உலகமே கொரானாவைக் கண்டு பயந்துகொண்டிருக்க, தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் எனப் பெயர் வைத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள் சத்தீஸ்கரைச் சேர்ந்த வினய் வர்மா, ப்ரீத்தி தம்பதியினர்.

“நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். வாகன நடமாட்டம் நிறுத்தப்பட்டதால், நாங்கள் இருவரும் மிகுந்த துன்பங்களுக்குப் பிறகே மருத்துவமனைக்கு வந்தோம். அதுவும் தாமதமாகத்தான்.
எங்கள் பெற்றோர்களாலும் பிரசவ நேரத்துக்கு வந்து உதவ முடியவில்லை. படாதபாடு பட்டுதான் ராய்ப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தோம்.

பல சிரமங்களுக்குப் பிறகு நல்லபடியாக என் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். எதன் காரணமாக நாங்கள் இத்தனை சிரமங்களை அனுபவித்தோமோ, அந்தப் பெயர்களையே எங்கள் குழந்தைகளுக்கு ஞாபகார்த்தமாக வைக்க முடிவு செய்தோம்” என்கிறார், குழந்தைகளின் அம்மா ப்ரீத்தி.
“பிரசவத்தின்போது உதவிய மருத்துவமனை ஊழியர்கள்கூட இந்தப் பெயர்களைப் பரிந்துரை செய்தனர். தவிர, இந்தப் பெயர்களினால் வரக்கூடிய பயம் முடிவுக்கு வர வேண்டும். எங்கள் குழந்தைகளின் பெயர்களைக் கேட்கும்போதெல்லாம் மக்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள் இல்லையா” என்கிறார் இரட்டையர்களின் அப்பா.

Also Read: `கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களில் 63 சதவிகிதத்தினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்!’ – மத்திய அரசு
“எங்கள் குடும்பப் பெரியவர்கள் குழந்தைகளின் பெயர்களை மாற்றும்படி சொல்கிறார்கள். அவர்களுக்கும் எங்கள் எண்ணத்தைப் புரிய வைக்க வேண்டும்” என்று சிரிக்கிறார்கள் கொரோனா மற்றும் கோவிட்டின் பெற்றோர்.