகளின் காதுகளிலும் கொரோனா செய்திகள் சென்று சேர்ந்துகொண்டிருக்கின்றன. அதுபற்றி சக நண்பர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதனால், அவர்களுக்குள் எதிர்மறை எண்ணங்கள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தாக்குதல் மனித குலத்துக்குப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்னொரு பக்கம் இயற்கையில் நடந்துவரும் மாற்றங்களைச் சொல்லி, குழந்தைகளுக்குள் நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டும். அந்த வகையில், ஒரு தந்தை, தன் மகன் மற்றும் மகளிடம் சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டி உரையாடியதைப் பார்ப்போமா…

Representational Image

நிறைவுடன் கிடைக்கும் நீர்

“போன வருஷம் நாம தண்ணீர் பிரச்னையால ரொம்ப கஷ்டப்பட்டோம் இல்லையா?”

“ஆமாம்ப்பா… லாரி எப்போ வரும்னு காத்திருந்து, வரிசையில் நின்னு பிடிச்சு, குடம் குடமா தூக்கிட்டு வந்ததை மறக்க முடியுமா?”

“அந்த நேரத்துல நாம ஒரு ஷாப்பிங் மால் போயிருந்தோம். அங்கே பேசிக்கிட்ட ஒரு விஷயம் ஞாபகம் இருக்கா வர்ஷா?”

“இருக்குப்பா… அங்கே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு வாஷ் பண்ணிக்கிட்டப்போ, குழாயைத் திறந்ததும் தண்ணீர் அவ்வளவு வேகமா கொட்டிச்சு. நம்ம வீட்டுக் குழாயில காத்துதான் வருது. இங்கே அருவியா கொட்டுது. நிறைய பேர் வேஸ்ட் பண்றாங்க’னு சொன்னேன்.”

“பெரிய இடங்களில் நிலத்தின் ஆழத்துக்கு மோட்டார் போட்டு தண்ணீரை உறிஞ்சு எடுத்து இப்படி ஒரு பக்கம் வீணாக்கறதாலதான், நிலத்தடி நீர் குறைஞ்சு நமக்குக் கிடைக்காமல் போய்ட்டிருக்குன்னு பேசினோம். இப்போ, ஊரடங்கு காரணமா பெரிய பெரிய ஷாப்பிங் மால், கடைகள், ஹோட்டல் எல்லாம் மூடிவெச்சிருக்கிறதால அங்கே எல்லாம் தண்ணீர் பயன்பாடு இல்லை. இந்த நாள்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சிருக்காது. இது, நமக்கு பாசிட்டிவ்வான விஷயம். இந்த வருஷம் நமக்கு தட்டுப்பாடு இல்லாம நீர் கிடைக்கும். தொழிற்சாலைக் கழிவுகள், வேறு வகைகளில் ஆற்றுநீரை அசுத்தம் செய்யறதும் தடுக்கப்பட்டிருக்கு. இதனால், இயற்கை தன்னைப் புதுப்பிச்சுக்கிட்டு சுத்தமான நீர் கொடுக்க ஆரம்பிக்கும்.”

Representational Image

கிடைக்கும் நல்ல காற்று

“இந்த கொரோனா பிரச்னை வந்ததுக்கு அப்புறம்தான் இங்கே முக்கால்வாசி பேர் மாஸ்க் போட்டுக்கவே ஆரம்பிச்சாங்க. ஆனா, நாம டெய்லி ஸ்கூலுக்கும் ஆபீஸுக்கும் போகும்போது என்ன பண்ணுவோம் பரத்?”

“முகத்துல கர்ச்சீப் கட்டிக்கிட்டு வண்டியில் போவோம். ஏன்னா, காற்றில் அவ்வளவு மாசு ஏற்பட்டிருக்கு. ரோட்டுல நிறைய வண்டிகள் போய்ட்டே இருக்கிறதால தூசும் புகையுமா இருக்கும். அதையெல்லாம் சுவாசிக்கக் கூடாதுன்னு கர்ச்சீப் கட்டிட்டுப் போய்ட்டிருந்தோம்.”

“அதுமட்டுமா? சில மாசங்களுக்கு முன்னாடி டெல்லி, சென்னைனு முக்கியமான நகரங்களில் காற்றின் மாசுபாடு அதிகமாகி பரபரப்பா இருந்துச்சு. இப்போ, உலகம் முழுக்கவே ஊரடங்குக் காரணமாக வாகனங்களின் பயன்பாடு இல்லாமல், காற்றில் மாசு குறைஞ்சுடுச்சு. நம் ஊர்களிலும் காற்று மாசுபாடு குறைஞ்சிருக்கு. இதனால், கொரோனா பிரச்னைக்கு அப்புறம் நாம வெளியே போகும்போது நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்கப் போறோம். அது, நமக்கு நடக்கப்போகும் ஒரு பாசிட்டிவ் விஷயம்.”

குறையும் மின்சாரம்!

“ஒவ்வொரு வருஷமும் கோடைக்காலம் வந்துட்டாலே, மின்சார பற்றாக்குறை ஏற்படும். கரன்ட் கட், லோ வோல்டேஜ்னு எவ்வளவு கஷ்டப்படுவோம்னு தெரியுமில்லே.”

“அதை நினைச்சாலே திகிலாகுதே… நடுராத்திரியில் கரன்ட் கட் ஆகிடும். புழுக்கம் தாங்காமல் அவஸ்தைப்படுவோமே.”

“இதுக்குக் காரணம், பெரிய பெரிய தொழிற்சாலைகள், மால்கள், அலுவலகங்களில் அதிகமான மின்சாரம் பயன்படுத்தறதுதான். நிறைய விளக்குகள், ஏர்கன்டிஷனர்ஸ்னு தேவையில்லாத இடங்களிலும் தொடர்ந்து ஓடிட்டு இருக்கும். இயற்கை காற்றையே மறந்துவிட்டு எந்த நேரமும் ஏசியிலேயே இருந்தோம். இது உடம்புக்குக் கெடுதல் ஏற்படுத்தியதோடு புவி வெப்பத்துக்கு ஒரு காரணமாகவும் இருந்துச்சு. இப்போ எல்லாப் பெரிய இடங்களிலும் மின்சாரப் பயன்பாடு இல்லை. இதனால, நிறைய மின்சாரம் சேமிக்கப்பட்டிருக்கு. இதுவும் நமக்கு ஒரு பாசிட்டிவ் விஷயம்.”

Representational Image

“ஆமாம்ப்பா… இத்தனை நாளா ஸ்கூல் விட்டு வந்தா வீட்டுக்குள்ளேயே இருந்தோம். நம்ம வீட்டு மொட்டை மாடி பக்கமே பல நாள் போக மாட்டோம். இப்போ, 10 நாளா வீட்டுக்குள்ளேயே இருக்கோமேன்னு தினமும் சாயந்திரம் மொட்டை மாடியில் இயற்கையான காற்றை வாங்கிட்டே விளையாட ஆரம்பிச்சு இருக்கோம். இதுவே, உடம்புக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கு.”

“ஆக… இந்தக் கொரோனா தொற்று ஒரு பக்கம் உலகத்தையே அச்சுறுத்திட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் இயற்கையில் பல மாற்றங்களை உருவாக்கி, நம்முடைய பல அவசியமற்ற தேவைகளைக் குறைச்சிருக்கு. இயற்கையின் அருமையைப் புரியவெச்சிருக்கு. இந்த பாசிட்டிவ் விஷயங்களை மனசுல நினைச்சுட்டு தைரியமா இருப்போம். கொரோனா தொற்றியிலிருந்து பாதுகாத்துக்கும் அத்தனை விஷயங்களையும் பின்பற்றுவோம். பிரச்னை முடிஞ்சதும் எல்லாத்தையும் மறந்துட்டு பழையபடி இயற்கையைப் பாழாக்காமல் நடந்துப்போம்.”

இப்படி இந்த நேரத்தில் நடைமுறை விஷயங்களில் ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றங்களை உங்கள் குழந்தைகளிடம் சொல்லி, அவர்களுக்குள் பாசிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்துங்கள். இயற்கையின் அவசியத்தைப் புரிய வையுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.