வேலூர் மாவட்டத்தில், காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும், 12 மணிக்கு மேல் எந்தவொரு கடையும் செயல்படக் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் காணப்படும் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படுகிறது. அதேபோல் மீன், கோழி, ஆட்டுக் கறி, மாட்டுக் கறி கடைகளை ஊரடங்கின் கடைசி நாளான 14-ம் தேதி வரை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மார்க்கெட் பகுதி

ஆனாலும், மளிகைப் பொருள்கள், காய்கறிகள் விற்கும் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறுகிறார்கள். இந்த நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தன்னார்வலர்களைக் களத்தில் இறக்கியிருக்கிறது மாவட்ட நிர்வாகம். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் அங்கமான இளைஞர் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் 240-க்கும் மேற்பட்டோர் ‘கொரோனா’ வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் 1,312 தன்னார்வலர்களும் மாவட்டம் முழுவதும் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த 1,552 தன்னார்வலர்களையும் இரண்டுவிதமாகப் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் வியூகம் அமைத்துள்ளது. ஒரு பிரிவினர் காவல் துறையிலும், இன்னொரு பிரிவினர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை அணுகி குறைந்தபட்சம் மூன்று நாள்களுக்குத் தேவையான காய்கறிகளையும், பத்து நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் வாங்கிக் கொடுக்கப் பயன்படுத்தப்பட உள்ளனர்.

அறிவுறுத்தும் போலீஸ் அதிகாரி

இதற்கென அவர்களுக்குப் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் அனைவரும் செஞ்சிலுவை சங்கத்திற்குரிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற டி-சர்ட்டையும், தொப்பியையும் அணிந்து வருவார்கள். இந்தத் தன்னார்வலர்களின் பெயர், முகவரி, செல் நம்பர் ஆகிய தகவல்கள் மாவட்ட கலெக்டரின் http://vellore.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிக்குரிய தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளலாம். என்னென்ன காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வேண்டுமென்று பட்டியலையும் அதற்கான தொகையையும் கொடுத்து அனுப்பினால் போதும். அவற்றை வாங்கி வந்து வீடுகளிலேயே தன்னார்வலர்கள் கொடுப்பார்கள். அவ்வாறு செயல்படும் தன்னார்வலர்களுக்கு மக்கள் கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லை. அவர்களின் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பெட்ரோல், டீசல் இலவசமாக வழங்கப்படும்.

கலெக்டர் சண்முக சுந்தரம்

இவர்களது பணியினை அந்தந்தப் பகுதி தாசில்தார்கள் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவார்கள். இவர்களின் பணிகளில் ஏதேனும் குறையிருப்பின் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் தொடர்புகொண்டு புகார் கூறலாம். தவிர, அந்தந்தப் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்கம் சார்பிலும் தன்னார்வ இளைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களையும் இந்த சேவையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் சண்முக சுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.