கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியார் பொறியியல் கல்லூரியை பார்வையிட வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் குறித்த தகவல் வெளியானதால், கல்லூரி அருகே உள்ள கிராம மக்கள், கல்லூரி வாசலில் போராட்டத்தில் இறங்கினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி வாசலில் கிராம மக்கள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் உள்ளது தனியார் பொறியியல் மற்றும் பால்டெக்னிக் கல்லூரி. இக்கல்லூரியில், கொரோனா பாதிப்பு உடையவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்க, சிறப்பு வார்டு அமைக்க, மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அக்கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

Also Read: ”வாங்குன கடனுக்கு வட்டி கட்ட வேண்டாமா?!” -விலை குறைவால் வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்

இந்தத் தகவல் காட்டுத்தீ போல, கல்லூரி அருகே இருக்கும் திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளைமுகன்பட்டி, டி.சுப்புலாப்புரம் ஆகிய கிராம மக்களிடையே பரவியது. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இன்று, கல்லூரி வாயிலில் ஒன்றுகூடி, போராட்டத்தில் இறங்கினர்.

கொரோனா வைரஸ்

144 தடை உத்தரவை மீறி, கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்து வந்த ஆண்டிபட்டி போலீஸார், கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “இக்கல்லூரியில், கொரோனா சிகிச்சை வார்டு அமைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.!” என போலீஸார், கிராம மக்களிடையே கூறினர்.

அதையடுத்து, “எங்க ஏரியாவில் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கக் கூடாது. இங்கே மக்கள் குடியிருக்க வேண்டாமா? நாங்கள் கட்டுப்பாடோடு இருக்கிறோம். இங்கே கொரோனா சிகிச்சை வார்டு அமைத்தால், எங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எங்களை மீறி, இங்கே கொரோனா சிகிச்சை வார்டு அமைத்தால், பெரிய போராட்டமே நடக்கும்!” என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Also Read: ’70 ஆயிரம் மாஸ்க்; 16 குழுக்கள்’ -மாஸ் காட்டும் தேனி மகளிர் சுய உதவிக் குழுக்கள்!

இது தொடர்பாக ஆண்டிபட்டி வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டபோது, “அக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், கொரோனா சந்தேகத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்க முகாம் அமைக்கும் திட்டம் இருந்தது. மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அங்கே முகாம் அமைக்கப்படுமா? என்பது குறித்து கலெக்டர்தான் முடிவெடுப்பார்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.