சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இந்த வைரஸால் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். 75,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் உலகளவில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ்க்குப் பலியாகின்றனர். எளிதாகப் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே, கொரோனா பரவுவதைத் தடுக்க சமூக விலகல் ஒன்றே தீர்வாக இருந்து வருகிறது.

சமூக விலகலை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகப் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால், மக்கள் பலரும் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கடுமையான மற்றும் மன அழுத்தம் தரக்கூடிய இந்தச் சூழலைச் சமாளிக்கப் பலரும் வீட்டில் இருந்தபடி வேடிக்கையான விஷயங்களைச் செய்து வருகின்றனர். மேலும், கிரியேட்டிவான செயல்களிலும் சிலர் ஈடுபட்டு அவ்வபோது சமூக வலைதளங்களில் டிரெண்டாகியும் வருகின்றனர். அவ்வகையில் ரெட்டிட் இணையதளத்தில் `ஹியூமன்ஸ் பீயிங் ப்ரோஸ்’ என்ற பக்கம் வெளியிட்டுள்ள இருவரின் உரையாடல்தான் இப்போது சமூக வலைதளத்தில் வைரல்.
Also Read: `மறைத்துவிட்டார்; வழக்கம்போல் அலுவலகத்தில் பணி!’ – கொரோனா பாதித்த அரசு அதிகாரியால் அதிர்ச்சி
`ஹியூமன்ஸ் பீயிங் ப்ரோஸ்’ என்ற பக்கமானது “நான், நாள் முழுவதும் எனது மேஜையில் இருந்தபடி எனது வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறேன். என்னுடைய அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பக்கத்தில் உள்ள கட்டடத்தில் ஒரு பையன் இருக்கிறான். நாங்கள் சில நேரங்களில் ஜன்னல் பார்த்துக்கொள்வோம். நேற்று, பார்த்துக்கொண்டது போதும் என்று நினைத்தேன். சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் இந்த நேரத்தில் புதிதாக நண்பர்களை உருவாக்கலாம் என்று கருதினேன்” அவர்கள் அதைச் செய்தார்கள்! – என்ற கேப்ஷனுக்குக் கீழ் அவர்களின் உரையாடல் இடம் பெற்றிருந்தது. இதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று அனைவருக்கும் தோன்றலாம். இந்த உரையாடலுக்கென ஒரு சிறப்பு இருக்கிறது. ஒருவர் பெரிய காகிதங்களில் தனது கேள்விகளை எழுதி தனது வீட்டின் ஜன்னலில் நின்றபடி அதைக் காண்பிப்பதும். மற்றொருவர் அதே கேள்விக்குப் பதிலை எழுதி அவரது வீட்டின் ஜன்னல் வழியாகக் காண்பிப்பதுமாக இந்த உரையாடல் சென்றுள்ளது.

“நண்பர்களாக இருக்கலாமா?” என்று ஒருவர் கேட்க, மற்றொருவர், “நிச்சயமாக, நீங்கள்?” என்று அதற்கு பதில் எழுதிக் காட்டுகிறார். தங்களின் பெயர்களைக்கூறி இருவரும் அறிமுகம் ஆகிக்கொள்கிறார்கள். “உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி! நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று அந்த உரையாடல் தொடர்கிறது. இதைப் புகைப்படங்களாகவும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இதனை ரெட்டிட் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வழியாக உரையாடும் இந்தக் காலத்தில் இத்தகைய உயிரோட்டம் உள்ள மற்றும் அழகான உரையாடல் ஆயிரக்கணக்கானவர்களைக் கவர்ந்துள்ளது.
“பழைய காலத்திற்குச் சென்றது போல ஒரு உணர்வு. தூரத்தில் இருந்தபடியும் நண்பர்களை உருவாக்க முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இத்தகைய சூழலில் ஒரு மனிதருக்கு உரையாடல்தான் தேவைப்படுகிறது, எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது” போன்ற கமென்டுகளையும் “இவ்வளவு நாள் அருகிலிருந்தும் பார்த்துக்கொள்ளவில்லையா?” போன்ற வேடிக்கையான கமென்டுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Also Read: `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ – `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்