கொரோனா வைரஸால் மொத்த உலகமும் வீட்டுச் சிறையில் அடைபட்டுச் செய்வதறியாது திணறிவருகிறது. இது ஒருபக்கம் என்றால் வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,47,473 – ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,779 -ஆகவும் உள்ளது.

கொரோனா

கொரோனாவைத் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக அளவில் உள்ள பல விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வைரஸைத் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் சோதனை செய்வதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, மருந்தை உறுதி செய்து மனிதர்களுக்குக் கிடைக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு பிரெஞ்சு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பேசிய அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பு மருந்து சோதனையை ஆப்பிரிக்காவில் நடத்த வேண்டும் என மிக மோசமான கருத்து ஒன்றைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு மருத்துவர் தன் கருத்துக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், மருத்துவர்களின் இந்தக் கருத்துக்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று ஜெனிவாவிலிருந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த WHO -வின் தலைவர் டெட்ரோஸ், “உலக அளவில் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை மேலும் பரவாமல் தடுக்க மக்கள் அனைவரும் கட்டாயம் முகமூடி பயன்படுத்த அந்தந்த நாடுகள் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பிற பாதுகாப்பு விஷயங்களான கை கழுவுதல் மற்றும் வீட்டில் இருப்பது போன்றவற்றைக் கடுமையாகப் பின்பற்றுவது முடியாத காரியம். மேலும், சில நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனவே, அனைத்து நாட்டு மக்களும் கட்டாயம் முகமூடிகளை அணிந்துகொண்டு வெளியில் செல்ல வேண்டும்” எனக் கூறினார்.

WHO டெட்ரோஸ்

தொடர்ந்து பிரான்ஸ் மருத்துவர்கள் கூறிய கருத்துக்குப் பதில் அளித்த டெட்ரோஸ், “21-ம் நூற்றாண்டில் இதுபோன்ற கருத்துகளை விஞ்ஞானிகளிடமிருந்து கேட்பது மிகவும் அவமானமாக உள்ளது. நாங்கள் இதை மிகவும் வலுவாகக் கண்டிக்கிறோம். இப்படி ஒரு விஷயம் நிச்சயம் நடக்கவே நடக்காது என நாங்கள் உறுதியளிக்கிறோம். எந்த ஒரு தடுப்பூசிக்கும் சோதனை நடத்த ஆப்பிரிக்கா ஒன்றும் சோதனைக் களம் கிடையாது. அங்கு இதுபோன்ற சோதனைகளைச் செய்ய முடியாது. செய்வதற்கு நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்.

முதலில் அறிவியலாளர்கள் இதுபோன்ற தங்கள் அதிகார மனப்போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு தடுப்பூசியைச் சோதிக்க உலக சுகாதார அமைப்பு என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூறியுள்ளதோ அதை மட்டுமே உலக சமூகம் செய்ய வேண்டும். அது ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, விதிமுறை என்பது அனைவருக்கும் ஒன்றுதான்.

ஆப்பிரிக்க மக்கள் மீது தடுப்பூசி பரிசோதிக்கும் ஆலோசனைகள், இனவெறி பிடித்த வார்த்தைகள். இதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இதுபோன்ற பரிசோதனைகள் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் நடத்த அனுமதிக்க மாட்டோம். மனிதர்களை மனிதர்களாக நடத்துங்கள்” என மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.