கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து சமூக பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. மதக் கூட்டங்கள், அரசியல் கட்சி மீட்டிங் என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் அரசின் அறிவுறுத்தல்களை மதிக்காமல் வெளியில் நடமாடுவது, மொத்தமாக கூடுவது என சில விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. அப்படி வருபவர்களுக்கு போலீஸார் நூதன முறையில் தண்டனை கொடுப்பதும் வாடிக்கையான சம்பவங்களாக இணையதளங்களில் காண முடிகிறது.

கொரோனா வைரஸ்

இந்த நிலையில், தென்காசி நடுப்பேட்டைத் தெருவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிலர் தொழுகை நடத்த முயன்றுள்ளனர். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாக மக்கள் கூடுவதால் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பது பற்றி அறிந்ததும் காவல்துறையினர் அவர்களைக் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

தென்காசி டி.எஸ்.பி-யான கோகுலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் உள்ளிட்ட போலீஸார், மசூதியில் கூடியிருந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

Also Read: கொரோனா கொடூரம்… யார் காரணம்?

மசூதியில் இருந்து கலைந்து செல்ல மறுத்தவர்கள், போலீஸார் மீது சிலர் கற்களை வீசித் தாக்கியதாகத் தெரிகிறது. அதில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் காவலர்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

போலீஸ் தடியடி நடத்தியபோது மசூதிக்குள் இருந்தவர்கள் கற்களால் போலீஸார் மீது தாக்கியிருக்கிறார்கள். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மசூதியில் இருந்த சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.

ரத்தக் காயத்துடன் ஓடிய நபர்

ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாகக் கூடியது தொடர்பாக போலீஸார் நான்கு பேரை கைது செய்தார்கள். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மசூதியில் அனுமதியில்லாமல் கூட்டமாகக் கூடிய 200-க்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: `அப்பாகூட உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியலை’ -நெல்லை காவல்துறை அதிகாரியின் மகள் உருக்கம்

இது குறித்து போலீஸார் கூறுகையில், “கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு இருக்கும் காலத்தில் மத வழிபாடு உள்ளிட்ட எந்தக் காரணத்துக்காகவும் கூட்டம் சேரக் கூடாது.

Also Read: `மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மக்களைப் பாதுகாக்க மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் உயிரைப் பணயம் வகைத்து வேலை செய்யும் நிலைமையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மதக் கூட்டங்கள் வேண்டாம் என அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதை மதத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு மதக்கூட்டங்கள் வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை மதிக்காமல் கூட்டமாக கூடுவது போன்ற சம்பவங்கள் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.