கொரோனா பாதிப்பால் சுமார் 5,000 ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி செய்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்து வேதனைப்படுகிறார்கள்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கருப்பம்புலம், நெய்விளக்கு, ஆதனூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெறுகிறது. இங்கு விளையும் முல்லைப்பூக்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, அதை தஞ்சை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருக்கும் பூ வியாபாரிகளுக்கு அனுப்பி வியாபாரம் செய்வது வழக்கம்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பூக்களைப் பறிக்க ஆட்கள் வருவதில்லை. சொந்தமாகப் பறித்தாலும் அந்தப் பூக்களை அனுப்பி வைக்க வாகன வசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர். இத்தொழிலில் சுமார் 10,000 விவசாயக் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கண்முன்னே பூக்கள் அழிவதையும் அதனால் பெருத்த நஷ்டம் ஏற்படுவதையும் கண்டு செயவதறியாது தவிக்கிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த பெரும்பாலான விவசாயிகள் தங்களின் குடும்பச் செலவிற்கும் மற்றும் மருத்துவச் செலவு திருமணம் மற்றும் விழாக்காலச் செலவுகளுக்காக தங்களிடம் பூக்களைக் கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகளிடம் ரூ.5,000 முதல் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர். விவசாயிகள் தங்கள் வசம் இருக்க வேண்டும் என்பதற்காக வியாபாரிகளும் அவர்கள் கேட்கும் பணத்தை முன்பணமாகக் கொடுத்து விடுவார்கள். பூக்களைக் கொள்முதல் செய்யும் போது கொடுத்த முன்பணத்திற்கு அசலும் வட்டியும் போக மீதத்தொகையை வழங்குகின்றனர்.

பூக்களைப் பறிக்க முடியாமலும் விற்பனை செய்ய முடியாமலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள இந்நிலையில், தாங்கள் வாங்கியுள்ள கடனுக்கு வியாபாரிகள் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை ஏற்று மனிதாபிமானம் உள்ள கருப்பம்புலம் பகுதி வியாபாரிகள் சிலர் பாதிப்பான காலத்திற்கு விவசாயிகள் வட்டி தர வேண்டாம் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். இதேபோல் மற்ற வியாபாரிகளும் அறிவிக்க வேண்டும் என மற்ற பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், அரசும் தங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.