கொரோனா வருவதற்கு முன்பே பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வந்த துறை, தொலைத்தொடர்புத் துறை. உச்ச நீதிமன்றத்தின் AGR பங்கீட்டுத் தொகை தொடர்பான தீர்ப்பு அரசுக்குச் சாதகமாக வந்ததால், பெரும் தொகையை அரசுக்கு கட்டவேண்டிய சூழலில் சிக்கித் தவித்தன டெலிகாம் நிறுவனங்கள். இந்த AGR வழக்கு மற்றும் அதனால் டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள, கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.

Also Read: `இந்த நாட்டில் சட்டம் என ஒன்று இருக்கிறதா?’ – AGR விவகாரத்தில் கொந்தளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி

இப்படி, ஏற்கெனவே பல சிக்கல்களில் சிக்கித் தவித்துவரும் டெலிகாம் நிறுவனங்களுக்கு, கொரோனா மற்றுமொரு பிரச்னையைக் கொண்டுவந்துள்ளது. தற்போது, வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணிகளைச் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இணையப் பயன்பாடு மக்களிடையே எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

COAI-ன் கோரிக்கை!

இந்தியாவின் செல்லுலார் ஆப்பரேட்டிங்க் அமைப்பான COAI (Cellular Operating Authority Of India), இந்தக் காரணத்தை மேற்கோள் காட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதியுதவி வேண்டி கடிதம் எழுதியுள்ளது. இந்த செல்லுலார் ஆப்பரேட்டிங்க் ஆணையத்தில் பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தனியார் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. தற்போதுள்ள அசாதாரண சூழலைச் சமாளிக்க, ஸ்பெக்ட்ரம் பயன்பாடு கட்டணத்தைக் குறைத்தல், குறைந்த கடன் நிதியுதவி, சரியான வரியை விதித்தல் போன்ற உதவிகளை வேண்டி, நிதியமைச்சகத்தை நாடியுள்ளது COAI.

தொலைத்தொடர்பு சேவை

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், அதிக இணைய பயன்பாட்டைச் சமாளிக்க, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளுக்கு அதிக முதலீடு செய்துள்ளன. ஏற்கெனவே பொருளாதார மந்த நிலை நிலவுவதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், கடனைத் திரும்ப அடைத்தல், வரி கட்டுதல் ஆகியவற்றில் நிறுவனங்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது COAI. இதன் காரணமாக, நிதித்துறையிடம் சில முக்கியக் கோரிக்கைகளை வைத்துள்ளது COAI.

COAI

அவற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது, தொலைத்தொடர்புத் துறையில் இப்போது அதிக ஸ்பெக்ட்ரம் தேவைப்படும் காரணத்தால், ஸ்பெக்ட்ரம் பயன்பாடு கட்டணத்தை 3 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் எனும் கோரிக்கைதான். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணத்தையும் (License Fee) 8 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள COAI, உரிமக் கட்டணம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க செலுத்திவரும் உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் மீதான சேவை வரியிலிருந்தும் விலக்கு அளிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்பு சொன்னதுபோல இந்தியாவில் ஊரடங்கிற்குப் பிறகு இணையப் பயன்பாடு மக்களிடையே பெருமளவில் அதிகரித்துள்ளது. அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, வீடியோக்களின் ஸ்டீரிமிங் தரத்தை HD-யிலிருந்து SD-யாகத் தரம் குறைத்துள்ளன பல ஸ்ட்ரீமிங் தளங்கள். மேலும், சீல் வைக்கப்பட்ட நெட்வொர்க் டவர்கள் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதோடு, கட்டமைப்பில் ஏற்படும் நெரிசலை மறுவிநியோகம் (Redistribution) செய்யும் முறையில் சமாளித்துவருகின்றன நிறுவனங்கள்.

OTT நிறுவனங்களின் நடவடிக்கை!

Netflix

இணையப் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளதால் வீடியோக்களே பெரிய காரணமாக இருக்கின்றன. இதனால் நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் ஊரடங்கு காலத்திற்கு மட்டும் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன்படி, நெட்ஃபிளிக்ஸில் இனி வீடியோக்களை சற்றே குறைந்த தரத்தில்தான் காண முடியும். ஆனால், பிட் ரேட்டை மட்டுமே நெட்ஃபிளிக்ஸ் குறைத்துள்ளதால், பார்வையாளர்களுக்கு இது பெரிய மாறுதலாகத் தெரியாது. வாட்ஸ்அப் நிறுவனம் இணையப் பயன்பாட்டை சமாளிக்கும் வகையில் தனது ஸ்டேடஸ் வீடியோ நேரத்தை 30 விநாடியிலிருந்து 15 விநாடியாகக் குறைத்துள்ளது. யூடியூப் நிறுவனம், தனது வீடியோக்களை ஆட்டோ மோடில் 1080p-யிலிருந்து 480-p தரத்திற்கு குறைத்து வழங்குகிறது. இந்த மாற்றங்களால் அதிக அளவில் வீடியோக்கள் பார்க்கப்பட்டாலும் இணையச் சேவையைத் தொடர்ந்து மக்களுக்கு அளிப்பதில் எந்தப் பிரச்னையும் டெலிகாம் நிறுவனங்களுக்கு இருக்காது எனத் தெரிவித்திருக்கின்றன இந்த சமூக வலைதள மற்றும் ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள்.

Also Read: குறைக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேடஸ் நேரம்… காரணம் என்ன தெரியுமா?

30% அதிகரித்த டேட்டா ட்ராஃபிக்

ராஜன் மாத்யூஸ்

தொலைத்தொடர்புத் துறையில் நிலவும் இந்தச் சூழல்குறித்து இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் சங்கத்தின் (COAI) தலைமை இயக்குநர் ராஜன் மாத்யூஸிடம் பேசினோம். “எங்கள் உறுப்பினர்களாக இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில், மொத்தமாகவே டேட்டா ட்ராஃபிக் என்பது ஊரடங்கிற்குப் பிறகு சுமார் 30% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக நாங்கள் பார்ப்பது யூடியூப், வாட்ஸ்அப் போன்ற OTT தளங்களின் பயன்பாடு அதிகரித்ததுதான். இதற்காக, தொலைத்தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து OTT நிறுவனங்களிடம் தங்களது ஸ்ட்ரீமிங் தரத்தைச் சற்றே குறைக்குமாறு வேண்டுகோள் வைத்தோம். இதனால் சுமார் 20% வரை இணையப் பயன்பாட்டை எங்களால் குறைக்க முடிந்திருக்கிறது. நகராட்சி அமைப்புகளுடனும் இதற்காகப் பேசியுள்ளோம். வாடிக்கையாளர்களும் பொறுப்பாக நெட்வொர்க் வசதிகளைப் பயன்படுத்த வேண்டும். முக்கிய வேலைநேரங்களில் தேவையில்லாத பயன்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.” என்ற வேண்டுகோளை மக்களுக்கு வைத்தார் அவர். தொடர்ந்து நெட்வொர்க்குகளைக் கண்காணித்துவருகிறோம். இந்த அதிக பயன்பாட்டை எங்களால் சமாளித்துவிட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெலிகாம் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?

Airtel Jio vodafone

பிராட்பேண்டு, மொபைல் என இரு வகையான இணையச் சேவைகளையும் வழங்கும் பிரபல தனியார் நிறுவனமான ஏர்டெல் தரப்பில் இதுகுறித்துப் பேசினோம். “நிச்சயம் இந்த மக்கள் வீடுகளில் வேலைபார்க்கத் தொடங்கியதற்குப் பிறகு இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பிராட்பேண்டு இணையப் பயன்பாடு இரண்டு மடங்கும், மொபைல் இணையப் பயன்பாடு நான்கு மடங்கும் அதிகரித்துள்ளது. மக்கள் பலரும் இப்போதே நீண்டகால வேலிடிட்டி வரும் டேட்டா பிளான்களை தேர்வுசெய்துள்ளனர். மேலும் ரூ.499, ரூ.749, ரூ.999 போன்ற பேசிக் பிளானில் இருந்த வாடிக்கையாளர்கள் பலரும் அதிக வேகம் மற்றும் டேட்டா கிடைக்கும் பிளான்களுக்கு மாறியுள்ளனர். இதனால், வொர்க் ஃப்ரம் ஹோம்மினால் நிச்சயம் இணையப் பயன்பாட்டில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. ஆனால், இந்த அழுத்தங்களைத் தாங்கும் அளவுக்கு போதிய நெட்வொர்க் கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இருக்கின்றன” என்றார் அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர். ஜியோ தரப்பிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். பல நிறுவனங்களும் புதிய `வொர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டங்களை வழங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள ஏஜிஆர் தொகையைச் (AGR -Adjusted Gross Revenue) செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன டெலிகாம் நிறுவனங்கள். இந்த நேரத்தில் பொருளாதார மந்த நிலையால் ஏற்படும் இழப்பு மட்டும் ஊரடங்கின்போது அதிக இணையப் பயன்பாட்டைச் சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் என்று தொலைத்தொடர்புத் துறையில் மேலும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் நிதித்துறையிடமிருந்து சலுகைகள் கிடைத்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சற்றே ஆறுதலாக இருக்கும் என்பதுதான் அவற்றின் வேண்டுகோளாக இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.