தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்குப் பிறகு, கோடை விடுமுறைதான் சினிமாத்துறையினருக்கான அடுத்த டார்கெட். அந்த வகையில் இந்த ஆண்டின் கோடை விடுமுறை டார்கெட் செய்த ‘மாஸ்டர்’, ‘சூரரைப் போற்று’, ‘ஜகமே தந்திரம்’, ‘கோப்ரா’, ‘பூமி’ போன்ற பெரிய படங்கள் வெளியாகக் காத்திருந்தன. இந்தப் படங்களைத் தவிர, இன்னும் பல சின்ன படங்களும் சம்மர் ரேஸில் இருந்தன. ஏப்ரல், மே ஆகிய இந்த இரு மாதங்களில் இத்தனை படங்கள் வெளியாவதால் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது எந்தப் படமும் வெளியாகாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். தற்போது இந்தப் படங்களின் ரிலீஸ் எப்போது என்று படக்குழுவாலேயே சொல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தப் படங்களைப் போல, இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரீலீஸுக்குத் தயார் நிலையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட பெரிய நடிகர்களின் படங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

V :

V

நானியின் 25-வது படம். நானியை ‘அஷ்டச்சம்மா’ என்ற படத்தில் அறிமுகப்படுத்திய மோகனகிருஷ்ண இந்திராகாந்திதான் இப்படத்தின் இயக்குநர். நம்ம வீட்டுப் பிள்ளையாகவே பார்த்த டோலிவுட் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் அவர் கொடுக்க நினைத்த சர்ப்ரைஸ் நெகட்டிவ் ஷேட். ஆம், இதில் அவருக்கு நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டராம். அதிதி ராவ், நிவேதா தாமஸ் என இரு ஹீரோயின்கள், பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதியின் பாடல்கள், தமனின் பின்னணி இசை என அசத்தலாக உருவாகியிருக்கும் இப்படத்தை தெலுங்கு வருடப்பிறப்பான உகாதியன்று (மார்ச் 25) வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். நானி அங்குள்ள அனைத்து இயக்குநர்களுக்கும் செல்லப்பிள்ளை என்பதால் இந்தப் படத்தின் பூஜைக்கு அவரை இயக்கிய பெரும்பாலான இயக்குநர்கள் வந்து இப்படத்தை ஆரம்பித்து வைத்தனர்.

லவ் ஸ்டோரி :

லவ் ஸ்டோரி

‘ஃபிடா’ படத்திற்குப் பிறகு, சேகர் கமுலா இயக்கவிருக்கும் படம் ‘லவ் ஸ்டோரி’. நாகசைதன்யா – சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்தின் கதை என்பது டைட்டிலேயே இருக்கிறது. மற்ற ஜானர் படங்களைக் காட்டிலும் லவ் சப்ஜெக்ட்டில் நாகசைதன்யா ஸ்கோர் செய்துவிடுவார் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக இருந்த இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் மட்டும் வெளியாகியுள்ளது. நாகசைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. தவிர, சாய் பல்லவியை டோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் இப்படத்தின் இயக்குநர் சேகர் கமுலாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரண்யா :

ஆரண்யா

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகியிருக்கிறது. மூன்று மொழிகளிலும் ராணா இருக்கிறார். தமிழ், தெலுங்கில் விஷ்ணு விஷாலும் இந்தியில் புல்கித் சாம்ராட்டும் நடிக்கின்றனர். காடுகளையும் வன விலங்குகளையும் காக்கப் போராடும் ஒருவனின் கதை. பாலிவுட் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இசை, ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் என டெக்னிக்கலாக பலமான அணியுடன் உருவாகியிருக்கிறது. தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘ஆரண்யா’ இந்தியில் ‘ஹாத்தி மேரா சாத்தி’ என மூன்று மொழிகளிலுமே பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ‘பாகுபலி’க்குப் பிறகு, ராணாவுக்குப் பெயர் வாங்கித்தரும் படமாக இருக்கும் என்கிறார்கள்.

வக்கீல் சாப் :

வக்கீல் சாப்

‘பிங்க்’ படத்தைத் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என எடுத்தது போல தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என எடுக்கப்படுகிறது. பவன் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். அஞ்சலி, நிவேதா தாமஸ் அகியோர் பாதிக்கப்பட்ட பெண்களாக நடிக்கின்றனர். வேணு ஶ்ரீராம் இயக்கம், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு, தமன் இசை என உருவாகி வருகிறது. இரண்டு வருடங்கள் கழித்து பவன் கல்யாண் நடிக்கும் படம், ‘பிங்க்’ ரீமேக் ஆகியவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றன. ஸ்ருதிஹாசன் இதில் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் உள்ளது. இப்படத்தை மே மாதம் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

இவைத் தவிர, ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, சமுத்திரக்கனி நடிக்கும் ‘க்ராக்’, மாதவன், அனுஷ்கா நடிக்கும் ‘நிசப்தம்’, ‘மகாநடி’ படத்திற்குப் பிறகு, கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிக்கும் ‘மிஸ் இந்தியா’, தமிழில் ஹிட்டான ‘தடம்’ படத்தின் ரீமேக்கான ‘ரெட்’ உள்ளிட்ட படங்களும் கோடை விடுமுறையில் வெளியாக இருந்தன.

மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்

மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்

‘சில சமயங்களில்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகிவரும் படம், ‘மரக்கார் : அரபிக்கடலின்டே சிம்ஹம்’. மிகப்பெரிய பொருள்செலவில் பிரமாண்டமாகத் தயாராகியுள்ள இப்படம், 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடலோரக் காவலர்களான குஞ்சாலி மரைக்காயர்களைப் பற்றியது. அதில் நான்காம் குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால் நடிக்கிறார். அவரின் சிறு வயது கேரக்டரில் அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். தவிர, மஞ்சு வாரியர், அர்ஜுன், பிரபு, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சினிமா வரலாற்றில் 100 கோடி செலவில் உருவாகியுள்ள முதல் படம் இது. தவிர, அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் மார்ச் 26-ம் தேதி இப்படம் வெளிவர இருந்தது. தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். ‘சிறைச்சாலை’ படத்திற்குப் பிறகு, மோகன்லால் நடித்துள்ள படத்தை வெளியிடுகிறார் தாணு.

ஒன் :

ஒன்

தனது மகன் துல்கர் சல்மானைவிட வருடத்திற்கு அதிக படங்கள் நடித்து வருகிறார், மம்மூட்டி. 2019ல் இவர் நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாயின. இந்த ஆண்டில் இதுவரை நான்கு படங்களைக் கைவசம் வைத்துள்ளார். அதில் ‘ஒன்’ என்ற படத்தில் கேரளாவின் முதல்வராக நடித்துள்ளார் மம்மூட்டி. பொலிடிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தை, சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்கியுள்ளார். ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம்தான் மம்மூட்டியின் 2020 அக்கவுன்ட்டைத் திறக்க இருந்தது. மம்மூட்டி கேரளா முதல்வராக நடிப்பதுதான் இதன் ஸ்பெஷல்!

குருப் :

குருப்

‘வரனே அவஷ்யமுண்டு’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என துல்கர் சல்மான் நடித்த படங்கள் இரண்டும் சூப்பர் ஹிட். அடுத்ததாக ‘குருப்’ என்ற படத்தைத் தயாரித்து நடித்திருக்கிறார். துல்கர் சல்மானின் முதல் படத்தை இயக்கிய ஶ்ரீநாத் ராஜேந்திரன்தான் இதன் இயக்குநர். 1980களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கேங்ஸ்டராக சுகுமார குருப்பாக துல்கர் நடிக்கிறார். தவிர, இந்திரஜித், சன்னி வெய்ன், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படத்தை ஏப்ரல் இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

துறமுகம் :

துறமுகம்

`கம்மாட்டிப் பாடம்’ திரைப்படத்துக்குப் பிறகு, ராஜீவ் ரவி இயக்கும் படம் இது. நிவின் பாலி நாயகனாக நடிக்கும் இந்தப் படமும், ராஜீவின் முந்தைய படத்தைப் போலவே பேசப்படாத மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்யும் படமாக இருக்குமாம். இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரங்களில், இந்திரஜித், ஜோஜு ஜார்ஜ், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ‘துறமுகம்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்தக்கதை, 1950களில் நடக்கும் பீரியட் டிராமாவாக இருக்கும். தொழிற்புரட்சி, எப்படி பாரம்பர்ய வாழ்வியல்மீது தன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதைக்களமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தில் நிவின் பாலி மீனவராக நடிக்கிறார்.

மாலிக் :

மாலிக்

‘டேக் ஆஃப்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் – ஃபஹத் பாசில் கூட்டணி, ‘மாலிக்’ படத்தில் இணைந்துள்ளது. பொலிடிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாக, இதில் ஃபஹத் கேங்ஸ்டராக நடிக்கிறார். அவரின் கேரக்டர் 20 வயதிலிருந்து 60 வயது வரை பயணிக்கும் என்கிறார்கள். சிறுவயது கேரக்டருக்காக 20 கிலோ எடை குறைத்து நடித்துள்ளார், ஃபஹத். அதேபோல 60 வயது போர்ஷனில் நடிக்க ஃபஹத் பாசில் தாத்தா எப்படி இருப்பார் என்பதை ரெஃபரென்ஸாக எடுத்துக்கொண்டு அவரது லுக்கை வடிவமைத்துள்ளனர். ஏப்ரல் 22-ம் தேதி இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

தெலுங்கு, மலையாளம் போக, இந்தியில் பல பெரிய படங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அமிதாப் பச்சன் – ஆயுஷ்மான் குர்ரானா நடித்த ‘குலாபோ சிதாபோ’, வித்யாபாலன் நடித்த ‘சகுந்தலா தேவி’ எனும் பயோபிக், அபிஷேக் பச்சனின் ‘லூடோ’, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கான ‘லக்‌ஷ்மி பாம்’, பிரபுதேவா இயக்கத்தல் சல்மான் கான் நடிக்கும் ‘ராதே’ உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் படங்கள் கோடை விடுமுறையைக் குறி வைத்து தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தாக்கம் குறைந்து உலகம் இயல்பு நிலைக்கு எப்போது திரும்புமோ அப்போதுதான் இந்தப் படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும். அப்போது சின்ன படங்கள் வெளியாக இருந்த தருணத்தில் இதுபோல பெரிய படங்கள் களமிறங்குவதால் சலசலப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.