கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதுமே கடந்த 24ம் தேதி முதல் ஏப்ரல்14ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகள், காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து மற்ற கடைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகம் முழுவதுமே தற்போது டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் மதுகுடிக்காமல் தங்களால் இருக்க முடியவில்லை என்று மது குடிப்பவர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.
Also Read: “144 தடையா, அப்படின்னா?” டோர் டெலிவரியில் சரக்கு… உற்சாகத்தில் `குடிமகன்கள்!’
இதற்கிடையேதான் மது கிடைக்காத விரக்தியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் மாற்றுப்போதைக்கு முயற்சி செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா(34), அருண்பாண்டி(29), அசன் மைதீன்(31) ஆகிய மூன்று பேரும் மீனவர்கள். இவர்கள் கடந்த சில நாள்களாகவே மதுகிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மதுபோதைக்கு மாற்றாக, மாற்றுப்போதை ஏற்றிக்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, இவர்கள் முடி திருத்தும் கடைகளில் சேவிங் செய்த பிறகு முகத்தில் தடவும் லோஷனை, 7அப் குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றதால், உடனே மூவரும் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், அருண்பாண்டி, அசன் மைதீன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அன்வர்ராஜா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டைப்பட்டினம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸாரிடம் கேட்டபோது, “மூவரும் மது கிடைக்காத விரக்தியில் இருந்துள்ளனர். இந்தப் பகுதிகளில் முன்பு அதிகளவு போதை ஊசி மருந்துகள் மாற்றுப்போதையாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. தற்போது அது எல்லாம் இல்லை. இந்தநிலையில்தான் வெளிநாட்டிலிருந்து வந்த இவர்களது நண்பன் ஒருவன், மதுகிடைக்காவிட்டால், சேவிங் லோஷனை, குளிர்பானத்துடன் கலந்துகுடித்தால் போதை ஏறும் என்று கூறியுள்ளான். இதையடுத்துதான் அதை வாங்கி வந்து குடித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.