கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் முடங்கியுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியில் வருகின்றனர். இந்தத் தடை உத்தரவை அலட்சியப்படுத்தும் மக்கள், வாகனங்களில் ஊரைச் சுற்றி வருகின்றனர். அவர்களைக் கண்காணிக்க தமிழகம் முழுவதும் போலீஸார் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.

Also Read: `நான்தான் கொரோனா..!’- வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டரின் `திகில்’ விழிப்புணர்வு

கொரோனா உறுதிமொழி

வாகனச் சோதனையில் சிக்குபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வதோடு வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துவருகின்றனர். சென்னையில் 1.4.2020 மாலை 6 மணி முதல் 2.4.2020 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு மீறிய குற்றத்துக்காக 388 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 184 இருசக்கர வாகனங்களும் 11 இலகு ரக வாகனங்கள், 5 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் வாகங்களை ஓட்டியதாக 81 வழக்குகளும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 73 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 78 இருசக்கர வாகனங்கள், 1 இலகு ரக வாகனம் என 79 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லத்தியைச் சுழற்றாமல் தினந்தோறும் புதுப்புது தண்டனைகளை சென்னை போலீஸார் கொடுத்துவருகின்றனர். சென்னை பாடி மேம்பாலத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரிடம் அவ்வழியாக ஊரைச் சுற்றிய பலர் சிக்கினர். அவர்களுக்கு போலீஸார் உடற்பயிற்சி செய்ய சொல்லிக் கொடுத்தனர். உடற்பயிற்சிகளைச் செய்ய பலர் சிரமப்பட்டனர். உடற்பயிற்சி முடிந்ததும் கொரோனா விழிப்புணர்வு உறுதியை ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டனர்.

கொரோனா உறுதி மொழி

சென்னை பாடி மேம்பாலத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரிடம் சிக்கியவர்கள், `வெளியில் வராதே, கொரோனாவை நெருங்காதே’ என்ற விழிப்புணர்வு பதாகைகளைக் கழுத்தில் தொங்கவிட்டபடி முகங்களில் கொரோனா மாஸ்குகளை அணிந்திருந்தனர். இந்தச் சமயத்தில் டூவீலரில் வந்த 2 பெண்களை போலீஸார் மடக்கினர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது தேவையில்லாமல் இருவரும் டூவீலரில் ஊரைச் சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து நடுரோட்டில் அவர்களை நிற்க வைத்த போலீஸார், கைகளை நீட்டி கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழியை எடுக்கக் கூறினர். அதன்படி இரண்டு பெண்களும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டு இனிமேல் நாங்கள் தேவையில்லாமல் வெளியில் வரமாட்டோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

சென்னை பாடி மேம்பாலத்தில் மட்டும் வில்லிவாக்கம் கொரட்டூர், திருமங்கலம் என போலீஸார் கூட்டாகச் சேர்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாலம் வழியாக அம்பத்தூர், கோயம்பேடு, அண்ணாநகர் ஆகிய இடங்களுக்குச் செல்ல ஏராளமான வாகனங்கள் வந்தன. ஏற்கெனவே போலீஸார் தடைகளை அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதன்காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவு நேரத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்தது.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

இந்தநிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாரின் உடல்நலனில் அக்கறை கொண்ட போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அனைவருக்கும் கபசுர குடிநீரை வழங்கினார். கபசுர குடிநீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் அனைவரும் ஆர்வமாகப் பருகினர். இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டதோடு அனைவரும் முகக் கவசங்களை அணிந்திருந்தனர். இதில் கூடுதல் கமிஷனர் ஜெயராம், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, நுண்ணறிவுப் பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசர், துணை கமிஷனர் மருத்துவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.