கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு விவசாயிகளையும் விட்டுவைக்கவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் பலரும் அரசின் அறிவிப்புக்கு இணங்க சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்து வருகிறார்கள். 

பறிக்கப்பட்ட மிளகாய்

விவசாயத் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் விவசாயப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மிளகாய், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்டவற்றைப் பயிரிட்டுள்ள விவசாயிகளால் உரிய நேரத்தில் களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

Also Read: `கிலோ 4 ரூபாய்க்கு வாங்கக்கூட ஆள் இல்லை!’ – கொரோனா தாக்கத்தால் கலங்கும் முருங்கை விவசாயிகள்

நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனால், கடைமடைப் பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் இப்போதுதான் விளைச்சலுக்கு வந்துள்ளன. அவற்றை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் வயல்கள்

ஆனால், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். நெல் அறுவடை இயந்திரங்கள் வெளியூர்களிலிருந்து வாடகைக்கு எடுத்து வந்து அறுவடை செய்யப்பட்டுவந்த நிலையில், அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது.

நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி கடைமடைப் பகுதிகள், குளத்துப் பாசனப் பகுதிகள் என நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். ஒரு சிலர் தாங்களே முடிந்த அளவுக்கு அறுவடை செய்து, போக்குவரத்து இல்லாத சாலைகளில் கதிர் அடித்து நெல் மணிகளைப் பிரிக்கிறார்கள்.

விவசாயி சக்திவேல்

இது குறித்து நம்மிடம் பேசிய பாலாமடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல், “அறுவடை இயந்திரங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அறுவடை செய்வதில் சிக்கல் இருக்கிறது. அறுவடை முடிந்ததும் விவசாயிகளால் தாங்கள் பியிரிட்ட நெல்லை விற்பனை செய்வதற்கு வெளியிடங்களுக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. வியாபாரிகளும் வருவதில்லை என்பதால் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார்கள்.

இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நேந்திரம் வகை வாழை பயிரிடப்பட்டுள்ளன. அவை தற்போது விளைச்சல் முடிந்து வெட்டி விற்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இங்கிருந்து வாழைத்தார்களை கேரளாவுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்வது வழக்கம். இப்போது அதற்கான சூழல் இல்லை.

வாழைத் தோட்டம்

உள்ளூர் மார்க்கெட்டில் நேந்திரன் வாழைத்தார்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன. அதனால் அவற்றை வெட்டி எடுத்துச் சென்றால் அதற்கு ஆகக்கூடிய செலவு கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. அதனால் நன்கு விளைந்த வாழைத்தார்களை வெட்டாமல் இருப்பதால் தாரிலேயே பழுத்து வீணாகின்றன” என்று விவசாயிகளின் நிலை குறித்து வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது பற்றி விவசாயத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ”கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடர் காலத்திலும் விவசாயப் பணிகள் தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது. அதற்காகத் தமிழக வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Also Read: “ஐபிஎஸ் பணியிலிருந்து சமூக சேவையோடு இயற்கை விவசாயம் பக்கம் வந்தது ஏன்?” -`கர்நாடக சிங்கம்’ அண்ணாமலை

தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பல்வேறு டிராக்டர் நிறுவனங்களும் கட்டணமில்லாமல் வேளாண் இயந்திரங்களை வழங்கி உதவி செய்ய முன்வந்திருக்கின்றன. இந்த உதவியைப் பெற விரும்புபவர்கள் ‘உழவன் செயலி’ மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். இந்தத் திட்டம் தொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் அல்லது வட்டார உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.