நாட்டிலேயே கொரோனா வைரஸின் பரவல் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்தவண்ணம் இருப்பதால் மொத்த மாநிலமும் முடங்கிக்கிடக்கிறது.

மகாராஷ்டிராவில் தவிக்கும் இளைஞர்கள்

அங்கு பணியாற்றிவந்த ஏராளமான வெளி மாநிலத் தொழிலாளர்களுக்குப் போதிய உணவு, இருப்பிடம் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரமுடியாத நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு தவிப்பதாகக் கூறி 144 தடை உத்தரவையும் மீறி வெளி மாநிலத்தவர்கள் நடக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரிலிருந்து நடக்கத்தொடங்கியுள்ளனர். தொடர்ந்து 12 மணி நேரம் நடந்ததில் இவர்களால் 40 கி.மீட்டர் தூரம் நக்கமுடிந்துள்ளது. இந்த 40 கி.மீ நடையில் அவர்கள் பிஜாப்பூரை அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் தவிக்கும் இளைஞர்கள்

எப்படியாவது மகாராஷ்டிரா எல்லையைக் கடந்தால் போதும் என நடந்தவர்களை, மாநில எல்லையில் வைத்து பி.எஸ்.எஃப் படையினர் விசாரித்து வழிமறித்துள்ளனர். பின்னர் மாநில அரசுக்குத் தகவல் தெரிவித்து, இவர்களை மருத்துவப் பரிசோதனை மட்டும் செய்துவிட்டு அனுப்புவதாக அருகில் இருந்த தங்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளே அடைத்துள்ளனர்

சிறிய இடத்தில் நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களை அடைத்துவைத்து அவர்களை வெளியில் விடாமல் எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்யாமல், அடிப்படை வசதிகளும் செய்துதராமல் வதைப்பதாக இந்த இளைஞர்கள் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் தவிக்கும் இளைஞர்கள்

மகாராஷ்டிராவில் சிக்கித்தவிக்கும் நீலகிரி இளைஞர் அபிஷேக் நம்மிடம் பேசுகையில்,“இங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. பஸ், ரயில் எதுவும் இல்ல. சாப்பாடும், தங்க இடமும் இல்லாம தவிச்சோம். எதுவுமே இல்லாம சமாளிக்க முடியல. சரி எப்படியோ நடந்து இந்த ஊரை விட்டு வெளிய போனாபோதும்னு எல்லோரும் நடக்க ஆரம்பிச்சோம். பார்டரை நெருங்கும்போது எல்லாரையும் புடிச்சிக் கூட்டிட்டுவந்து அடைச்சிட்டாங்க. இங்க வந்தும் சாப்பாடு சரியா இல்ல. எல்லோரும் கூட்டமா இருக்கோம். எந்தப் பாதுகாப்பும் இல்ல. பாதிப் பேருக்குச் சாப்பாடுகூட தரல. தமிழ்நாடு மட்டும் இல்லாம கேரளாப் பசங்களும் இருக்காங்க. பாழடைந்த இடமா இருக்கு. உண்மையில இங்க வந்ததுக்கு அப்புறம்தான் பயமா இருக்கு. எங்கள எப்படியாவது எங்க ஊருக்குக் கூட்டிப்போக நடவடிக்கை எடுத்தாபோதும்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.