உலகம் முழுக்கவே சம்மர் ரிலீஸ் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஆரம்பித்து யோகி பாபு படம் வரை சம்மர் டைமில் ரிலீஸ் செய்தால் படம் மினிமம் கியாரன்டி எனத் திரைத்துறையினர் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், அந்த நம்பிக்கையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியிருக்கிறது, கொரோனா. உலகம் முழுக்கவே கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால், சம்மர் ரிலீஸுக்காக ப்ளான் பண்ணி வைத்திருந்த ஹாலிவுட்டின் `நோ டைம் டு டை’ , `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியர்ஸ்’ போன்ற படங்களில் ஆரம்பித்து விஜய்யின் `மாஸ்டர்’ சூர்யாவின் `சூரரைப் போற்று’ படங்கள் வரைக்கும் பல படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகின்றன. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் எனப் பலர் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். சரி, 2020 சம்மர் ரிலீஸ்தான் இப்படி ஆகிடுச்சு; கடந்த 5 வருடங்களில் தமிழ் சினிமாவின் சம்மர் ரிலீஸ் எப்படி இருந்துச்சுனு பார்த்து மனச தேற்றிப்போமா.

2019:

Monster

2019-ம் ஆண்டின் சம்மர் ரிலீஸ் பயங்கர ட்ரீட்டாக அமைந்தது என்றே சொல்லலாம். எஸ்.ஜே.சூர்யா இளைஞர்களுக்கான நடிகர் என்பதை மாற்றி குழந்தைகளையும் தனது முகபாவனைகளால் சிரிக்க வைப்பார் என `மான்ஸ்டர்’ படம் மூலம் நிரூபித்திருந்தார். எலியை வைத்து படமெடுத்து பல குழந்தைகளைத் தனது பொறியில் குடும்பம், குடும்பமாக மாட்ட வைத்திருந்தார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அடுத்ததாக, சம்மர் என்றாலே அதில் ஒரு பேய்ப்படம் கட்டாயம் இருக்கும் என்கிற எழுதப்படாத விதிக்குச் சான்றாக `காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. லாரன்ஸ் எடுக்கும் பேய்ப்படங்களுக்கு குடும்பங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், இந்த முறையும் சொல்லிக்கொள்ளும்படி கல்லா கட்டியது. இந்தப் படங்கள் போக, சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட `என்.ஜி.கே’, 2கே கிட்ஸ்களின் நாயகன் ஹிப்ஹாப் ஆதி நடித்த `நட்பே துணை’, சிவகார்த்திகேயன் நடித்த `மிஸ்டர் லோக்கல்’, த்ரில்லர் ஜானர் பிரியர்களுக்கு ஏற்ற `வெள்ளைப்பூக்கள்’, `கே13’ எனப் பல படங்கள் ரிலீஸாகி சம்மரை கலக்கின.

2018:

Irumbuthirai

2018-ம் ஆண்டின் சம்மர் ரிலீஸ் இளைஞர்களுக்கான சம்மர் ரிலீஸ் என்றே சொல்லலாம். அடல்ட்ஸ் ஒன்லி படமான `இருட்டு அறையில் முரட்டு குத்து’வுக்குப் பல எதிர்ப்புகள் இருந்தாலும், அந்த ஆண்டின் சம்மரை ஒரு கலக்கு கலக்கியது என்றே சொல்லலாம். அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய `மெர்க்குரி’ படம் ஒரு நல்ல தியேட்டர் அனுபவத்தைக் கொடுத்தது. விஷால் நடித்து பி.எஸ்.மித்ரன் இயக்கிய `இரும்புத்திரை’, சைபர் க்ரைமைப் பற்றி பேசியதும் `மங்காத்தா’ படத்துக்குப் பிறகு அர்ஜுனின் வில்லத்தனமான நடிப்பும் மக்களை ஈர்க்க, படம் அதிரி புதிரி ஹிட்டானது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை `நடிகையர் திலகம்’ படம் மூலம் கண்முன் நிறுத்தினார்கள். அதிலும் குறிப்பாக சாவித்திரியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் நடிப்பு, அவருக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது. இவைமட்டுமல்லாது, `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் த்ரில்லர் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது.

2017:

பாகுபலி

2017-ம் ஆண்டின் சம்மர் ரிலீஸுக்கு `பாகுபலி’ என்கிற ஒற்றை பிரமாண்டமே போதுமானதாக இருந்தது. `பாகுபலி’ படத்தின் முதல் பாகம் எகிற வைத்த எதிர்பார்ப்புக்கு மொரட்டுத் தீனியாக `பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் இருந்தது. இது வேற்று மொழி படத்தின் டப்பிங் என்றாலும், அதையெல்லாம் மறந்து தமிழ் மக்களைப் பெரிதும் கொண்டாட வைத்தது. இந்தப் படத்தைத் தவிர்த்து தனுஷ் இயக்குநராக அறிமுகமான “ப.பாண்டி’ , ஒரு ஃபீல் குட் மூவி பார்த்த உணர்வைக் கொடுத்தது. இது போக, பேய்ப்பட பிரியர்களுக்கு `சங்கிலி புங்கிலி கதவ தொற’ படமும், காதலர்களுக்கு மணிரத்னம் இயக்கிய `காற்று வெளியிடை’ படமும் வெளியாகின.

2016:

Theri

பெரும்பாலும் பெரிய ஸ்டார்களின் படங்கள் பொங்கல், தீபாவளி விடுமுறைகளில்தான் ரிலீஸாகும். எப்போதாவது சம்மர் ரிலீஸ்களிலும் பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸாகும். அப்படி 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான `தெறி’ திரைப்படம், வெறித்தனமான வெற்றியைக் கொடுத்தது. விஜய் – அட்லீ கூட்டணியில் உருவான `மெர்சல்’, `பிகில்’ போன்ற படங்களுக்கு விதைபோட்ட முதல்படம் இதுதான். இதேபோல், டைம் ட்ராவல் எனும் ஹாலிவுட் ஜானரை மையமாக வைத்து வெளியான, சூர்யாவின் `24’ படமும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இதுபோக, `வல்லவன்’ படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து சிம்பு – நயன்தாரா சேர்ந்து நடித்த `இது நம்ம ஆளு’ படமும், உதயநிதியின் வழக்கமான படங்களில் இருந்து விலகி இருந்த `மனிதன்’ படமும் இதே சம்மரில் ரிலீஸாகின.

2015:

காஞ்சனா -2

2015-ம் ஆண்டின் சம்மர் ரிலீஸில் இரண்டு பேய்ப்படங்கள், ஒரு கிராமத்துப் படம், ஒரு காதல் படம், ஒரு கம்பேக் படம், ஒரு கமர்ஷியல் படம் எனப் பல படங்கள் ரிலீஸாகின. அதில் குறிப்பாக, சூர்யா படம், ஜோதிகா படம், கார்த்தி படம் என ஒரே வீட்டில் இருந்து மூன்று படங்களும் 2015 சம்மருக்கு ரிலீஸாகின. மாமனார் – மருமகன் உறவுமுறைப் பற்றி பேசி, குடும்ப ஆடியன்ஸை `கொம்பன்’ படம் என்டர்டெயின் செய்தது. `முனி’, `காஞ்சனா’ என்கிற இரண்டு வெற்றிப் பேய்ப்படங்களுக்குப் பிறகு `காஞ்சனா – 2’ திரைப்படம் 2015 சம்மரில் கலக்கியது. லிவ்வின் ரிலேஷன்ஷிப்பைப் பற்றிப் பேசி காதலர்களை தன்வசப்படுத்தியது, `ஓ காதல் கண்மணி’. திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஹீரோயின் ஜோதிகா, ரீ-என்ட்ரி கொடுத்த `36 வயதினிலே’ படமும், சூர்யா நடித்த `மாஸ் என்கிற மாசிலாமணி’ திரைப்படமும், பேய்ப்படத்தை வித்தியாசமான அணுகுமுறையில் சொன்ன `டிமான்ட்டி காலனி’ படமும் இதே சம்மரில்தான் ரிலீஸாகின.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.