டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களுக்குச் சமைத்துக் கொடுத்த சமையல்காரர் மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம்

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த 16 பேர் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தங்கியிருந்தனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஏற்கெனவே ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. மீதமுள்ள 15 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என ரிசல்ட் வந்தது. அந்த மசூதியில் அவர்களுடன் இருந்த சுமார் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டு காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த மசூதியில் சமையல்காரர் ஒருவருக்கும், அவரின் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனி அறிவித்துள்ளார். மேலும், அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகிய 43 நபர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் 9 வார்டுகளில் 65 தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கூடுதலாக சில பகுதிகளுக்குச் சீல் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கொரோனா தொற்று உள்ள பகுதி

இதற்கிடையே, மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கிவந்த காய்கறி மார்க்கெட் வையாவூர், ஓரிக்கை பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், மளிகைக்கடைகள் தனியார்ப் பள்ளி ஒன்றில் செயல்பட்டு வருகிறது. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறுபவர்களுக்கு நூதன முறையில் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் மக்கள் வெளியில் வருவதைக் குறைத்துக்கொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் முடக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கி இருககிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.