தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 149 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. 2வது இடத்தில் கோயம்புத்தூர் உள்ளது. கோயம்புத்தூரில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதனால் சமூகப் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள், தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 43 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வீடு வீடாக ஊழியர்கள் கொரோனா கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தச் சூழலில் சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் போட்டோகிராபர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர், வடபழனியில் ஸ்டூடியோ வைத்துள்ளார். கடந்த 2 -ந் தேதி உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
Also Read: `9.25-க்கு அட்மிட்; 11.45-க்கு மரணம்… இறந்தபிறகு கொரோனா உறுதி’- அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

இதுகுறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது “சென்னை மேற்கு மாம்பலத்தில் பணியாற்றிய டாக்டர் ஒருவருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. அவருடன் தொடர்பிலிருந்த 35 பேர் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட அரசு டாக்டர், சென்னை வானகரத்தில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையின் இயக்குநரான நரம்பியல் துறை நிபுணரான ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களின் டிராவல் ஹிஸ்ட்ரிகளைக் கண்டறிந்து டாக்டர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் சென்னை போட்டோகிராபருக்கு எப்படி கொரோனா வந்தது என்று அவரின் டிராவல் ஹிஸ்ட்ரியை ஆய்வு செய்துவருகிறோம். இவரின் கடையும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. அதனால் போட்டோகிராபருக்கு யார் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டது என்று விசாரித்துவருகிறோம். தமிழகத்தில் நேற்று மட்டும் 50 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. இன்று 69 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது” என்றனர்.

சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், “தமிழகத்தில் மேலும் 69 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாதிப்படைந்த 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621- லிருந்து 690ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது” என்றார்.