கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. கேரளத்தில் ஜனவரி 30-ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 295 பேரைப் பாதித்துள்ளது. அதில் 206 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். 7 பேர் வெளிநாட்டவர்கள். கொரோனா நோயாளிகளின் தொடர்பால் 78 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் முதன் முதலாக சீனாவிலிருந்து வந்த மூன்று மாணவர்களுக்குக் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூன்றுபேரும் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். இந்த நிலையில் இத்தாலியிலிருந்து வந்த பத்தினம்திட்டாவைச் சேர்ந்த 3 பேருக்குக் கொரோனா இருந்தது தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலி நாட்டிலிருந்து கடந்த பிப்ரவரி 29-ம் தேதி ஊர் திரும்பிய பத்தினம்திட்டாவைச் சேர்ந்தவர்களால் அவர்களது வீட்டில் உள்ள 93 வயதான தாமஸ், அவரின் மனைவி 88 வயதான மரியம்மா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார்கள். மார்ச் 8-ம் தேதி இவர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோட்டயம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில், அவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இது மருத்துவ உலகில் புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்த தம்பதியர் மீண்டது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர் தனது முகநூல் பக்கத்தில் டாக்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில் முதிய தம்பதியர் நேற்று மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடித்து வீடு திரும்பினர்.
இதுகுறித்து கோட்டயம் மெடிக்கல் காலேஜ் மருத்துவர்கள் கூறுகையில், “கொரோனா நோய்த் தொற்று முதியவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டது. இந்தநிலையில் 93 மற்றும் 88 வயதான முதிய தம்பதியருக்கு வயது முதிர்வால் ஏற்பட்ட நோய், சிறுநீரகத் தொற்று உள்ளிட்டவையும் இருந்தன. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கும்படி வார்டுகள் அமைத்திருந்தோம். இருப்பினும், `வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என அடிக்கடி அடம்பிடித்தனர்.

இவர்களுக்கு 8 மருத்துவர்கள் 25 நர்சுகள், 40 பணியாளர்கள் சேவை செய்தனர். அதில் ஒரு நர்சுக்குக் கொரோனா தொற்று பாதித்தது. இவர்களுக்கு நான்கு நாள்களுக்கு முன்பு ஆக்சிஜன் சாதாரணமாகச் சென்று வந்தது. மூச்சுத்திணறல் நின்றதால் வென்டிலேட்டர் அகற்றப்பட்டது. இவர்கள் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்குக் கொரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததைத் தொடர்ந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்” என்றார். கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழுவினருக்குக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர் பாராட்டு தெரிவித்தார்.