கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கிப்போட்டிருக்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸுக்கு ஏப்ரல் 4-ம் தேதி வரை உலக அளவில் 60,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பொருளாதாரம் முடங்கிப்போய் உள்ளது, உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பற்றிய அச்சமும் தவறான தகவலுமே மக்களிடத்தில் அதிகமாக நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸ்

பல்வேறு நாடுகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் பத்திரிகைகள், ஊடகங்கள் இயங்குவதிலும் பெரும் சவால்கள் எழுந்துள்ளன. பல அச்சுப் பிரதிகளை வெளியிடும் ஊடகங்களும் தற்காலிகமாக மின்வடிவங்களுக்கு மாறிவருகின்றன. பிரதிகளை அச்சிட்டு விநியோகிப்பதில் எழுந்திருக்கக்கூடிய சிக்கலே இதற்குக் காரணம். இந்த நிலையில், கொரோனா பற்றிய தகவல்களைக் கொண்டுசெல்வதில் ஊடகத்தினுடைய பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.

“It is hard to seperate fact from fiction” என்கிற வாசகம் ஒன்று உண்டு. டிஜிட்டல் யுகத்தில் செய்திகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், உண்மையான செய்திகளோடு போலிச் செய்திகளும் கலந்துவிடுகின்றன. இதில் எது உண்மைச் செய்தி, எது போலிச் செய்தி என்று கண்டறிவதில் சிக்கல் உள்ளது. போலிச் செய்திகளைக் கண்டறிவதில் ஊடகங்களின் பங்கு முதன்மையானது. பல ஊடகங்களும் போலிச் செய்திகளை ஃபேக்ட் செக்கிங் செய்துவருகின்றன. இதற்கென்றே altnews, hoax slayer போன்ற பல இணையதளங்கள் இயங்கிவருகின்றன. நம் விகடனிலும் #VikatanFactCheck என்ற ஹேஷ்டேகில் இதுபோன்ற செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடுகிறோம்.

பிரதமர் மோடி

இந்தியாவில், கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு நிலவி வருவதால், பத்திரிகையாளர்களின் பணியும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா ஆரம்பத்திலே தீவிரம் காட்டவில்லை என்பதையும், கொரோனா பரிசோதனைகளில் உள்ள பாற்றாக்குறைகளையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டிவருகின்றன.

கடந்த மார்ச் 22-ம் தேதி, அடையாளபூர்வமாக ஒருநாள் மக்கள் ஊரடங்கைக் கடைபிடிக்க வேண்டும் எனப் பிரதமர் அறிவித்திருந்தார். பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட மக்கள் ஊரடங்கு, அதற்குப் பின்னரும் விரிவுபடுத்தப்படலாம் என்கிற பேச்சு அடிபட்டது.

அதைத் தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி, பிரதமர் மோடி ஊடக நிறுவனர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். கொரோனா சமயத்தில் பாசிட்டிவான செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் ஊடகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரை நிகழ்த்தினார் பிரதமர். மார்ச் 24 நள்ளிரவு 12 மணி முதல் 21 நாள்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

130 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, முழு ஊரடங்கிற்குத் தயாராவதற்கு நான்கு மணிநேரம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதைத் தொடர்ந்து, பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் திரும்பிச் செல்ல முற்பட்டனர். பேருந்து, ரயில் போக்குவரத்து முடங்கியதால், பலரும் நடந்தே தங்களுடைய கிராமங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். இந்தச் செய்தி ஊடகங்களின் மூலம் வெளிவரத் தொடங்கியது.

இதற்குப் பின்னரே புலம்பெயர் தொழிலாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற பேச்சு வந்தது. மத்திய மாநில அரசுகள் முன்வந்து, பிற மாநில தொழிலாளர்களுக்காக தங்குமிடம், உணவு போன்றவற்றை ஏற்பாடுகள் செய்தன. பாதிக்கப்பட்டு நின்றவர்களின் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பங்காற்றின.

நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்

இந்த நிலையில், வருமானம் இழந்த தொழிலாளர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. அதில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “ஊடகங்கள் அரசாங்கத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே கொரோனா பற்றிய செய்திகளை வெளியிட வேண்டும்” என உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தது. இது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. போலிச் செய்திகளால்தான் தொழிலாளர்கள் மத்தியில் பதற்றம் உருவானது என மேம்போக்காகக் கூறி, இப்படியொரு கண்மூடித் தனமான தடையை ஊடகங்களுக்கு விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வாதிட்டது மத்திய அரசு.

அதில் உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், “ஊரடங்கு மேலும் நீடிக்கும் என்கிற போலிச் செய்திகளால்தான் தொழிலாளர்கள் பதறி இடம்பெயர நேர்ந்தது” என்கிற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. “ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை. ஆனால், ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கொரோனா பற்றிய தகவல்களை அரசாங்கத்திடம் உறுதிபடுத்தியே வெளியிட வேண்டும். அரசுத் தரப்பு தகவல்களைப் பரவலாக வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. இது வெளிப்படையான தடை இல்லையென்றாலும் கண்மூடித்தனமான ஒன்று என பல தரப்பினரும் இந்தத் தீர்ப்பை விமர்சித்திருக்கின்றனர்.

பத்திரிகையாளர் விஜய் சங்கர்

மூத்த பத்திரிகையாளர் விஜய் சங்கர், இந்த உத்தரவு பற்றி நம்மிடம் பேசுகையில், “போலிச் செய்திகள் கண்மூடித்தனமாகப் பரவுவது உண்மைதான். ஆனால், அதற்கும் பிரதான ஊடகங்கள் கொரோனா பற்றி செய்திகள் வெளியிடுவதற்கும் தொடர்பு இல்லை. இவற்றைத் தொடர்புபடுத்தி மத்திய அரசு வாதிடுவதும், அதை உச்ச நீதிமன்றம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதும் ஆபத்தான போக்காகப் பார்க்கப்படுகிறது. அரசுதான் முன்னறிவிப்பின்றி ஊரடங்கு அறிவித்து பதற்றத்தை உருவாக்கியது. நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த பிறகுதான் மற்ற விஷயங்களை யோசிக்கவே செய்கின்றனர். ஒரு வாரம் கழித்துதான் பிரதமர் மாநில முதல்வர்களுடன் பேசுகிறார். பதற்றத்தை உருவாக்கியதாக ஊடகங்களைப் பழிசுமத்துவது சரியானதல்ல” என்றார்.

”மக்களுக்கு உண்மை தெரியட்டும், தேசம் பாதுகாப்பாக இருக்கும்” என்கிற அடிமை விலங்கொடித்த அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் வரிகள்தாம் நமக்கு நினைவுக்குவருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.