கொரோனா பெயரைக் கேட்டதுமே பலரும் ஓடி ஒளியும் நிலை இருக்கும் சூழலில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ரேஷ்மா, என்பவர் தானே விரும்பி கொரோனா வார்டில் பணியாற்றினார். கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 12 முதல் 22 வரை அவருக்கான டூட்டி இருந்தது.

ரேஷ்மா பணியில் இருந்தபோது கொரோனா வார்டில் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி பகுதியைச் சேர்ந்த 90 வயது முதியவரான தாமஸ் குஞ்சவரச்சன் அவரது மனைவியான 88 வயது நிரம்பிய மரியம்மா ஆகியோர் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டனர். வயதான அந்தக் கொரோனா பாதித்த தம்பதியை ரேஷ்மா தன்னுடைய பெற்றோரைப் போலக் கவனித்துக் கொண்டார்.
Also Read: `அப்பாகூட உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியலை’ -நெல்லை காவல்துறை அதிகாரியின் மகள் உருக்கம்
தனது பத்து நாள் தொடர் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிய ரேஷ்மாவுக்கு மறுநாளிலேயே உடல் வலியும் தலைவலியும் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மருத்துவமனையில் பணியாற்றியதால் ஏற்பட்ட அசதி காரணமாக உடல்வலி ஏற்பட்டிருக்கலாம் என அவர் நினைத்தார்.
Also Read: சோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி! – க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை
ஆனால், தொடர்ந்து அவருக்கு இருந்த அறிகுறிகளைப் பார்த்ததும் மருத்துவமனைக்கு வந்து உடல் பரிசோதனை செய்துகொண்டார். அவருடைய பரிசோதனை முடிவு மார்ச் 24-ம் தேதி வந்தபோது அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த நர்ஸ் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்ட சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பொதுமக்களும் மிகவும் வேதனையடைந்தனர். ரேஷ்மாவுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சரான கே.கே.ஷைலஜா மருத்துவர்களைக் கேட்டுக் கொண்டார்.

அதன்படி 10 நாள் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த நர்ஸ் ரேஷ்மா தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். அவருடன் பணியாற்றிய செவிலியர்கள், மருத்துவமனையின் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை வென்று முழு குணமடைந்து வீடு திரும்பிய நர்ஸ் ரேஷ்மா கூறுகையில், “கேரள மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இருக்கின்றன. ஏராளமான பணியாளர்கள் தன்னார்வமாகப் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பாதிப்பு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. இந்த நோய்த் தொற்றிலிருந்து எளிதில் மீள முடியும்.

கேரள மாநிலம் கொரோனா பாதிப்பிலிருந்து மிகச் சுலபமாக விடுபட்டுவிடும். அடுத்த 14 நாள்கள் தனிமையில் இருக்க உள்ளேன். அது முடிந்ததும் மீண்டும் பணிக்குத் திரும்புவேன். அப்போது யாராவது கொரோனா பாதிப்புடன் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்த வார்டில் பணியாற்றவே விரும்புவேன்” என்றார்.
ரேஷ்மா குணமடைந்ததை அறிந்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். ரேஷ்மா குணமடைந்த தகவலைக் கேள்விப்பட்ட கேரள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தில் கேரள அரசுக்கும் ரேஷ்மாவுக்கும் வாழ்த்துகள் குவிகின்றன.
Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!
இதனிடையே, ரேஷ்மா குணமடைந்த அதே வேளையில் அவர் சிறப்பாகக் கவனித்துக்கொண்ட 90 வயது முதியவரான தாமஸ் குஞ்சவரச்சன் அவரது மனைவியான மரியம்மா ஆகியோரும் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.