இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்குநாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 3,108 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 86 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும் இரவுபகலாக வேலை செய்து வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களே நேரடியாகக் களத்தில் இறங்கிக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பீகார், தர்பாங்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியருக்கு சமூகவலைதளத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்பாங்கா மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார் எஸ்.எம்.தியாகராஜன் ஐ.ஏ.எஸ். இவர் அம்மாவட்டத்தில் கொரோனா தொடர்பாகத் தொடர் கண்காணிப்பு, நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த மாவட்டத்துக்கான அனைத்து அறிவிப்புகளும் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் அப்டேட்டுகளாக பதிவிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “வெளிமாநிலங்களிலிருந்து தர்பாங்கா வந்துள்ளவர்களுக்கு நாளை (03-04-2020) வைரஸ் சோதனை நடத்தப்படவுள்ளது. மக்கள் தாமாக முன்வந்து சோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தர்பாங்காவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர், தர்பாங்கா நகராட்சி ஆணையர் மற்றும் வார்டு கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் இறுதியில் சோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் வெளிமாநிலத்திலிருந்து திரும்பியவர்கள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. அதன்படி மார்ச் 18-ம் தேதிக்குப் பிறகு மாவட்டத்துக்குள் வந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் கணக்கெடுக்கப்பட உள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வந்துள்ளனர். அவர்களும் தப்லிகி ஜமாத்துடன் நேரடித் தொடர்பிலிருந்தவர்களும் தாமாக முன்வந்து சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நபர்களுக்கு வீட்டிலேயே சோதனை செய்யப்படும். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அனைத்து மக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து தர்பாங்கா திரும்பியவர்கள் நிச்சயமாகச் சோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த சோதனை அவர்களின் குடும்பத்தையும் பிற மக்களையும் வைரஸிலிருந்து பாதுகாக்கும். மக்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனாவைத் தோற்கடிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்’ என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆட்சியரின் நடவடிக்கைக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து அந்தப் பதிவிற்குக்கீழ் கமென்ட் செய்திருந்தனர். ஆனால், முகமது ஃபைசல் என்ற ஒருவர், `மாவட்ட ஆட்சியரை யார் கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நான் வழங்குவேன்’ என அறிவித்துள்ளார். இவரின் கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. பின்னர் இதுகுறித்து காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டு கருத்து பதிவிட்டவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சமூகவலைதளத்திலிருந்து அந்த கமென்ட் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.