ராமாயணம், மகாபாரதம் வரிசையில், ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வெளிவந்து அசுர ஹிட் அடித்த `சக்திமானை’யும் மறு ஒளிபரப்பு செய்யத்தொடங்கியிருக்கிறது தூர்தர்ஷன். உலகம் முழுக்க கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்த சோதனைக் காலத்தில், நம்மை மகிழ்ச்சியூட்ட மீண்டும் டி.வி -க்குள் வந்திருக்கிறார் சக்திமான். ஆனால், அந்த சக்திமானே ஒரு காலத்தில் ஒரு சோதனையைத் தொடர்ந்து சந்தித்திருக்கிறார்; அதுவும் சீரியலுக்கு வெளியே. அது என்ன?

90-களின் இறுதியில் சக்திமான் ஒளிபரப்பப்பட்டபோது, அதற்குக் கிடைத்த வரவேற்பு எப்படிப்பட்டது என்பதைச் சொல்லவே தேவையில்லை. நாடு முழுக்க குழந்தைகளின் ஒரே சூப்பர்ஹீரோ சக்திமான்தான். இப்படி அமோகமாக போய்க்கொண்டிருந்த தொடர், அடிக்கடி செய்திகளில் சர்ச்சைகளில் சிக்கத்தொடங்கியது. நாடு முழுக்க ஆங்காங்கே சக்திமான் நாடகம் பார்த்து குழந்தைகள் நிஜமாகவே சக்திமான் வந்து காப்பாற்றுவார் என நம்பி, உயரமான இடங்களிலிருந்து குதிப்பதாகவும், அதனால் விபத்துக்குள்ளாகி தீவிரமாகக் காயமுறுகின்றனர் என்றும் செய்திகள் வலம்வந்தன. எப்படி இப்போது சமூகக் குற்றங்கள் பலவற்றிற்கும் டிக்டாக் மீது பழிசுமத்தப்படுகிறதோ, அதேபோல சக்திமான் தொடர் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் எழுந்தன. இவை எதுவுமே அந்தத் தொடரின் வீச்சை பாதிக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் அதில் நடித்த மற்றும் அதன் ஒரு தயாரிப்பாளரான முகேஷ் கன்னாவை ரொம்பவே பாதித்தது. எங்கு சென்றாலும், சக்திமானாகக் கொண்டாடப்பட்ட முகேஷ் கன்னா, அதோடு, இதுபோன்ற விமர்சனங்களையும் அதிகம் எதிர்கொண்டார். அப்படிப்பட்ட விமர்சனங்கள் உச்சத்தில் இருந்த 1999-ம் ஆண்டில், அவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது ஜூனியர் விகடன். அந்தப் பேட்டியின் மொத்த சாராம்சமுமே இதுதான். அந்தப் பிரச்னையை அவர் எப்படி எதிர்கொண்டார், அந்தச் செய்திகளை சக்திமான் டீம் எப்படிக் கையாண்டது என்பது குறித்து அதில் விரிவாகப் பேசியிருக்கிறார், முகேஷ். அந்தப் பேட்டி அப்படியே இங்கே… #VikatanOriginals-ல்…

பிப்ரவரி 21,1999 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து… #VikatanOriginals

‘ஆத்பாந்தவரா… ஆபத்தானவரா’ என்று நாடு முழுக்க பதற்றத்தோடு கேள்வி எழுப்பும் அந்த மனிதர் படுபிஸியாக இருந்தார். அவர்தான்… `சக்திமான்’ தொடரின் கதாநாயகன் – முகேஷ் கன்னா.

மும்பை ஜுஹு ஏரியா… பாம்போஷ் பங்களா. ஜீ டி.வி சேனலுக்கான ஒரு சீரியலின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்க… கேமராவுக்கு வீரமுகம் காட்டிவிட்டு, சிம்மக்குரலில் சீறிவிட்டு, நடுவில் கிடைத்த இடைவேளையில் வந்து ரிலாக்ஸ்டாக சேரில் அமர்ந்தார். ஏராளமான பிஞ்சுக் குழந்தைகளைத் தனது பக்திமான்களாக்கியிருக்கும் `சக்திமான்’, ஜூ.வி-க்கு அளித்த விசேஷ பேட்டி.

(திடீர் சாலை விபத்தில் சிக்கி, லேசான காயங்களுடன் அவர் உயிர் பிழைத்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் அவருடன் இந்தச் சந்திப்பு.)

“பங்காபூரில் பன்னிரண்டு வயது சிறுவன், உங்கள் பேரைச் சொல்லிக்கொண்டு வீட்டுக் கூரையில் இருந்து குதித்திருக்கிறான். அந்தக் கிராமமே சக்திமானுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது என செய்தி வருகிறது. தார்வாடு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியும் சரி, ஜூ.வி -யில் நாங்கள் எழுதியிருந்த தஞ்சாவூர் சிறுவனும் சரி, உங்கள் படம் போட்ட தீப்பெட்டியால் உடம்பைக் கொளுத்திக்கொண்டு `சக்திமான் என்னைக் காப்பாற்று’ என்று அலறி அலறி உயிரைவிட்டிருக்கிறார்கள். சொல்லுங்கள்… `சக்திமான்’ ரோலில் நடிக்கும் நீங்கள் ஹீரோவா… வில்லனா?”

நெற்றியைப் பரபரவென அழுந்தத் தேய்த்துக்கொண்டே டென்ஷனாகிறார் `சக்திமான்’ முகேஷ் கன்னா. “

“இன்னும் கொஞ்சம் பேரை விட்டுட்டீங்களே… பீகாரின் பேகுசராயில் இரண்டு சிறுவர்கள் தீக்குளிப்பு என்றும் ஜெய்ப்பூரில் என் பேரைச் சொல்லிக்கொண்டே விளையாட்டாக வில் அம்பு விளையாட்டு விளையாடியபோது சிறுமியின் கண்ணை அம்பு துளைத்தது என்றும் அனுமார் வால் மாதிரி பத்திரிகைச் செய்திகள் நீண்டுகொண்டுதான்போகின்றன. இந்த மாதிரி குற்றப்பட்டியலை நானும் தொடர்ந்து மறுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். பத்திரிகைச் செய்திகளை எங்கள் சார்பாக தனியார் துப்பறியும் நிபுணர்கள் உடனுக்குடன் விசாரித்தபடி இருக்கிறார்கள். இதுவரை எட்டு இடங்களில் விசாரணைக்குப் போனவர்களில் மூன்று பேர் திரும்பி வந்துவிட்டார்கள்.

பிப்ரவரி 21,1999 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து…

அந்த மூன்று கேஸிலுமே அந்தக் குழந்தைகள் `சக்திமான்’ பேரைச் சொல்லிக்கொண்டுதான் ஆபத்தில் குதித்தார்கள் என்பது சுத்தப்பொய். முக்கியமாக, பேகுசராய் பகுதியில் எங்கள் துப்பறியும் நிபுணர்கள் கிராமம் முழுக்க அலசிவிட்டார்கள். அப்படி ஒரு தீக்குளிப்பு நிகழ்ச்சி நடந்ததாகவே தெரியவில்லையாம். நேரில் போய்க் கேட்டபோது, கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் பேந்தப் பேந்த முழித்திருக்கிறார். `போலீஸ் தகவலின்படிதான் எழுதினேன்’ என்று சொன்னதும் அந்தப் பகுதி எஸ்.பி-யை விசாரித்திருக்கிறார்கள். இப்படி ஒரு கேஸே வரவில்லை என்கிறார் எஸ்.பி.”

“நாடு முழுக்க ஒரே சமயத்தில் எப்படி இந்த வதந்திகள் கிளம்ப முடியும்?”

“அந்த ஜெய்ப்பூர் வில் அம்பு விவகாரத்தில் அம்பு குத்தியதுமே அந்தக் குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகிறார்கள். டாக்டர் சிகிச்சை தருகிறார். அந்தப் பெண் குழந்தை `சக்திமானை நினைத்துக்கொண்டு வில் அம்பு விளையாடினேன்’ என்று சொன்னதாக செய்தித்தாள்களில் வந்தவுடனே, அங்கே எங்கள் டிடெக்டிவ் டீம் விரைந்தது.

சொன்னால் நம்பமாட்டீர்கள்… ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இரண்டு நாள் வரை `சக்திமான்’ பேரே இந்த விஷயத்தில் அடிபடவில்லை. இரண்டாம் நாள் முடிவில் பைஜாமா குர்தா போட்ட ஒரு மர்ம ஆசாமி வந்து குழந்தையையும் அதன் உறவினர்களையும் பார்த்துவிட்டுப் போனதாக, சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டரே சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் சக்திமான் விவகாரம் பேப்பர்களில் அடிபட ஆரம்பித்தது. போதாக்குறைக்கு பிரபலமான ஒரு டி.வி சானலின் செய்திப் பகுதியில் சக்திமானை இழுத்து பரபரப்பு பண்ணியிருக்கிறார்கள். இதில் யாருக்கு எதிராக… எதற்காக இப்படி நாடுதழுவிய சதி நடக்கிறது என்பதை நிச்சயம் வெளிப்படுத்தத்தான் போகிறோம்!” என்று சொல்லி முகேஷ் கன்னா நம்மை திடுக்கிட வைக்க…

“எப்படி இருந்தாலும் குழந்தைகளின் இந்த அபாய ஆர்வத்துக்கு `சக்திமான்’ எங்காவது ஒரு தூண்டுதலாக இருப்பதை மறுக்க முடியுமா? இந்த சர்ச்சைகளே வேண்டாம் என்று `சக்திமான்’ தொடரில் நடிப்பதையே நிறுத்திவிட்டால் என்ன என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இது போனால் இன்னொரு சீரியல்..?”

சக்திமான் தொடரில்…

“சே… சே… நான் ஏன் அப்படி நினைக்க வேண்டும். நேற்றுதான் தொடரின் 56-வது வாரத்துக்காக நடித்துவிட்டு வந்தேன். எனக்கு 104 வாரங்கள் வரை `சக்திமான்’ ஒளிபரப்ப அனுமதி கொடுத்திருக்கிறது தூர்தர்ஷன். அபாயங்களுக்கு எல்லாம் இந்தத் தொடர்தான் காரணம் என்றால், நம் நாட்டில் மிகப் பெரிய பொறுப்பான மீடியாவாகிய தூர்தர்ஷன் எப்போதோ இதற்குத் தடை போட்டிருக்காதா? எங்கள் துப்பறியும் நிபுணர்கள் விசாரித்து முடித்த மூன்றாவது கேஸான ராஜஸ்தான் விவகாரத்தைச் சொல்ல மறந்துவிட்டேனே… கோட்டா என்ற பகுதியில் இருக்கும் அந்தச் சிறுவன், மன வளர்ச்சி குன்றியவன். அவன் வீட்டில் டி.வி கிடையாது. அக்கம் பக்கத்தில்கூட அவன் டி.வி பார்த்த மாதிரி ரிப்போர்ட் இல்லை. அப்புறம் எப்படி என் பேரைச் சொல்லிக்கொண்டு அவன் தீக்குளித்திருக்க முடியும்!” திடீரென சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார் `சக்திமான்’.

அந்தத் தொடரில், சோடாபுட்டி கண்ணாடியோடி வரும் என் அசட்டு கேரக்டர் சூறாவளி மாதிரி ஒரு சுற்றுச் சுற்றி அதன் முடிவில் சக்திமானாக மாறுவேன். பல தாய்மார்கள் என்னிடம் வந்து `அதேமாதிரி என் பையனும் வேகமாகச் சுற்றிக் கீழே விழுந்து காயப்பட்டுக்கொண்டான்’ என்று புகார் சொல்லியிருக்கிறார்களே தவிர, தங்கள் உயிரையே பணயம் வைத்ததாக நேரிலும் சொன்னதில்லை, கடிதம் மூலமாகவும் புகார் எழுதியதில்லை!'” நெற்றியில் சுருக்கம் விழ பேசுகிறார் முகேஷ் கன்னா.

அடுத்த ஷாட் ரெடி என்று அசிஸ்டன்ட் டைரக்டர் அழைத்தபோது, “இல்லை… இந்தப் பேட்டியை முடித்துவிட்டு வருகிறேன்” என்று விட்ட இடத்திலிருந்து கவலையோடு தொடர்ந்தார் –

“குழந்தைகள் விபரீத கற்பனையில் ஈடுபடக்கூடாது என்றுதான் `மேக்கிங் ஆஃப் சக்திமான்’ என்று ஒரு எபிசோடு முழுக்கக் காட்டினேன். இதில் சில ஸ்டன்டுகள் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை. நான் மேலே பறப்பது, குதிப்பது எல்லாமே என் உடம்பில் கட்டிய ஒரு கயிற்றின் உதவியோடுதான் என்பதை விளக்கியிருந்தேன்!”

ரொம்ப நேரம் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு இப்படிச் சொன்னார் முகேஷ் கன்னா – “அந்தக் காலத்தில் இல்லாத சில தப்பான விஷயங்கள் இன்றைய சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்றன. சதா சர்வ காலமும் வீடியோ கேம்ஸை அழுத்தி அழுத்தி அவர்கள் கைகளில் கட்டைவிரலுக்கு வேண்டுமானால் கொஞ்சம் வலி வரலாம். உடல் ரீதியிலான பயிற்சி இல்லாததாலேயே சில விபரீதமான சிந்தனைகளும் வருவது உண்மைதான்!”

அத்துடன் அவரை நாம் விட்டுவிடத் தயாராக இல்லை.

“மொத்த விபரீதத்தில் ஏதோ சதி இருக்கிறது என்றீர்கள். இன்னும் கொஞ்சம் விளக்கமாக உங்கள் குற்றச்சாட்டை சொல்ல முடியுமா?”

சின்னதொரு தயக்கம். பிறகு, “முக்கியமானது தொழில் ரீதியிலான காரணம். இந்தத் தொடரை ஆரம்பிக்க நான் பாடாய்ப் பட்டுக்கொண்டிருந்தபோது `பார்லே ஜி’ பிஸ்கட்காரர்கள் கொடுத்த ஆதரவு முக்கியமானது. அப்போதெல்லாம் இந்தத் தொடருக்கு ஸ்பான்சர் செய்ய மறுத்த ஏஜென்ஸிக்காரர்கள் இந்த மகத்தான வெற்றியைப் பார்த்துவிட்டு, `பார்லே ஜி-யைக் கைவிடுங்கள்… தொடரை எங்களுக்காக நடித்துக்கொடுங்கள்’ என்று கேட்டுத் தொந்தரவு செய்தனர். `எத்தனை லட்சங்கள் வந்தாலும் லட்சியத்தை விடமாட்டேன். மதிக்காதவர்களுக்கு நானும் மரியாதை தரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டேன். இப்போது இந்த நிழல் யுத்தம் நடத்துவது அவர்களாக இருக்கலாம்.

அடுத்து, என் சீரியலில் குட்கா மற்றும் ஜர்தாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு காட்டிக்கொண்டிருக்கிறேன். அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே பாழாக்கும் இந்த வஸ்துகளை உபயோகிக்கும் குழந்தைகள் சக்திமானின் எதிரிகள். என் நண்பர்களே அல்ல என்று சொல்லியிருக்கிறேன். சம்பந்தப்பட்ட லாகிரி வஸ்துக்களை வைத்து பணம் சேர்க்கும் யாராவது ஒரு கம்பெனிக்கு என்மேல் கோபம் இருக்கலாம்.

மூன்றாவது, என் அரசியல் சார்பு. சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் `சக்திமான்’ வேடத்திலேயே போய் பி.ஜே.பி-க்கு ஆதரவு பிரசாரம் செய்தேன். பி.ஜே.பி-யின் எதிரிகள் என்னைச் சங்கடப்படுத்தவே இப்படி ஸ்டன்டு செய்கிறார்களோ என்றும் சந்தேகப்படுகிறேன்.”

மனதில் அழுத்திக்கொண்டிருந்த குமுறலை வெளிப்படையாகச் சொன்னதில் மனம் லேசானாற்போல் கவலை மறந்து சிரிக்கிறார் முகேஷ்ஜி. “விரைவில் ஒவ்வொரு வாரமும் தொடரின் இறுதியில், `உடம்பு ஒரு கோயில்’ என்று ஐந்து நிமிடங்களுக்கு குழந்தைகளுக்கு யோகா சொல்லித்தரப்போகிறேன். டென்னிஸ், கபடி, பேஸ்கட்பால் போன்ற அவுட்டோர் விளையாட்டுகளின் அவசியத்தைச் சொல்லப்போகிறேன். கிரிக்கெட் போலவே மற்ற அவுட்டோர் விளையாட்டுகளுக்கும் ஒரு வரவேற்பை உண்டாக்கும் முயற்சி இது!”

முகேஷ் கன்னா

அடுத்து கொஞ்ச நேரத்தில் ஷூட்டிங் முடிய, `மேக்-அப்’ கலைத்துவிட்டு தன் டாடாமொபைல் காரை நோக்கி கிளம்பிய முகேஷ் கன்னா, நின்று நிதானித்து மறுபடியும் சொன்னார்…

“நான் பத்திரிகையாளர்களிடம் கேட்பதெல்லாம் ஒரே ஒரு உதவிதான்… `சக்திமான்’ மேல் பழிபோட்டு செய்தி வந்தால் தயவுசெய்து இந்தப் பின்னணியையும் மனதில் வைத்துக்கொண்டு தீர விசாரித்து செய்தி வெளியிடுங்கள். செய்வீர்கள்தானே?”

– மும்பையிலிருந்து, பி.கிருஷ்ணமூர்த்தி

Also Read: `சார், ஒரு நிமிஷம் சார்..!’ தூக்குமேடையில் `ஆட்டோ’ சங்கரின் இறுதி நொடிகள் #VikatanOriginals

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.