சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சித்தரகோயில் மலைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் இருக்கின்றன. இந்தக் குரங்குகள் கோயிலுக்கு வரும் பொதுமக்கள் கொடுக்கும் உணவுப் பொருள்கள் வாங்கிச் சாப்பிடும். ஊரடங்கு உத்தரவையடுத்து பொதுமக்கள் கோயிலுக்கு வராததால் குரங்குகள் உணவின்றி பசியால் தவித்து வந்தன. இந்தக் குரங்குகளின் பசியைப் போக்க நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பினர் களத்தில் இறங்கி குரங்குகளின் பசியைப் போக்கி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து குரங்குகளுக்கு உணவு வழங்கிவரும் நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பின் உறுப்பினரும், டென்னிஸ் வீரருமான சித்தேஸ்வரன், “எங்களுடைய அமைப்பு தமிழகத்தில் 8 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. திருமண மண்டபங்களிலும், விசேஷ நேரத்தில் வீடுகளில் மீதியாகும் உணவுப் பொருள்களையும் சேகரித்து பசியால் வாடும் சாலையோர வாசிகளுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்போம்.
உணவுப் பொருள்கள் வீணாகக் கூடாது என்பதே எங்களுடைய நோக்கம். நாங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தப் பணிகளைச் செய்து வருகிறோம். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் சாலையோரவாசிகள், ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புலம்பெயர்ந்த அமைப்புசாரா கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல கோயில்களிலும், மலைப்பாதைகளில் வாழக்கூடிய குரங்குகளும் கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கி உதவிகள் செய்ய பல தன்னார்வலர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள். அவர்களோடு எங்க அமைப்பும் களப்பணியாற்றி வருகிறது.
இதனால் சாலையோர வாசிகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கிறது. ஆனால், மனிதர்களை நம்பி வாழும் தெரு நாய்களும், குரங்குகளும் உணவுகள் இன்றி தவித்து வருகின்றன. அதனால் அவற்றுக்கு உணவுகள் வழங்க முடிவு செய்தோம். சித்தரகோயில் மலைப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கின்றன. அந்தக் குரங்குகளுக்கு உணவு வழங்க என்னுடைய தலைமையில் 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

நாங்கள் சித்தரகோயிலுக்குச் சென்று பார்த்தபோது மரங்கள் காய்ந்து கிடந்தன. குரங்குகள் குடிப்பதற்கு கூடத் தண்ணீர் இல்லை. பொதுமக்கள் யாரும் கோயிலுக்கு வராததால் உணவுகள் இன்றி குரங்குகள் பசியால் அலைந்து திரிந்து மெலிந்து இருந்தன. அதையடுத்து தினந்தோறும் தர்பூசணி, வாழைப்பழம், அரிசி, பிஸ்கட், வேகவைத்த உருளைக் கிழங்கு, தக்காளி, தயிர்ச் சாதம் மற்றும் 4 கேன் குடிநீர் கொடுக்கிறோம். குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிட்டு குஷியாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாளைக்குக் குரங்குகளுக்கு உணவுகள் வழங்க இரண்டாயிரத்துக்கு மேல் செலவு ஆகிறது. மனிதநேயம் உடைய பலர் உதவிகள் செய்கிறார்கள். அவர்களின் உதவியால் தொடர்ந்து குரங்குகளுக்கு உணவுகளை வழங்கி வருகிறோம்” என்றார்.