மேட்டூர் அணையில் பிற தேவைகளுக்காகத் தற்போது அதிகளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடிக்குக் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன் கவலை தெரிவிக்கிறார். இது விதிமுறைகளுக்கும் மரபுக்கும் புறம்பான செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

பெ.மணியரசன்

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய பெ.மணியரசன், “மேட்டூர் அணையிலிருந்து பல மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் 4-ம் தேதியிலிருந்து 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இப்போது 102 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த ஆண்டில், அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்தக் கோடையில் இந்த அளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த பருவத்தில் மேட்டூர் அணையில் அதிகமாகத் தண்ணீர் தேக்க முடிந்த காலங்களில் மட்டுமே காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடிந்திருக்கிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என டெல்டா விவசாயிகள் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

இப்பொழுது தேங்கியுள்ள மேட்டூர் நீரை இன்றியமையாத குடிநீர்த் தேவைகளைத் தவிர, வேறு காரணங்களுக்காக அதிகமாகத் திறந்துவிட்டால், கடந்த பல ஆண்டுகள் போல் இவ்வாண்டும் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். கடந்த 2019-ம் ஆண்டு கோடைகாலத்தில், மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்கு மட்டுமன்றி மரபுரிமையற்ற சில பகுதிகளின் கோடை சாகுபடிக்காக நடைமுறை விதிகளை மீறி கடந்த மே மாதம் 6,000 கன அடி வரை தண்ணீர்த் திறக்கப்பட்டது. அதனால்தான் கடந்த ஆண்டு டெல்டாவில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போனது. இவ்வாண்டும் அந்த நிலை வரக்கூடாது.

மேட்டூர் அணை

ஆந்திராவிலிருந்து சென்னைக்குப் பெற வேண்டிய குடிநீரை முழுமையாகப் பெற தமிழ்நாடு அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும். 1,000 கன அடியாகத் திறந்துவிடப்பட்ட தண்ணீரை ஒரேடியாக ஒன்றரை மடங்கு அதிகமாக்கித் திறந்து விடுவதற்கான காரணங்களை பொதுப்பணித்துறை மக்களுக்கு விளக்க வேண்டும். தவிர்க்க முடியாத குடிநீர்த் தேவைகளுக்கு அப்பால், மரபுவழிப்பட்ட காவிரிப் பாசனத்துக்குப் புறம்பாக, புதிய சாகுபடிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை பொதுப்பணித்துறை கடைப்பிடித்து, டெல்டா உழவர்கள் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய உதவி புரிய வேண்டும்” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் திருவையாற்றைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன், “2013-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்டாவுல, வறட்சி, வெள்ளம், புயல்னு பல காரணங்களால் குறுவை சாகுபடி நடக்கலை. எங்க வாழ்வாதாரம் கைவிட்டுப் போச்சு. இந்த ஆண்டு நம்பிக்கையோடு இருந்தோம். ஆனா, இப்ப மேட்டூர்ல வேறு பயன்பாட்டுக்கு கூடுதலாகத் தண்ணீர் எடுத்தால், நீர்மட்டம் 90 அடிக்கு கீழ குறைஞ்சிப் போயி, குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகிடும். குடிநீருக்காக எடுக்குறோம்னு சொல்றது ஏற்புடையதல்ல. மே மாதம் கடும் வறட்சி நிலவினால் மட்டுமே அதுவும் அதிகட்சம் 1,000 கன அடி தண்ணீர் திறக்குறது வழக்கம்.

சுகுமாறன்

இப்ப தமிழ்நாட்டுல எங்கேயும் வறட்சி இல்லை. பருவமழை அதிகமாக பேஞ்சதுனால, நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்திருக்கு. மேட்டூர் அணையில் வேறு பயன்பாட்டுக்குத் தண்ணீர் எடுத்தால், குறுவை மட்டுமல்ல, சம்பா நெல் சாகுபடியும் கைவிட்டுப் போகும்” எனக் கவலையோடு பேசினார்.

தமிழக பொதுப்பணித்துறை காவிரி வடிநில கோட்ட பொறியாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, “கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. தண்ணிர் ரீசார்ஜ் செய்வதற்காகவே மேட்டூரில் 2,500 கன அடி தண்ணீர் திறந்தோம். இதனால் குறுவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் என விவசாயிகள் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் தமிழக அரசு எச்சரிக்கையுடனும் அக்கறையுடனும் உள்ளது. பொதுப்பணித்துறையும் கவனமாக உள்ளது” எனத் தெரிவித்தார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.