உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. பிரிட்டனில் தற்போது கொரோனா தொற்றால் 33,000-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்று பிரிட்டன் இளவரசர் சார்லஸையும், பிரதமர் போரிஸ் ஜான்சனையும் கூட விட்டுவைக்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது முக்கிய அரசாங்கப் பொறுப்புகளை நிதி அமைச்சரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிடம் ஒப்படைத்துள்ளார். இவர்தான் தற்போது அந்த நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ரிஷி சுனக்

யார் இந்த ரிஷி சுனக்?

இவர் 2006-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். பிரிட்டனின் நிதித் தலைவராக இளம் வயதிலேயே நியமிக்கப்பட்ட ரிஷி சுனக்கின் அரசியல் வாழ்க்கை 2015-ல் தான் தொடங்கியது. அப்போது அவர் யார்க்க்ஷயரில் உள்ள ரிச்மாண்ட் பகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகக் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னர் இருந்த நிதித் தலைவரான சாஜித் ஜாவித்தின் கீழ் பிரிட்டன் கருவூலத்தின் தலைமைச் செயலாளராகவும் இருந்தார் ரிஷி சுனக்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிறகு சாஜித் ஜாவித்துக்கும் பிரதமருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் பிரதமர் கூறிய நிபந்தனைகளை ஏற்கமுடியாத காரணத்தால் பிப்ரவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார் சாஜித் ஜாவித். இதனால் நிதித் தலைவர் பொறுப்பு ரிஷி சுனக்கைத் தேடி வந்தது. ஏற்கனவே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஆதரித்ததன் மூலம் பிரதமரின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் சுனக். இதனால் பிரிட்டனின் முக்கிய அரசியல் அதிகாரிகள் வசிக்கும் டவுனிங்க் தெருவில் பிரதமரின் வீட்டு எண் 10-க்கு அடுத்த 11-ல் வசிக்க ஆரம்பித்தார் சுனக். இது மறைமுகமாக நிதித் தலைவர் அரசாங்க பொறுப்புகளில் பிரதமருக்கு வலது கரமாக செயல்படுவார் என்பதை குறிப்பதே. சுனக் பதவியேற்ற அடுத்த மாதத்திலேயே பிரிட்டனின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அசத்தினார்.

Also Read: சீனா, இத்தாலி, ஸ்பெயின் முதல் அமெரிக்கா வரை… அந்த நாடுகளில் லாக் டவுன் நிலை என்ன?

தற்போது நாட்டின நிதித் தலைவராக பொறுப்பேற்ற ஆறு வாரங்களே முடிவடைந்த நிலையில் பிரிட்டனில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முக்கிய பணியில் ஈடுபட்டு வருகிறார் சுனக். இந்தத் தொற்று பற்றி பிரதமர் பேச ஆரம்பித்த எல்லா கூட்டத்திலும் சுனில் அவருடனே காணப்பட்டார். தற்போது பிரமருக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறார். இதனால் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகள் சுனக்கிடம் வந்துள்ளன.

கொரோனோவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார் சுனக். கடந்த வியாழக்கிழமை அன்று சொந்தத் தொழில் செய்பவர்களான ப்ளம்பர், முடி திருத்துபவர், அழகுக் கலை நிபுணர் போன்றவர்களைச் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு சொந்தத் தொழிலில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கால் ஏற்பட்ட இழப்பீட்டைச் சமாளிக்கும் வகையில் அவர்களின் வருமானத்தில் 80 சதவிகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளார். பிரிட்டன் அரசாங்கம் மக்களின் வருமானத்தை வழங்குவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு CLBILS (Corona Virus Business Interruption Loan Scheme) என்ற பெயரில் அவசரகால கடன் உதவி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் வருடத்துக்கு 45 மில்லியன் பவுண்ட் முதல் 500 மில்லியன் பவுண்ட் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள 25 மில்லியன் பவுண்டைக் கடனாக பெற முடியும். ஏற்கனவே 90 மில்லியன் பவுண்டுகள் 983 சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பெரிய நிறுவனங்களுக்காக இதுவரை 1.9 பில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ரிஷி சுனக்

இதோடு கொரோனா வைரஸ் பாதிப்பைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வங்கி உரிமையாளர்களிடமும் பேச உள்ளார் சுனக். சுனக் பதவியேற்று சில நாள்களே ஆன நிலையில் தேசத்தையே கொரோனாவுக்கு எதிரான போரில் வழிநடத்திச் செல்கிறார். இவரது முக்கியமான பணி, நிதி திட்டமிடுதல்தான் என்றாலும் பிரதமர் இல்லாத சமயத்தில் அவருடைய பணியையும் திறம்படச் செய்து வருகிறார்.

இவர் நாட்டு மக்களிடையே கொரோனாவுக்கு எதிரான எழுச்சி மிகு உரையையும் ஆற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சந்தை ஆய்வு நிறுவனமான யூகாவ் நடத்திய ஆய்வு முடிவில் சுனக்கிற்கு ஒப்புதலாக 60 சதவிகிதம் வாக்களித்துள்ளனர். இவருக்கு எதிராக 11 சதவிகிதம் மட்டுமே வாக்களித்தனர். அதே சமயத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக 55 சதவிகிதமும், எதிராக 35 சதவிகிதம் பேரும் வாக்களித்தனர். சுனக் பிரிட்டன் மக்களிடையே நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி. கன்சர்வேடிவ் கட்சி வட்டாரத்திலேயே ‘சுனக் பிரட்டனின் முதல் சிறுபான்மையின பிரதமராக உருவெடுப்பார்’ என்ற வகையில் பேசி வருகின்றனர். அவ்வளவு திறம்பட கொரோனாவுக்கு எதிரான போரில் பிரட்டனின் 66 மில்லியன் மக்களையும் வழிநடத்தி வருகிறார் ரிஷி சுனக்.

Also Read: மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட்-19… இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா..?

கொரோனா காரணமாக பவுண்ட் மதிப்பின் வீழ்ச்சி, நிறுவனங்கள் மூடப்படுதல், முன்னணி மருத்துவமனைகள் நிரம்பி வழிதல் என பல சவால்களையும் தாண்டி பிரிட்டனின் பொருளாதாரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ரிஷி சுனக். இவரின் எழுச்சியைக் கண்டு ‘இந்தியாவை பிரிட்டன் ஆண்டது போல தற்போது பிரிட்டனையே இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் வழிநடத்தி வருகிறார்’ என்று நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாரயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.