திருச்சி அரசு பொது மருத்துவமனையில் 125 பேர் கொரோனா நோய் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேருக்கு தொற்று மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாள் டெல்லி சென்று தமிழகம் திரும்பிய 17 பேருக்கு தொற்று இருப்பது மருத்துவ ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவ சிகிச்சையிலுள்ள 61 பேருக்கு சளி, உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் மருத்துவ முடிவுகள் இன்று வெளியாகும் எனத் தெரியவருகிறது.

திருச்சி அரசு மருத்துவமனை

அதுவரையில் அவர்கள் அனைவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். மேலும், இவர்களின் குடியிருப்புகள், மருத்துவமனை வளாகங்கள் உள்ளிட்ட சுமார் 50 இடங்களின் பாதைகள் மூடப்பட்டு, யாரும் நடமாட முடியாதபடி உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் மீறி, நேற்று இரவு, கொரோனா தொற்று அறிகுறிகளுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த பகவதிநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திடீரென மருத்துவமனையில் இல்லை என்பது, மருத்துவமனை ஊழியர்கள் சரிபார்த்தபோது தெரியவந்தது.

அதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபரை நேற்று நள்ளிரவில் இருந்தே காணவில்லை என்பதும், அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. உடனடியாக, மருத்துவமனை ஊழியர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதாவை தொடர்புகொண்டு தகவலைச் சொல்ல, தொடர்ந்து, திருச்சி திருவெறும்பூர் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

திருச்சி

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர் மருத்துவமனையிலிருந்து தப்பிய விவகாரத்தால் திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் திருவெறும்பூர் ஏரியா உள்ளிட்டவை பரபரப்பானது.

தகவலறிந்த போலீஸார், தப்பியோடிய நபரின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவரை எச்சரித்த போலீஸார், அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்.

Also Read: `ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா… ஐசோலேஷன் வார்டில் 120 பேர்!’ – திருச்சி அப்டேட்ஸ்

தப்பியோடிய அந்தநபர் போலீஸாரின் விசாரணையில், “கொரோனோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவு துளியும் பிடிக்கவில்லை, அதனால் விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை வீட்டு சாப்பாடு சாப்பிடலாம் என மருத்துவமனையில் இருந்து தப்பி வந்தேன்” என்றாராம்.

கொரோனா நோயாளிகளுக்கு விதவிதமான உணவுகள் வழங்கப்படுவதாகத் தமிழக அரசு பெருமையாகக் கூறி வரும்நிலையில் மருத்துவமனையில் வழங்கும் உணவு சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவரின் வாக்குமூலம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.