ஏப்ரல் 1, 2020 முதலாக, இந்தியா முழுக்க BS-6 மாசு விதிகள் அமலுக்கு வந்துள்ளன என்பது அறிந்ததே! கடந்த ஆண்டின் இறுதி முதலே, சில நிறுவனங்கள் BS-6 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தொடங்கிவிட்டனர். மேலும் ஆயில் நிறுவனங்களும் BS-6 எரிபொருள்களை பங்க்குகளில் கிடைக்கும்படிச் செய்துவிட்டார்கள். ஆனால், வாகன உற்பத்தியாளர்கள் பலரும், தங்கள் வசமுள்ள BS-4 வாகனங்களை இன்னும் விற்பனை செய்துமுடிக்கவில்லை.

கொரோனாவால் இந்தத் தேக்கநிலை ஏற்பட்டது ஒருபுறம் என்றாலும், மறுபுறத்தில் புதிய வாகன விற்பனையும் சரிவிலிருந்து மீளவில்லை என்பதே நிதர்சனம். இதனால் இருசக்கர வாகன டீலர்கள் அமைப்பான FADA, BS-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான உச்சவரம்பை இரு மாதங்களுக்கு நீட்டிக்கும்படி இருமுறை உச்சநீதிமன்றத்திடம் மனு போட்டது தெரிந்ததே. இதற்கு பஜாஜ் ஆட்டோ கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில், ஏப்ரல் 14, 2020-க்குப் பிறகான 10 நாள்களுக்கு, ஒவ்வொரு டீலரும் தங்கள் வசமுள்ள BS-4 வாகனங்களில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விற்பனையாகாத BS-4 வாகனங்களின் எண்ணிக்கை என்ன?

7 லட்சம் டூவீலர்கள், 15,000 பாசஞ்சர் வாகனங்கள், 12,000 கமர்ஷியல் வாகனங்கள் என மொத்தம் 7.27 லட்சம் BS-4 வாகனங்கள் மீதமுள்ள நிலையில் (இவற்றின் உத்தேச மதிப்பு, 6,300 கோடி ரூபாய்க்கும் அதிகம்), அதில் 10 சதவிகிதமான 72,700 வாகனங்களை மட்டுமே டீலர்கள் விற்பனை செய்யமுடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தவிர, ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு, ஆனால் முன்பதிவு செய்யப்படாமலேயே 1.05 லட்சம் டூவீலர்கள், 2,250 பாசஞ்சர் வாகனங்கள், 2,000 கமர்ஷியல் வாகனங்கள் என மொத்தம் 1,09,250 வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படத் தயாராக உள்ளன.
இதற்கான காலக்கெடு ஏப்ரல் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் டூவீலர்களை விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம், 1 லட்சத்துக்கும் அதிகமான BS-4 வாகனங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவை நம் நாடு முழுக்க இருக்கும் அந்த நிறுவனத்தின் 1,000 டீலர்கள் வசம் உள்ளன. ஹீரோ தனது டீலர்களுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
BS-4 டூவீலர்களுக்குக் கிடைக்கும் தள்ளுபடிகள் எப்படி?

இந்தச் சூழலில், ஹீரோ ஏற்கெனவே BS-4 வாகனங்களுக்காக அறிவித்திருந்த ஆஃபர்களைப் பற்றி இங்கே பார்ப்போம். HF டீலக்ஸ் பைக்கின் மீது 5,000 ரூபாய் தள்ளுபடியும், இதர 100-125சிசி பைக்குகளுக்கு 7,500 ரூபாய் தள்ளுபடியும், 100-125சிசி ஸ்கூட்டர்களுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடியும், 200சிசி பைக்குகளுக்காக 12,500 ரூபாயும் தள்ளுபடி வழங்கப்பட்டன. இதனுடன் இவற்றின் BS-6 மாடல்களின் விலை சராசரியாக 8,000 ரூபாய் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது, இந்த நிறுவனத்தின் BS-4 மாடல்களை வாங்குவோர் 13,000 ரூபாய் முதல் 20,500 ரூபாய் வரை அதிகபட்சமாகச் சேமிக்கமுடியும் எனத் தெரிகிறது.
இதுவே டிவிஎஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, XL 100 சீரிஸ் வாகனங்களுக்கு 7,500 ரூபாய் தள்ளுபடி கொடுத்திருக்கிறது. மற்ற ஸ்கூட்டர்கள், பைக்குகள் ஆகியவற்றின் விலையில் 11,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் தள்ளுபடிகள் பொருந்தும் என்பதுடன், ஆன்லைன் புக்கிங் மட்டுமே தற்போது செய்யக்கூடிய நிலை நீடிக்கிறது என்பதையும் நினைவில்கொள்ளவும்.