புதுச்சேரியில் 2016-ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததிலிருந்தே துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் அனைத்து விவகாரத்திலும் அதிகார மோதல் தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் அதிகாரிகள், போட்டோகிராபர், வீடியோகிராபர் புடைசூழ நகர்ப்புறத்தை வலம் வந்து ஆய்வு செய்யும் கிரண்பேடி, அன்றாடம் ராஜ்நிவாஸில் மக்களைச் சந்தித்துப் புகார் மனுக்களைப் பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

முதல்வர் நாராயணசாமி

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தீவிரமடைவதால் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்னதும், இவை இரண்டையும் உடனே தவிர்த்த கிரண்பேடி, துணிக் கடைகள், பல்பொருள் அங்காடிகளுக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்று வீடியோ எடுத்து வெளியிட்டார்.

அதேபோல முதல்வர் நாராயணசாமியும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்கள் கூடும் இடங்களை ஆய்வு செய்தார். இருவரும் வெவ்வேறு திசையில், நேரங்களில் ஆய்வுக்குச் சென்றதால் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தனர் அதிகாரிகள். இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டுக்குச் சென்று புதுச்சேரி திரும்பியவர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அவ்வளவுதான்… அதற்கு மறுநாளிலிருந்து வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்துவிட்டார் கிரண் பேடி.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

தனது கையொப்பத்துக்காக வரும் கோப்புகளைக்கூட கிருமி நாசினி தெளித்த பிறகுதான் கையாளுகிறாராம். அதேசமயம் புதுச்சேரியில் 4 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியான பிறகும்கூட முதல்வர் நாராயணசாமி, தனது வழக்கமான ஆய்வுப் பணிகளை நிறுத்தாமல் வலம் வருகிறார். அதனால் உற்சாகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர், “எனக்குத்தான் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்று கூறிவரும் கிரண்பேடி மக்களைத் தவிர்த்துவிட்டு, ராஜ்நிவாஸில் அமர்ந்துவிட்டார். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குத்தான் பொறுப்புகள் இருக்கிறது என்பதை முதல்வர் நாராயணசாமி நிரூபித்துக்கொண்டிருக்கிறார்” என்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.