இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 1) மட்டும், புதிதாக 110 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, கேரளாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்துக்குத் தமிழகம் வந்திருக்கிறது.
பாதிப்புகளின் எண்ணிக்கை விறுவிறுவென அதிகரித்து வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வேகப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்ததைப் போல, தமிழகத்திலும் அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தனியார் மருத்துமனைகளையும் கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்த வேண்டும்” என்கிற கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்துவருகிறார்.
இது ஒருபுறமிருக்க, “ஆந்திராவைப் போல கார்ப்பரேட் மருத்துவமனைகளையும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்” எனச் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தி வருகிறார்.
“தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று, இன்று பெரிய மருத்துவர்களாக இருப்பவர்கள், அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியடைந்து இன்று கார்ப்பரேட் மருத்துவமனைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களை பணம் கொழிக்கும் இயந்திரங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். நாட்டு மக்கள் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிற நிலையில், இது போன்ற கார்ப்பரேட் மையங்கள் ஒதுங்கியிருப்பதை மனசாட்சி உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தற்போது நடக்கும் மருத்துவ அறப்பணியில் அவர்களை வலுக்கட்டாயமாக இணைக்கவேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கிறோம். மருத்துவமனைகள் மக்களுக்காகத்தான் என்பதை மறுந்துவிட்டு வணிகத்தை முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் தமிமுன் அன்சாரி.

தமிழகத்தில் மொத்தமாக 1,217 பொது மருத்துவமனைகளும் 293 சித்தா, ஆயுர்வேதா போன்ற சிகிச்சையளிக்கும் ஆயுஷ் மருத்துவமனைகளும் 10 பொதுக் காப்பீட்டு மருத்துவமனைகளும் 3 பாதுகாப்புத்துறை மருத்துவமனைகளும் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, 80,003 படுக்கை வசதிகள் இருக்கின்றன. அதில், 22,049 படுக்கைகள் தற்போது கொரோனாவுக்காகத் தயாராக இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆந்திராவை விட தமிழகத்தில் ஆறு மடங்கு அதிகம். ஆந்திராவிலேயே அப்படியொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் அப்படியொரு தேவை இருக்கிறதா?
சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தியிடம் பேசினோம்,
“ஸ்பெயினில் ஒட்டுமொத்தமாக தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தியிருக்கிறது. ஆந்திராவில் ஜெகன் தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் வரும் என்று சொல்லியிருக்கிறார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே அப்படியொரு தேவை இருக்கவே செய்கிறது. உலகளவில் முதல் ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்புவர இந்த வைரஸ் எடுத்துக்கொண்ட காலத்தைவிட, மிகக்குறைந்த காலத்தில் அடுத்த ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். அதைவிட மிகக்குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல லட்சத்தை எட்டிவிட்டது. தற்போது நாளொன்றுக்கு லட்சம் பேர் என்கிற விகிதத்தில் அதிகரித்து வருகிறது. அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் உலகளவில் அதிகமாக இருக்கிறது.

நல்ல மருத்துவக் கட்டமைப்பைக்கொண்ட இங்கிலாந்து, இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளே இந்த நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் திணறி வரும் நிலையில், பலவீனமான பொது சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட நம் நாட்டுக்குப் பல சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. இப்படியொரு பாதிப்பு வந்த பிறகு நிதி ஒதுக்கி, உபகரணங்கள் வாங்கி உடனடியாக எல்லாம் கட்டமைப்பை மேம்படுத்திவிட முடியாது.
அதேபோல, புலம் பெயர்ந்தோர் அதிகமாக வாழ்ந்துவரும் நம்நாட்டில், ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் தங்களின் ஊருக்குப் போகக் கூடினார்கள். இவர்களில் யாருக்காவது கொரோனா நோய்த்தொற்று இருந்து அது பரவியிருந்தால் அந்தப் பாதிப்பு இன்னும் ஒரு வாரம் கழித்துதான் தெரியவரும். டெல்லி நிஜாமுதினில் மக்கள் கூட்டமாகக் கூடிய இடத்தில் நோய்த்தொற்று பரவி அந்தப் பாதிப்புகளும் வெளியே வந்துகொண்டிருக்கின்றன. அதனால், நோய்த்தொற்று பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதனால் , இந்த விஷயத்தில் ஆந்திர முதல்வர் எடுத்த நடவடிக்கையைப் போல் தமிழகத்திலும் நல்ல கட்டமைப்பைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளை அரசு தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்” என்கிறார் மருத்துவர் சாந்தி.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 20,000 தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன. தொற்று நோய்ச் சட்டம் 1897-ன் படி பேரிடர்க் காலங்களிலும் அதிக தொற்று நோய் உள்ள காலங்களிலும் தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டை அரசு எடுத்துக்கொள்ளலாம். தற்போது ஆந்திராவில் இதைப் பயன்படுத்தியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஆனால், “தமிழக அரசு அப்படியொரு முடிவு எடுக்குமானால் அது தேவையற்றது. அதனால் எந்தப் பயனும் இல்லை” என்கிறார் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனின் தேசியத் துணைத்தலைவர் ஜெயலால்.
மேலும் அவர் பேசும்போது,
“தமிழகத்தில் அப்படியொரு நெருக்கடியான சூழல் தற்போது உருவாகவில்லை, இருந்தபோதும், தனியார் மருத்துவமனைகளில் 25 சதவிகிதப் படுக்கைகளை ஒதுக்குவதற்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கிறோம். இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டை அரசு முழுமையாக எடுத்துக்கொள்ளும் என்கிற அறிவிப்பு வேண்டுமானால் எளிமையாக இருக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு அந்த மருத்துவமனைகளைப் பராமரிப்பது, மருத்துவமனைப் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவது யார், கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்பன போன்ற சிக்கல்கள் இருக்கின்றன.

தமிழகம் முழுவதும் இருக்கின்ற பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஒரு படுக்கை வசதி மட்டுமே கொண்ட மருத்துவமனைகளாகத்தான் இருக்கின்றன. 25 முதல் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் 25 சதவிகிதம் இருக்கும். சுமார் 4,000 மருத்துவமனைகள் மட்டும்தான் அதற்கு அதிகமான படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகள்.
அரசின் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் மருத்துவமனைகளில், 25 சதவிகிதப் படுக்கைகளை ஒதுக்கி அரசுக்கு ஒத்துழைக்கத் தனியார் மருத்துவமனைகள் தயாராகவே இருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்வதில் நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. தவிர, கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய். இதை அனைத்து மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்வது என்பதும் நல்ல முடிவாக இருக்காது. சட்டம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அது பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம். அப்போது தனியார் மருத்துவமனைகள் என்பது மிகக்குறைவு. தற்போது 18,000 முதல் 20,000 மருத்துவமனைகள் இருக்கின்றன. இதில் குறிப்பிட்ட மருத்துவமனைகளை மட்டும் அரசு எடுத்துக்கொண்டால் அப்போதும் பிரச்னை வரும்.
Also Read: `இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 2.3 ஐசியூ படுக்கைகள்… நாம் செய்ய வேண்டியது..?”- மருத்துவர் அறிவுரை
ஜெகன் அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு அறிவிப்புதான். தவிர தமிழ்நாட்டில் இருப்பது போன்ற மருத்துவக் கட்டமைப்பும் ஆந்திர அரசு மருத்துவமனைகளில் இல்லை. அதனால் கூட அப்படி அறிவித்திருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும்தான் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மூன்றும் ஒரே அமைச்சரவைக்குக் கீழ் வருகிறது. ஒரே இயக்குநருக்குக் கீழ் வருகிறது. ஒருங்கிணைந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டது தமிழகம். தனியார் மருத்துவமனைகளை எடுப்பது ஒரு மேம்போக்கான முடிவு. அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தவிர அதை நடைமுறைப்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன” என்கிறார் ஜெயலால்.

தமிழ்நாட்டில் தனியார் மருத்துமனைகளை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய தேவை இருக்கிறதா?
தமிழக அரசுக்கு அப்படியொரு திட்டம் இருக்கிறதா?
தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், பீலா ராஜேஷிடம் பேசினோம்,
“தற்சமயம் அப்படி ஒரு தேவையில்லை. அவர்களும் எங்களுடன் இணைந்துதான் வேலை செய்து வருகிறார்கள். அவர்களும் லேப் டெஸ்ட் செய்து வருகிறார்கள். அவர்களிடமும் பேஷன்ட்ஸ் இருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்துவரை அரசும் தனியாரும் இணைந்துதான் வேலை செய்துவருகிறோம்” என்கிறார் பீலா ராஜேஷ்.
எது எப்படியோ, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாமல் மக்களைக் காக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.