டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பிய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்றவர்களை சுகாதாரத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக கண்காணித்துவருகிறது. சென்னை புதுப்பேட்டையில் 4 பேருக்கும் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டையில் 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுதவிர மாநாட்டில் பங்கேற்றவர்களில் சிலரை அடையாளம் காண முடியவில்லை என சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். அரசின் கோரிக்கையை ஏற்று அடையாளம் காண முடியாத சிலர் தாங்களாகவே முன்வந்து தகவலைத் தெரிவித்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Also Read: `8 இடங்களுக்கு சீல்; ட்ரோன் மூலம் எச்சரிக்கை’ – சென்னையில் தெருக்களை மூடியதால் முடங்கிய 50,000 பேர்

கொரோனா வைரஸ்

மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முகவரியில் ஆள் இல்லாததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது. மேலும், சிலரின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவி நாடப்பட்டது. அதன்மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் எப்படி அடையாளம் காணப்பட்டார்கள் என்பதை சைபர் க்ரைம் போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், “கடந்த 12.3.2020-ல் டெல்லியிலிருந்து சென்னை வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் எஸ். 13-வது கோச்சில் 13 பேர் பயணித்துள்ளனர். 14.3.2020-ல் அவர்கள் சென்னை சென்ட்ரலுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மண்ணடிக்குச் சென்றுள்ளனர். அதன்பிறகு 14.3.2020-ல் மன்னை எக்ஸ்பிரஸில் எஸ்.8 என்ற கோச்சில் அவர்கள் பயணித்துள்ளனர். தஞ்சாவூருக்கு 15.3.2020-ல் சென்றுள்ளனர். அங்கு 2 நாள்கள் தங்கியிருந்த அவர்கள், 18.3.2020-ல் திருத்துறைப்பூண்டிக்குச் சென்றுள்ளனர். அங்கு 18,19 ஆகிய இரண்டு நாள்கள் தங்கியிருந்துள்ளனர். 20, 21, 22 ஆகிய தேதிகளில் முத்துப்பேட்டைக்குச் சென்றுள்ளனர். அடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாலயமங்களத்துக்குச் சென்று அங்கு 23,24 ஆகிய தேதிகள் தங்கியிருந்துள்ளனர்.

Also Read: டெல்லி சென்று திரும்பிய 8 பேர்.. மூடப்பட்ட மூன்று பகுதிகள்.. கொரோனா அச்சத்தில் ஊட்டி!

கொரோனா வைரஸ்

அதன்பிறகு அரசுக்குத் தகவல் தெரிந்து 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1.4.2020-ம் தேதி முதல் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற இடங்களில் பழகியவர்களையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் எஸ்.13 கோச், மன்னை எக்ஸ்பிரஸில் எஸ்.8 கோச் ஆகியவற்றில் அன்றைய தினம் பயணித்தவர்களின் விவரங்களை ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில் விவரங்களைச் சேகரித்து அவர்களையும் தனிமைப்படுத்திவருகிறோம். மேலும், இவர்கள் தங்கியிருந்த இடங்களில் பழகியவர்களையும் கண்காணித்துவருகிறோம். தமிழகத்தில் தென்பகுதியில் 243 பேர் டெல்லி சென்றுவிட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள விவரங்களும் உள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.

இதற்கிடையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. 1,580 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3,684 பேர் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 789 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. 484 பேருக்கு இன்னும் பரிசோதனை முடிவு வரவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் தீவிர கண்காணிப்பில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

சீல் வைக்கப்பட்ட தெரு

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கத்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலர் தேவையில்லாமல் ஊரைச் சுற்றிவருகின்றனர். அதன்காரணமாகத்தான் கொரோனா வைரஸ் வேகமாக தமிழகத்தில் பரவி வருகிறது. அடுத்து டெல்லியிலிருந்து வந்தவர்களாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.