‘கொரோனா’ மொத்த உலகத்துக்கும் பெரும் வில்லனாக உருவாகியுள்ள பெயர். இந்தக் கண்ணுக்குத் தெரியாத உயிரினத்தால் பல வகைகளில் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் தினம் தினம் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. கொரோனா என்ற பெயர் காதுகளில் விழாத நாள் வராதா என மொத்த மனித இனமும் ஏங்கித் தவித்து வீட்டில் முடங்கிப்போயுள்ளது.

கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட எந்தப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள்தான் அதிக சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்து அடுத்த வேலை உணவு இல்லாமல் பல நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் இருக்கும் தங்கள் கிராமங்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து வீட்டில் முடங்கிப்போயுள்ளனர்.

Also Read: ரயில்வே ட்ராக்கில் கிடந்த உடல்.. கொரோனா நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மன் அமைச்சர்!

இப்படி கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த மேகாலயாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேகாலயாவின் ஷில்லாங்கைச் சேர்ந்த ஆல்ட்ரின் லிங்டோ என்ற தொழிலாளி உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள ஓர் உணவு விடுதியில் வேலை செய்து வந்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர நாடு முழுவதும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கு

இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆல்ட்ரின் தான் தற்கொலை செய்து கொள்வதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தான் வசித்து வந்த வாடகை வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ` நான் ஆல்ட்ரின் லிங்டோ, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் பிறந்ததும் என் தாய் இறந்துவிட்டார். வளர்ந்த பிறகு என் சுய தேவைக்காக ஷில்லாங்கில் திருடனாக இருந்தேன். பின்னர் அது அனைத்தையும் விடுத்து புதிய வாழ்க்கையை வாழ்வதற்காக ஆக்ரா வந்தேன். இங்கு உணவகத்தில் வேலை செய்து சம்பாதித்து வந்தேன். 21 நாள்கள் ஊரடங்கால் அந்த வேலையும் போய்விட்டது. இனி நான் எங்கு செல்வேன்.

எனக்கான எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. தற்போது என்னால் எங்கும் செல்ல முடியவில்லை, இனி நான் எங்கே போவேன்? என் கடையின் உரிமையாளரும் என் மீது இரக்கம் காட்டவில்லை. அவர் என்னை எங்கு வேண்டுமானாலும் செல் எனக் கூறிவிட்டார். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள், எனக்குத் தற்கொலையைத் தவிர வேறுவழி தெரியவில்லை. அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது. உங்களுக்கு மனிதாபிமானம் இருந்தால் என் உடலை என் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துவிடுங்கள். அப்போதாவது சற்று நிம்மதியாக இருப்பேன். நான் விளையாட்டுக்கு எதுவும் சொல்லவில்லை, தயவு செய்து என் உடலை எடுத்துச் செல்ல உதவுங்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆல்ட்ரின்

இவரின் ஃபேஸ்புக் தகவலை அறிந்த ஆக்ரா போலீஸார் ஆல்ட்ரினின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரது உடலைக் கைப்பற்றி அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பின்னர் ஆல்ட்ரினின் இறுதி ஆசை போலவே அவரது உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.