இன்று ராம நவமி. இதுவே இயல்பான சூழலாக இருந்தால் அனைத்து ஆலயங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். ராம கர்ப்ப உற்சவம் என்று யுகாதி தொடங்கி நவமி வரை பஜனைகளும் உற்சவங்களும் களைகட்டும். நவமி அன்று தொடங்கும் ஜன்மோத்ஸ்வம் அடுத்த 10 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெற்று சீதா கல்யாணத்தில் முடியும். இந்த 20 நாள்களும் பக்தர்களுக்கு மிகவும் விருப்பமான நாள்களாக இருக்கும். ஆனால், நாடெங்கும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆகம முறைப்படியிலான நித்திய பூஜைகள் மட்டுமே கோயில்களில் நடந்து வருகின்றன.

ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்

ஸ்ரீராமரின் அவதாரத் தலமான அயோத்தியிலேயே உற்சவங்கள் தடை செய்யப்பட்டுவிட்டன. இந்தச் சூழ்நிலை பல பக்தர்களைச் சோர்வடைய வைத்திருக்கிறது. ஆனால், இது வழக்கத்தைவிட மிகவும் உற்சாகமாக ராமனைக் கொண்டாடும் நேரம் என்கின்றனர் ஆசார்யர்கள். வீடுதோறும் ஸ்ரீராமனை வரவேற்றுக் கொண்டாட உகந்த நாள் என்கிறார்கள்.

பாவங்கள் தீர்க்கும் புண்ணிய சரிதம்

கேட்டதும் பாவங்கள் நீக்குவதும் படித்ததும் புண்ணியங்கள் அருள்வதும் ராமச்சந்திர மூர்த்தியின் சரிதம். இதை நாடெங்கும் பல்வேறு மகான்கள் எழுதி அருளியிருக்கிறார்கள். வால்மீகி காவியமாகச் செய்வதற்கு முன்பாகவே நாடெங்கும் ராம சரித்திரம் புகழ்பெற்றுவிளங்கியது. குறிப்பாகத் தமிழகத்தில் சங்க காலத்துக்கு முன்பாகவே ராம கதை புகழ்பெற்று விளங்கியது. கம்பர் ராமாயணம் படைப்பதற்கு 1,000 ஆண்டுகளுக்கு முன்பாகக் காணப்படும் சங்க இலக்கியங்களில் ராம சரித்திர நிகழ்வுகள் பாடப்பட்டுள்ளன.

ராமர்

புறநானூற்றுப் பாடல் (378) ஒன்றில் மன்னர் புலவர்களுக்கு வழங்கிய அணிகலன்களைப் பற்றிய குறிப்பில் ராமாயணக் காட்சி ஒன்று இடம்பிடிக்கிறது.

“நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு”

என்று மன்னன் பரிசளித்த நகைகளை எவ்வாறு அணிந்துகொள்ள வேண்டும் என்று தெரியாமல் தவறாக அணிந்துகொண்டது, ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது சீதை தன் அணிகலன்களைக் கழற்றிக் கீழே வீசிக்கொண்டே வந்தாள். அவற்றை எடுத்த குரங்குகள் அவற்றை எவ்வாறு அணிய வேண்டும் என்பதை அறியாமல் அணிந்ததைப்போல இருந்தது என்கிறது இந்தப் பாடல்.

அகநானூற்றுப் பாடலில் (70) ராமன் இலங்கை சென்று வெற்றி வாகை சூடி வந்து ராமேஸ்வரக் கரையில் தங்கியிருந்து வேதம் ஓதியமையை “வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த பல் வீழ் ஆலம் போல, ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே” தலைவியின் திருமணம் கண்டு வாயடைத்துப் போகப்போகும் மக்களுக்கு ஒப்புமைப் படுத்தும் தோழியின் கூற்றாகக் காட்டப்படுகிறது.

தமிழகத்துக்கும் ராமாயணத்துக்குமான தொடர்பு மிகவும் வலிமையானது. வேறு எந்த மாநிலத்தையும்விடவும் ராமாயண நிகழ்வுகளோடு தொடர்புடைய தலங்கள் மிகுதியாக தமிழகத்தில்தான் உள்ளன. இந்த நாளில் ராமாயணத்தோடு தொடர்புடைய இந்தத் தலங்கள் குறித்து சிந்திப்பது மிகுந்த புண்ணிய பலன்களைத் தருவதோடு தமிழகத்துக்கும் ராமாயணத்துக்குமான நெருங்கிய தொடர்பை விளக்கும்.

ராமர்

தமிழ்நாடெங்கும் ராமாயணத்தலங்கள்…

சென்னையில் இருக்கும் திருவான்மியூரில் தொடங்கி ராமேஸ்வரம் வரை தமிழகமெங்கும் ராமாயணத்தோடு தொடர்புடைய தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ராமர் வழிபட்ட தலங்கள் மட்டுமன்றி ராமாயணத்தில் வரும் பல நிகழ்வுகள் நடந்ததாகச் சொல்லப்படும் தலங்களும் இங்கு அதிகம். குறிப்பாக தாடகை, அனுமன், ஜடாயு ஆகியோரோடு தொடர்புடைய தலங்கள் அநேகம்.

கன்னியாகுமரி அருகே இருக்கும் மலை ஒன்றுக்கு தாடகை மலை என்றே பெயர். பார்ப்பதற்கு ஒரு அரக்கப் பெண் தலைவிரித்துப் படுத்திருப்பதுபோலத் தோற்றமளிக்கும். இங்கு காணப்படும் தெரிசனம் கோப்பு என்னுமிடத்தில்தான் விஸ்வாமித்திரர் யாகம் செய்ததாகவும் அதைத் தாடகை வந்து தடுத்ததாகவும் நம்பப்படுகிறது. ராமர் தாடகையை அழிக்க ஊன்றியிருந்த வில்லை எடுத்த தலம் வில்லுக்கீறி என்றும் சொல்கிறார்கள். தாடகையைக் கொன்ற பாவம் நீங்க ராமர் யாகம் புரிந்த இடம் விஜயாபுரி. இது கூடங்குளம் அருகே உள்ள கிராமம்.

ஜடாயு தொடர்பான தலங்கள்

ஜடாயுவுக்கு ராமாயணத்தில் முக்கியமான இடமுண்டு. அவரே சீதையின் இருப்பிடம் குறித்த முக்கியமான குறிப்பை ராமனுக்குச் சொன்னவர். மேலும், ராமனின் திருக்கரங்களாலேயே இறுதிச் சடங்கு செய்யும் பேற்றையும் பெற்றவர். அப்படிப்பட்ட ஜடாயு தான் செய்த தவத்தின் பலனாக உண்டான புனிதத் தீர்த்தத்தில் நீராடிய இடம் முக்கூடல். ஜடாயு, ராவணனோடு போரிட்டபோது அதன் ஒரு சிறகு வீழ்ந்த இடம் இறகுசேரி. ராவணனால் தாக்கப்பட்டு வீழ்ந்த இடம் வெள்ளைக் கரடு. இங்குதான் ஜடாயுவுக்கு ராமன் இறுதிச் சடங்குகளைச் செய்தான் என்று சொல்லப்படுகிறது. இதே போன்று திருப்புள்ளம்பூதங்குடி, கமுகத்தூர், சடாயபுரம், செதலப்பதி, ஜடாயுதீர்த்தம் என்று பல தலங்கள் ஜடாயுவோடு தொடர்புபடுத்திச் சொல்லப்படும் புனிதத் தலங்களாகும்.

ஜடாயுவுடன் தொடர்புடைய தலங்களிலெல்லாம் வழிபட பித்ரு தோஷம் நீங்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும் என்பது ஐதிகம்.

ராமர் உருவாக்கிய நவகிரகங்கள்

ராமபிரான் சனி பகவானை வழிபடுவதற்காக தேவிப்பட்டணம் என்னுமிடத்தில் கடலில் இறங்கி ஒன்பது பிடி மணல் எடுத்து நவகிரகங்களாக உருவாக்கினார். அப்போது கடல் கொந்தளித்து அவற்றைக் குலைக்க முற்பட, ராமன் தன் திருக்கரத்தை உயர்த்தி கடலின் கொந்தளிப்பை அடக்கினார். அதற்கு சாட்சியாக இன்றுவரைக்கும் அந்தப் பகுதியில் கடல், அலைகள் இன்றி அமைதியாகக் காட்சியளிக்கிறது. அங்கு அருளும் பெருமாளுக்கும் கடலடைத்த பெருமாள் என்பது திருநாமம். இங்கு ராமரை வழிபட்டால் சனிதோஷம் பரிபூரணமாக நீங்கும் என்பது நம்பிக்கை.

ராமர்

திருப்பங்கள் அருளும் திருப்புல்லாணி

ராமாவதாரத்தின் தொடக்கம் முதல் தொடர்புடைய தலம் திருப்புல்லாணி. தசரதன், பிள்ளை வரம் வேண்டி இங்கிருக்கும் ஜகந்நாதப் பெருமாளை வழிபட்ட பிறகே புத்திர காமேஷ்டியாகத்தைத் தொடங்கினான் என்பது ஐதிகம். ராமர் சீதையை மீட்க இலங்கைக்குச் செல்வதற்காகப் பாலம் அமைக்க சமுத்திர ராஜனின் அனுமதி வேண்டி மூன்று நாள்கள் தங்கிய இடமும் இதுதான். தர்ப்பைப் புல்லைத் தலையணையாகக் கொண்டு சயனித்த தலம் ஆதலால் திருப்புல்லணை என்றாகி திருப்புல்லாணி என்றானது. 

சீதையை மீட்கச் செல்லும்போதும் மீட்டுத் திரும்பி வந்தபோதும் ராமச் சந்திரமூர்த்தி இங்கு இருக்கும் ஜகந்நாதப் பெருமாளை வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக வேண்டிக்கொண்ட ராமருக்கு ஜகந்நாதப் பெருமாள் ஒரு அஸ்திரம் கொடுத்ததாகவும் அந்த அஸ்திரத்தின் மூலமே ராவணனை வெல்ல முடிந்தது என்றும் இதிகாசங்கள் சொல்கின்றன.

இது தவிர, ராமர் பயணம் செய்தபோது தரிசித்த தலங்கள், வழிபட்ட தலங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. திருமறைக்காடு, திருக்கண்ணபுரம், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பட்டீஸ்வரம், பாபநாசம், பார்ப்பான் குளம், புதுவயல், தீர்த்தகிரி, தர்மபுரி என்று பல்வேறு புண்ணியத் தலங்கள் தமிழகமெங்கும் காணப்படுகின்றன. ராமர் வழிபட்ட அனைத்துத் தலங்களும் வெற்றியை வழங்கும் தலங்களாகவே கருதப்படுகின்றன. வாழ்வில் போராட்டமான வாழ்க்கையை உடையவர்கள் கட்டாயம் இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபட்டால் வாழ்க்கை அமைதியாக மாறும் என்பது நம்பிக்கை.

அனுமன்

அனுமனும் தமிழகமும்

ராமாயணத்தில் மையமாகக் காணப்படுபவர் சொல்லின் செல்வர் அனுமன். அனுமன் தொடர்பான தலங்களும் பல அமைந்துள்ளன. கண்ட தேவி, தர்மபுரிக்கு அருகே உள்ள அனுமன் தீர்த்தம், மகேந்திரகிரி அனுமகுண்டம், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அனுமன் வால், திருக்குரக்குகா, சேந்தமங்கலம் என்று பல்வேறு தலங்கள் ராமாயண நிகழ்வுகளோடும் அனுமனோடும் தொடர்புடைய தலங்களாகும். போரின்போது அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலையின் துணுக்குகள் விழுந்த இடங்களில் உள்ள குன்றுகள் மருந்துமலைகளாக இன்று இருக்கின்றன. குருத்தமலை, மலை வையாவூர், புதுப்பாக்கம், ஒலகடம், மருந்துவாழ்மலை, சஞ்சீவி மலை, ஔஷத கிரி, சிங்கம்புணரி, சுருளி மலை, பர்வத மலை, நார்த்தா மலை, மருங்கப்பள்ளம், தலைமலை, அரகோண்டா ஆகிய மலைகள் சஞ்சீவி மலைகளின் துண்டுகளாகவே கருதப்படுகின்றன. துணுக்குகளே இத்தனை பெரியவை என்றால் சஞ்சீவி மலை எத்தனை பெரியதாக இருக்கும்… அதைக் கொணர்ந்த அனுமன் எவ்வளவு பிரமாண்டமானவராக இருப்பார் என்று எண்ணும்போதே வியப்பு மேலிடுகிறது.

அனுமன் வலிமையின் அடையாளம். அனுமன் அருள் இருந்தால் நவகிரக தோஷங்கள் நம்மை அணுகாது. தீராத நோயுடையவர்கள், மனபயம் முதலிய சிக்கல்கள் உடையவர்கள் அனுமனை வழிபட ஆரோக்கிய வாழ்வும் தைரிய மன நிலையும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

இல்லம்தோறும் ராம நவமி

ராம நவமி நாளில் நாம் அனைவரும் வீட்டிலேயெ ராமரை வழிபடலாம். ராமர் பட்டாபிஷேகப் படமோ, ராமர் சீதை அனுமன் இருக்கும் படமோ வைத்து வழிபாடு செய்யலாம். மலர்கள் சாத்தி அலங்கரித்து ராம நாமம் சொல்லி அர்ச்சனை செய்யலாம். ராம நாமம் சொல்வதன் மூலம் சகல மந்திர ஜபங்களையும் செய்த பலனைப் பெற முடியும். விஷ்ணு சகஸ்ர நாமம் முழுமையையும் சொன்ன பலனைப் பெற `ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே! ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!’ என்னும் வரிகளைச் சொன்னாலே போதும் என்கிறார் பரமேஸ்வரன். அத்தகைய ராம நாமத்தைச் சொல்லி நாம் அர்ச்சனை செய்தாலே ஸ்ரீ ராமனின் அருள்கிடைக்கும். எளிய நிவேதனங்களான மோர், பானகம் ஆகியனவற்றைச் செய்து படைத்து ராமநவமியை சிறப்பாகக் கொண்டாடலாம்.

திருப்புல்லாணி

பல துன்பங்களாலும் சிக்கித் தவிக்கும் நமக்குக் கிடைத்திருக்கும் அருமருந்து ராமநவமி உற்சவம். இந்த நாளில் தவறாமல் ஸ்ரீராமரை நம் வீடுகளில் வழிபட்டுப் பலன் அடைவோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.