உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், கரூர் மாவட்டத்திலிருந்து டெல்லிக்குச் சென்றுவந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகளின் பேச்சை மதிக்காமல் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரின் சகோதரர் வெளியில் நடமாடியிருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

உலகையே இப்போது உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் 21 நாள்களுக்கு ஊரடங்குக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு, எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி சீல் வைத்துள்ளது. அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் கடும் பாதுகாப்புகளையும் மீறி, அந்த நபரின் சகோதரர் வெளியில் சர்வசாதாரணமாக நடமாடியது இப்போது தெரியவந்துள்ளது.
Also Read: டெல்லி சென்று வந்த பேராசிரியருக்கு கொரோனா தொற்று! – கரூரில் முதல் பாதிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலையில் வசிக்கும் ஒருவர், சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்ததாகவும், அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், மருத்துவக் குழுவினர் அவரை அடையாளம் கண்டு, அவரது வீட்டில் பாதிக்கப்பட்டோருக்கான ஸ்டிக்கரை ஒட்டிவிட்டு, அந்த நபரை கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரது வீட்டில் உள்ளவர்களை வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் தனிமைப்படுத்தினர். தூய்மைத் தொழிலாளர்கள் அவரின் வீட்டில் கிருமி நாசினி தெளித்தனர்.
அவரது வீட்டில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என்று கண்காணித்தனர். அதோடு, கொரோனா வைரஸ் தொற்று உள்ள அந்த நபரோடு டெல்லி சென்றுவந்த 29 நபர்களையும் இனம் கண்டு, அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து, அவர்களையும் கண்காணித்துவருகின்றனர். இந்த நிலையில் கொரானோ வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நபரின் சகோதரர், மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தலுக்கும் பயமறியாது குளித்தலை நகரப் பகுதியில் சுற்றித்திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், குளித்தலை போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன், உழவர் சந்தை பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நபரை இனம்கண்டு, அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால், அந்த நபர் முன்னுக்குப் பின்னாக பேசியதன் அடிப்படையில், போலீஸார் அவரை அழைத்துக்கொண்டு போய், அவரது வீட்டில் வைத்து தனிமைப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, வீட்டின் முன்பு பாதுகாப்பிற்கு பேரிகார்டு போடப்பட்டு, தெருவில் உள்ள பகுதி வழியாக யாரும் செல்லாத வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சோதனை செய்துவருகின்றனர். குளித்தலை பகுதியில் முதன்முதலாக ஒருவருக்கு கொரானோ வைரஸ் தொற்று இருப்பதாக உறுதியாகியிருப்பதும், அவரோடு தொடர்பில் இருந்த அவரது சகோதரர் மருத்துவக் குழுவினரின் அறிவுரைகளை மதிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்ததும் குளித்தலை மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்திருக்கிறது.