ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டம் அம்மா உணவகம். மாநகராட்சி சார்பில் அம்மா உணவகங்கள் நடத்தப்படுகின்றன. இங்கு காலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 5 ரூபாய்க்கு பொங்கல். மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், புதினா சாதம் என கலவை சாதமும் மாலையில் சப்பாத்தி ஆகியவை விற்கப்படுகின்றன. பெண்கள்தான் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 அம்மா உணவங்கள் செயல்படுகின்றன.

Also Read: `அளவு சாப்பாடு 10 ரூபாய்தான்..!’ -ரஜினி பிறந்தநாளையொட்டி `உழைப்பாளி உணவகம்’ தொடங்கிய ரசிகர்

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா

சென்னை மாநகராட்சி வார்டுகளில் 400 அம்மா உணவகங்களும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை எழும்பூர் அரசு மருத்துவமனை என 7 மருத்துவமனைகளிலும் அம்மா உணவங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 669 ரூபாய் கோடி செலவில் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இந்த உணவகங்களில் குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. போதிய வருமானம் இல்லை என்றாலும் சேவை நோக்கில் சென்னை மாநகராட்சி இந்த அம்மா உணவகங்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நடத்திவந்தது.

சென்னையில் உள்ள 70 அம்மா உணவகங்களில் தினமும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகதான் வருவாய் வந்தது. ஆனால் உணவுப் பொருள்களின் தயாரிப்பு, வேலை பார்ப்பவர்களின் சம்பளம் ஆகியவற்றைக் கணக்குப்பார்த்தால் மாநகராட்சிக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை. அம்மா உணவகங்களில் காலையில் விற்கப்படும் இட்லி, மாலையில் சப்பாத்திக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இயந்திரங்களின் உதவியோடு சாப்பாத்தி தயாரிக்கப்படுகிறது.

அம்மா உணவகம்

Also Read: `இட்லி இப்படித்தான் இருக்கும்.. இஷ்டம்னா சாப்பிடு..!’ -ஊட்டியைப் பதறவைக்கும் `அம்மா உணவகம்’

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேன்சன்களில் தங்கியிருப்பவர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டுவருகின்றனர். குறைந்த அளவில் செயல்படும் உணவகங்களில் பார்சல்களில் மட்டுமே விற்கப்படுகின்றன. ஊரடங்கிலும் அம்மா உணவகங்கள் திறம்பட செயல்பட்டுவருகின்றன. அங்கு வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதுகின்றன. அதனால் அம்மா உணவகங்களின் விற்பனையும் இருமடங்காக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் செயல்படும் 407 அம்மா உணவகங்களில் ஊரடங்கு உத்தரவுக்குப்பிறகு விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக சென்னையில் 7,000 முதல் 8,000 வரை இட்லிகள் விற்கப்படும். இந்த எண்ணிக்கை தற்போது இருமடங்காகியுள்ளது. அதைப்போல 10,000 முதல் 11,000 சப்பாத்திகள் விற்பனையாகிறது. அம்மா உணவங்களுக்குத் தேவையான உணவு தயாரிக்கும் பொருள்களை தங்கு தடையின்றி கொடுத்துவருகிறோம்” என்றார்.

அம்மா உணவகங்கள்

இதுகுறித்து அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்கள் கூறுகையில், “ஊரடங்கு சமயத்தில் அம்மா உணவகங்கள்தான் அட்சய பாத்திரமாக இருந்துவருகிறது. உணவகங்களில் குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் ஏழை, எளிய மக்களுக்கு உறுதுணையாக உள்ளது” என்றனர்.

சில தினங்களுக்கு முன் சென்னை சாந்தோமில் செயல்படும் அம்மா உணவகத்துக்குச் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயாரிக்கப்பட்ட உணவுகளையும் அவர் ருசிபார்த்தார். சென்னையில் சில அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் சிலர் உணவுக்கான பணத்தை மொத்தமாக செலுத்திவிடுகின்றனர். அதனால் இலவசமாகவும் மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.