நம் சமையலறையின் முதல் விருந்தாளியான தீப்பெட்டியை, சிவகாசிக்கு அடுத்தபடியாக, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தான் அதிகம் தயாரிக்கிறார்கள். வர்த்தக ரீதியாக `குட்டி சிவகாசி’ என்று பெயரெடுத்த இந்த ஊரில் 15 இயந்திரத் தொழிற்சாலைகளும், 200-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழிலாளர்களும் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். “சின்ன பெட்டி; அதனுள் குச்சி; எளிதாகத் தயாரிக்கலாம்; வேலையும் சுலபமாகத்தான் இருக்கும்’’ என்று பலரும் நினைப்பார்கள்.

தீப்பெட்டித் தயாரிப்பு

அப்படியல்ல, “ஒரு தீக்குச்சியைத் தயாரிக்கப் பல மணி நேரம் ஆகிறது. கடினமானத் தொழில். லாபம் மிகமிக குறைவு’’ என்கிறார்கள் தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள். குச்சி அடுக்குதல், மருந்து முக்குதல், பெட்டியில் தீக்குச்சிகளை அடைத்தல், பண்டல்களாக பேக்கிங் செய்தல் என இத்தனை பிரிவுகளில் தயாரிப்பு பணி நடக்கின்றன. இயந்திரத்தின் ஒரு பகுதியில் சாதாரண மரக் குச்சிகளைக் கொட்டினால்போதும், அதுவே சின்ன சின்னதாக நறுக்கி பைப் வழியாக இன்னொரு யூனிட்டுக்கு அனுப்புகிறது.

அங்கு, பாலிஷ் போட்டு மெழுகு பதிந்து மருந்து தோய்த்து தீக்குச்சிகளாக வெளியே தள்ளுகிறது. பாக்ஸ் தயாரிக்கும் அட்டைகளில், முதலில் நிறுவனத்தின் பெயர், முகவரி, விலை, தரம் அச்சிடப்படும். பிறகு, சதுர வடிவில் சிறிய அட்டைகள் வெட்டப்படும். அதில், சல்ஃபர், குளோரைடு போன்ற மருந்து கலவைகளை மெஷின் மூலம் அட்டையின் இருப் பக்கமும் பதிந்த பிறகே பாக்ஸுகள் தயாராகின்றன. பாக்ஸ் பில்லிங் மட்டும் ஆட்கள் மூலமாக நடக்கிறது.

தீக்குச்சிகள்

இந்த வேலையில் பெண் தொழிலாளர்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒரு பாக்ஸுக்கு 50 குச்சிகளைப் போட்டு அவர்கள் பேக்கிங் அனுப்புகிறார்கள். 600 பெட்டிகள் ஒரு பண்டலாக பேக் செய்யப்பட்டு ஏற்றுமதிக்காக அடுக்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு இயந்திர தொழிற்சாலையிலும் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தீப்பெட்டிகளை தயாரிக்கிறார்கள். கரென்ட் பில் மட்டும் மாதந்தோறும் லட்சத்தைக் கடக்கிறது.

இதைத் தவிரப் பொருள்களுக்கான செலவு, தொழிலாளர்களுக்கான கூலி, 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி, சந்தை நிர்ணய விலையெல்லாம் போக 40, 50 பைசா லாபத்துக்காகத் தான் இவ்வளவாக உழைக்க வேண்டியிருக்கிறது. விவசாயி அறுவடை செய்யும் பொருள்களுக்கு வியாபாரி லாபம் பார்ப்பதைப்போலதான் தீப்பெட்டித் தொழிலும் நலிவுற்றுக் கிடக்கிறது. குடியாத்தம் தீப்பெட்டிகள் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கைத்தறி லுங்கிகள்

இந்த நிலையில், `கொரோனா’ நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தத் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தீப்பெட்டித் தொழில் முடங்கியுள்ளது. தீப்பெட்டிப் பண்டல்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள். சுமார் ரூ.10 கோடி வரையிலான தீப்பெட்டிப் பண்டல்களை குடோன்களில் மலைக் குன்றுபோல் அடுக்கி வைத்துள்ளனர். குடிசைத் தொழிலாக தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய குடும்பங்களும் வறுமையில் வாடுகிறது.

சர்வதேச ஏற்றுமதி தரம் வாய்ந்த கைத்தறி லுங்கி உற்பத்தியிலும் குடியாத்தம் பெயர் பெற்றது. இங்கு நெய்யப்படும் லுங்கிகள் பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் இலங்கை, இந்தோனேசியா, வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. லுங்கித் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான லுங்கிகள் தேக்கமடைந்துள்ளன.

விசைத்தறியால் நெய்யப்பட்ட பட்டுப்புடவைகள்

அதேபோல், குடியாத்தம் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத் தறிகள் உள்ளன. இந்தத் தொழிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2,500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பயன்பெறுகிறார்கள். பட்டுப் புடவைக்கான மூலப்பொருள்கள் ஆரணி, காஞ்சிபுரம், சேலம், பெங்களூரு மற்றும் குஜராத் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது. தடை காரணமாக, ரூ.7 கோடி வரையிலான பட்டுப் புடவைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி லுங்கி உற்பத்தியாளர்கள், பட்டு நெசவாளர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.