கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில்தான், மார்ச் 24-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். சமூகப் பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மோடி

இந்த நிலையில், நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். சச்சின் டெண்டுல்கர், கோலி, கங்குலி, பி.வி.சிந்து உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, “கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மக்களிடம் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் உங்களின் பங்கும் மிகவும் அவசியம்” என்றார்.

இந்த உரையாடல் தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியுடன் உரையாற்றும்போது இந்த ஊரடங்கு குறித்து சில விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. வயதானவர்களை நன்றாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பிரதமரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கேட்க முடிந்தது. ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு நாம் தற்போது பின்பற்றக்கூடிய பாதுகாப்பு முறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். லாக்டவுண் பிறகான காலத்தை எப்படிக் கையாளப்போகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

மோடி

கொரோனா தொற்று ஓய்ந்த பிறகும் மற்றவர்களை சந்திக்கும்போது கைகளைக் குலுக்காமல் நமது பாரம்பர்ய முறைப்படி கைகளைக் கூப்பி வணங்கும் முறையைப் பின்பற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினேன். எப்போதும் இந்த முறையையே பின்பற்றலாம் எனவும் கூறினேன்.

ஊரடங்கு காலத்தில் உடல்நலனைப் போன்று மனநலன் என்பது மிகவும் அவசியமானது. மனதளவிலும் உடலளவிலும் திடமாக இருப்பது குறித்து விவாதித்தோம். ஆரோக்கியமாக இருக்க வீட்டில் என்ன செய்கிறேன் என்பதை பிரதமருடன் பகிர்ந்துகொண்டேன். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஓர் அணியாக விளையாட்டில் எப்படி வெற்றி பெறுகிறோமே அதே உத்வேகத்தோடு நாடு மக்களாகிய நாம் இந்த நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.