1996, 1999, 2003, 2007 எனத் தொடர்ந்து இந்த உலகக்கோப்பைகளுக்கும் 2011 உலகக்கோப்பைக்கும் மிக மிக முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. அதுதான் டீம் எஃபர்ட். மேலே குறிப்பிட்ட நான்கு உலகக்கோப்பைகளிலும் கங்குலி, டிராவிட் எனச் சில பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் (96-ல் அப்படி ஒருவர்கூட இல்லை) ஒட்டுமொத்த பாரமும் சச்சின் எனும் ஒற்றை மனிதன் மீதுதான் இருந்தது. ஆனால், 2011 உலகக்கோப்பை அப்படியில்லை.

2007 உலகக்கோப்பைக் கொடுத்த மரண அடி இந்தியாவை 2011 உலகக்கோப்பைக்கு மிகவும் வலுவாகத் தயார்படுத்தியிருந்தது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், கம்பீர், கோலி என டாப் 4-ல் சிறந்த பேட்ஸ்மேன்கள். யுவராஜ் சிங், தோனி, யூசுஃப் பதான் (சுரேஷ் ரெய்னா) என மிடில் ஆர்டரும் மிகச்சிறப்பாக அமைந்த அணி இது. ஜாகிர் கான், முனாஃப் பட்டேல் (ஶ்ரீசாந்த்), ஹர்பஜன், அஷ்வின் என பெளலிங்கும் ஓகே. ஆல் ரவுண்டராக யுவராஜ் சிங் பெளலிங்கிலும் கலக்க உண்மையாகவே இந்தியாவின் ட்ரீம் 11 டீம் இது.

வீரேந்திர ஷேவாக்

வீரேந்திர ஷேவாக்:

உலகக்கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் முதல் மேட்ச் வெற்றி என்பது மிகுந்த நம்பிக்கைக் கொடுக்கக்கூடியது. முதல் போட்டியில் இந்தியா வங்கதேசத்தை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. 2007 உலகக்கோப்பையில் வங்கதேசத்துடன் தோற்று அவமானத்துடன் வெளியேறியது இந்தியா. அப்படியொரு தோல்வி இந்தமுறை நடந்துவிடக் கூடாது என்பதில் இந்திய அணி மிகக் கவனமாக இருந்தது. ஷேவாக் மற்றும் கோலியின் சதத்தால் இந்திய அணி 370 ரன்களைக் குவித்தது. அதுவும் ஷேவாக் வங்கதேச பெளலர்களை துரத்தித் துரத்தியடித்தார். 140 பந்துகளில் 14 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து 175 ரன்கள் குவித்தார் ஷேவாக். இன்னொரு பக்கம் கோலி 100 ரன்கள் அடித்தார். இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப்போட்டியில் வெற்றிபெற்றது.

2011 உலககோப்பையில் ஷேவாக் முதல் பந்தில் பவுண்டரி அடித்தாலே இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கையை விதைத்தார். தான் விளையாடிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் முதல் பந்தில் பவுண்டரி அடித்திருந்தார் ஷேவாக்.

சச்சின் டெண்டுல்கர்:

சச்சின் விளையாடிய 5-வது மற்றும் கடைசி உலகக்கோப்பை. இந்த உலகக்கோப்பையை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்பது போலத்தான் இருந்தது சச்சினின் ஆட்டம். லீக் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் சதம் அடித்து அசத்தியவர், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் அரைசதம் அடித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதிப் போட்டியில் 18 ரன்களிலேயே ஆட்டம் இழந்தாலும், 2011 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின்தான்.

9 போட்டிகளில் ஆடி 2 சதம், 2 அரைசதம் அடித்து 482 ரன்களை குவித்தார் சச்சின். ஆவரேஜ் மட்டுமே 54. இந்த உலகக்கோப்பையில் 500 ரன்கள் குவித்து பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் இலங்கையின் திலகரத்னே தில்ஷன்.

வெற்றி பெற்ற பிறகு, ஒவ்வொரு வீரரரும் சொன்னது இந்த வெற்றி சச்சினுக்காக என்று. அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து ஒட்டு மொத்தமாக வெற்றியை கிரிக்கெட்டின் கடவுள் சச்சினுக்கு சமர்ப்பித்தார்கள்.

கோலி – ரெய்னா

ரெய்னா & கோலி:

உலகக்கோப்பையை வெறும் 34 மற்றும் 36 ரன்களில் வாங்கித் தர முடியுமா? ரெய்னா வாங்கித் தந்தார். அவர் ஆடிய அந்த 2 ஆட்டங்கள்தான் இந்தியாவின் உலகக்கோப்பை கனவை நனவாக்கியது.

Raina won the World Cup for us with some crucial knocks – கேரி கிறிஸ்டன் லீக் போட்டிகளில் ரெய்னாவுக்கு ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. யூசுஃப் பதான் அந்த இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால், காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட ரெய்னா அணிக்குள் எடுக்கப்பட்டார். காலிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, பான்டிங்கின் சென்சுரியோடு 260 ரன்கள் அடிக்கிறது. இந்தியாவின் சேஸிங் சுமாராகப் போய்கொண்டிருக்கிறது. சச்சின், கம்பீர் இருவரும் அரை சதங்களோடு வெளியேற, யுவராஜ் சிங் மட்டுமே களத்தில் நம்பிக்கையுடன் இருக்கிறார். 38வது ஓவரில் தோனி அவுட்டாக 187 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை இழந்திருக்கிறது இந்தியா. 7-வது பேட்ஸ்மேனாக ரெய்னா களத்துக்குள் வருகிறார். 75 பந்துகளில் 74 ரன்கள் அடிக்க வேண்டும். நாக் அவுட் என்பதால் பான்டிங் இன்னும் வெறியாகி ஃபீல்டிங் செட்அப்பை மாற்றிக்கொண்டேயிருந்தார். யுவராஜ் சிங்கைப்போல, ரெய்னாவை செட்டில் ஆகவிடக் கூடாது என்கிற பான்டிங்கின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 28 பந்துகளில் 34 ரன்கள். பிரெட் லீ பந்தில் ரெய்னா அடித்த அந்த சிக்ஸர் இன்னும் கண்களுக்குள் இருக்கிறது.

அரை இறுதியிலும் அணியை மீட்டார் ரெய்னா. இந்த முறை முதல் பேட்டிங்கில் 205-க்கு 6 விக்கெட்கள் விழுந்துவிட, பின்னால் இருக்கும் டெய்ல் எண்டகளை வைத்துக்கொண்டு மேலும் 55 ரன்களை அணிகளுக்குச் சேர்த்தார் ரெய்னா. அவர் அடித்த 36 ரன்கள்தான் பாகிஸ்தானுடனான அன்றைய வெற்றியைத் தீர்மானித்தது.

கோலி தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியவர், இறுதிப் போட்டியில் முக்கியமான நேரத்தில் தூணாக நின்று 35 ரன்கள் அடித்தார். கம்பீருடன் சேர்ந்து அவர் எடுத்த பார்ட்னர்ஷிப் 83 ரன்கள்தான் தோனிக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

ஜாகிர் கான்:

2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று ஜாகிர் கான் பெளலிங். அந்தத் தொடரில்தான் Knuckle Ball எனும் புது பந்து வீச்சு முறையை அறிமுகப்படுத்தி பல பேட்ஸ்மேன்களைத் திணறடித்து 21 விக்கெட்களைத் தூக்கினார். இங்கிலாந்துடனான போட்டியில் சதம் அடித்து ஆடிக்கொண்டிருந்த ஸ்ட்ராஸை Knuckle Ball முலம் போல்ட் ஆக்கி மேட்ச்சை இந்தியா பக்கம் மாற்றிவிட்டார். அந்தத் தொடரில் வீசப்பட்ட சிறந்த பந்து அதுதான். பௌலர்களுக்குப் பெரிதும் உதவாத இந்திய ஆடுகளங்களில், துல்லியமாக வேகத்தை மாற்றி விரல்களின் மூலம் பந்தை விடுவிக்காமல், உள்ளங்கையிலிருந்து கொஞ்சம்கூட பிசிறில்லாமல் பந்தை விடுவித்து விக்கெட்டுகளைக் குவித்ததை உலகமே ஆச்சர்யமாகப் பார்த்தது.

கம்பீர்

கம்பீர்:

இந்திய அணிக்கு கோப்பையை சச்சின் பெற்றுத்தருவார், ஷேவாக் பெற்றுத்தருவார் என அனைவரும் நினைக்க, அவுட் ஆஃப் சிலபஸில் வந்து கம்பீர் பெற்றுத் தந்தார். 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அதிரடியாக ஆடி கோப்பையைப் பெற்றுத் தந்தவர், இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் கைவிடவில்லை. ஏற்கெனவே இந்தத் தொடரில் 3 அரைசதங்களையும் அடித்திருந்தார்.

இறுதிப் போட்டியில் 31 ரன்களுக்கு 2 விக்கெட்கள் போய்விட ரசிகர்கள் அனைவரும் கலங்கினார்கள். எங்கே 1996 அரை இறுதிப் போட்டி மாதிரி ஆகிவிடுமோ என்று பதற, கம்பீர் எந்தவித பதற்றமும் இல்லாமல் பக்குவமாக ஆடி 97 ரன்கள் அடித்து கோப்பையைப் பெற்றுத்தந்தார்.

யுவராஜ்:

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு Cherishable moment இருக்கும். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அதை நினைத்துப் பெருமைப்படுகிற மாதிரியான சம்பவம். அப்படி ஒரு தருணம் 2011 உலகக்கோப்பையில் யுவராஜ்க்கு கிடைத்தது.

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என்று எல்லாவற்றிலும் அடித்து விளாசினார் யுவராஜ். உலகக் கோப்பையில் 300 ரன்கள் ப்ளஸ் 15 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆல்ரவுண்டர் என்ற பெருமையையும், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் ப்ளஸ் 5 விக்கெட் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார் யுவராஜ்.

சென்னையில் கடும் வெயிலில் சோர்ந்து விழுந்தபோதும்கூட சதம் அடித்தவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 143 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தபோது சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இந்த இன்னிங்ஸ்தான் யுவராஜ் வாழ்க்கையில் ஆடப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்.

362 ரன்கள், நான்கு 50 ப்ளஸ் ரன்கள், ஒரு சதம், 15 விக்கெட்கள் 4 மேன் ஆஃப் தி மேட்ச், மேன் ஆஃப் த சீரியஸ் என்று எல்லாத் திசைகளிலும் சுழன்று அடித்தார் யுவராஜ்.

தோனி:

முயற்சி என்பது முடிந்தவரை செய்வது அல்ல எடுத்த காரியம் முடியும் வரை செய்வது. அதை 2011 இறுதிப்போட்டியில் சரியாகச் செய்தார் தோனி. 114 ரன்களுக்கு 3 விக்கெட்கள் போய்விட அடுத்து யுவராஜ் வருவார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க யாரும் எதிர்பாராவிதமாக மகேந்திர சிங் தோனி உள்ளே வந்தார். ஸ்பின்னர்கள் பெளலிங் போட்டுக்கொண்டு இருக்கும்போது Left /Right hand காம்பினேஷன் சரியாக இருக்கும் என்று யுவிக்கு முன்னால் களம்கண்டார் தோனி. மேலும், முரளிதரனை யுவராஜைவிட தன்னால் நன்றாகச் சமாளித்து ஆட முடியும் என்று எண்ணியவர் அதைக் களத்தில் நிரூபிக்கவும் செய்தார்.

தோனி – யுவராஜ்

Also Read: மீண்டும் மீண்டும் ரீ-வைண்ட் செய்யத்தூண்டும் ஏப்ரல் 2-ன் மாஸ் மொமன்ட்ஸ்! #Dhoni #2011Worldcup

எடுத்த காரியத்தை கம்பீருடன் சேர்ந்து கச்சிதமாகச் செய்தார். அவர் அடித்த வின்னிங் ஷாட் சிக்ஸ்தான் இந்திய கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் இளைய சமுதாயத்துக்கு ஒரு driving force. சாகும் தறுவாயில்கூட நான் கடைசியாகப் பார்க்க ஆசைப்படுவது தோனி அடித்த அந்த சிக்ஸர்தான் என்று கவாஸ்கரையே சொல்ல வைத்தது.

“Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years!” இப்போது இந்தக் கமென்ட்ரியோட அந்த வீடியோவைப் பாத்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெரிதாக சாதித்த சந்தோஷம் கிடைக்கும்.

இந்த வெற்றி, ஒருவரின் தனிப்பட்ட வெற்றி அல்ல; குழுவின் வெற்றி, அணி வீரர்கள் அனைவரின் வெற்றி; ரசிகர்களின் வெற்றி; ரசிகர்களுக்கான வெற்றி; ஒட்டு மொத்த இந்தியாவுக்கான வெற்றி; கிரிக்கெட்டை உயிர் மூச்சாக சுவாசிக்கும் கிரிக்கெட் விரும்பிகளின் வெற்றி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.