திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் – ஜோதிமணி தம்பதி. இவர்களுடைய மகன் உபநிசாந்த் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட உபநிசாந்த், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசு பெற்றிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல நீச்சல் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசு பெற்றிருக்கிறார். இந்த நிலையில், முதல்பரிசாக கடந்த மூன்று ஆண்டுகளாக பெற்ற பரிசுத்தொகை 3,000 ரூபாயை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுத்து சிறுவன் உபநிசாந்த் அசத்தியிருக்கிறான்.

பையன் நடிகர் விஜயோட தீவிர ரசிகன். `எப்படியாவது விஜய்யை பார்க்கணும்ப்பா’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். நீ ஏதாவது சாதனை செஞ்சா, அவரைப் பார்க்க உன்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கேன்.

3,000 ரூபாயை முதலமைச்சர் வங்கிக் கணக்குக்கு டி.டி எடுத்த கையோடு, பெற்றோர்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனைச் சந்தித்து சிறுவன் பாராட்டு பெற்றிருக்கிறான். உபநிசாந்தின் தந்தை ரவிக்குமாரிடம் பேசினோம். “நான் டி-ஷர்ட்டை ரோட்ல போட்டு வியாபாரம் செஞ்சு வாழ்க்கையை நடத்திட்டு வர்றேன். சாதாரணமான குடும்பம்தான். இந்தக் கொரோனா வைரஸால் நாட்டில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கு. நாட்டில் நடக்கிற விஷயத்தை டிவி-யில் பாத்துக்கிட்டு இருந்தப்ப என்னோட பையன், `நாமளே இவ்ளோ கஷ்டப்படுறோம். நம்மளைவிட கஷ்டப்படுறவங்க நிறையபேர் இருக்காங்க. அவங்களுக்கு நம்மால முடிஞ்ச சின்ன ஹெல்ப் செய்யணும்’ப்பான்னு சொன்னான். நம்மகிட்ட காசு இருந்திருந்தா ஏதாவது உதவி செஞ்சிருக்கலாம்னு சொன்னேன். உடனே, `நான் சேர்த்து வச்சிருக்க பணத்தை வேணும்னா கொடுக்கலாமப்பா’ன்னு கேட்டான். இந்த வயசுல இப்படி ஓர் எண்ணம் உனக்கு வந்தது சந்தோஷம் கண்ணுன்னு நானும் ஓகே சொன்னேன்.”

தொடர்ந்தவர், “பையன் நடிகர் விஜய்யோட தீவிர ரசிகன். `எப்படியாவது விஜய்யைப் பார்க்கணும்ப்பா’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். நீ ஏதாவது சாதனை செஞ்சா, அவரைப் பார்க்க உன்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கேன். அப்படி அவரைப் பார்க்கப் போகணும்னா காசு வேணும்னு சொல்லி, நீச்சல் போட்டியில கிடைச்ச பரிசுப் பணத்தை பத்திரமா சேர்த்து வச்சிருந்தான். அந்தப் பணத்தை முதலமைச்சர் நிதி உதவிக்காக எடுத்துக்கொடுத்தான். முதலமைச்சர் அக்கவுன்ட்டுக்கு டி.டி எடுத்துட்டு கலெக்டரைப் போய் பார்த்தோம்.

சிறுவன் உபநிசாந்த்

கலெக்டர் சார் பையனை ரொம்ப பாராட்டினார். பையனுக்கு ரொம்ப சந்தோஷம். `நம்மளைவிட எவ்ளோ பணக்காரங்க இருக்காங்க. இதைப் பார்த்தா அவங்களுக்கும் கொடுக்கணும்னு தோணும்ல. நான் ஒலிம்பிக் போய் ஜெயிச்சு கஷ்டப்படுறவங்களுக்கு நிறைய உதவி செய்வேன்’னு சொன்னான். இந்த வயசுலயே கலெக்டர் முன்னாடி பெத்தவங்களுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்திருக்கான். எங்க பையனை நெனச்சி எங்களுக்கே பெருமையா இருக்கு” என்றார்.

இப்படியான குழந்தைகளின் செயல்களில் இருந்து, எதிர்கால இந்தியாவின் நம்பிக்கைக் கீற்றைப் பார்க்க முடிகிறது. சூப்பர் தம்பி..!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.