கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால், நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மேலும் இந்த ஊரடங்கால் நாட்டில் பல கோடி பேர், தங்கள் வேலைகளைத் தற்காலிகமாக இழந்து வருமானமின்றித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய ரிசர்வ் வங்கி, அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருக்கும் கடனுக்கான  தவணையைச் செலுத்தாமல், மூன்று மாத காலம் கழித்துச்செலுத்தலாம் என்று அறிவித்திருந்தது.

அதேபோல் நிதி நிறுவனங்களையும் கடன் தவணையைக் கேட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாதென்றும் அறிவுறுத்தியிருந்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வருமானமின்றித் தவித்து வரும் சாமானிய மக்கள் பலரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

ஏப்ரல் மாதத்திற்கான தவணை சுழற்சி தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவணைகளைச் செலுத்தும் படியும், போதிய இருப்பைத் தவணைக்கு உறுதிப்படுத்திக் கொள்ளவும் வற்புறுத்தி வருகின்றன.

ஆனால், அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே நடப்பு மாதத்திற்கான இ.எம்.ஐ தொகையை இ.சி.எஸ் வாயிலாக சில வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்க ஆரம்பித்துவிட்டன. ‘அறிவிப்பு வந்தும், எங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து இ.எம்.ஐ தொகை பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறதே… ஏன் எங்களது வங்கி இந்த சிஸ்டத்தைக் கடைப்பிடிக்கவில்லையா? நாங்கள் மூன்று மாதமும் இ.எம்.ஐ தொடர்ந்து செலுத்த வேண்டுமா?’ என்ற குழப்பத்திற்கு மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். 

Also Read: `முதல்முறையாக நிதி ஆண்டை மாற்றியமைத்த ஆர்.பி.ஐ!’ -பின்னணி என்ன தெரியுமா?

கடந்த வெள்ளிக்கிழமை, இந்த மூன்று மாத தவணைத் தளர்வை ரிசர்வ் வங்கி அறிவித்தும், ஏப்ரல் மாதத்திற்கான தவணை சுழற்சி தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவணைகளைச் செலுத்தும் படியும், போதிய இருப்பைத் தவணைக்கு உறுதிப்படுத்திக் கொள்ளவும் வற்புறுத்தி வருகின்றன என மக்கள் மத்தியில் குற்றச்சாட்டாகவும் வைக்கப்பட்டது. 

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கொண்டு சேர்த்திருக்கின்றனவா? தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகளை வங்கிகள் அறிவித்து, நடைமுறைப் படுத்தியிருக்கின்றன… என்பதைத் தெரிந்துகொள்ள, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி உயர் அதிகாரிகளிடமும், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளிடமும் பேசினோம்.

அனைத்துச் சலுகைகளும், எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களையும் போய்ச்சேரும்! 

சிட்டி யூனியன் பேங்கின் மேலாண்மை இயக்குநர் காமகோடி, “மார்ச் 1-ம் தேதியிலிருந்து, மே-31-ம் தேதி வரை கட்ட வேண்டிய கடனுக்கான இ.எம்.ஐ தொகைக்கு ரிசர்வ் வங்கி மூன்று மாதம் தள்ளி வைத்துள்ளது. இது தள்ளி வைப்பே தவிர, தள்ளுபடி அல்ல. இது அனைத்து வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்தச் சலுகை மூலம் எங்கள் வங்கியின் அனைத்து வாடிக்கையாளர்களும் பயன் பெறலாம். அதற்கான திட்டங்களை நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஆயத்தமாக இருக்கிறோம். இந்தச் செய்தியை அவர்களுக்குத் தனித்தனியாக மெயில் மூலம் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.  

சிட்டி யூனியன் வங்கியைப் பொறுத்தவரை, இந்தத் தவணை காலதாமதச் சலுகையைத் தவிர, இன்னும் சில சலுகைகளை எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம். கிட்டத்தட்ட மூன்று வாரம் ஊரடங்கில் இருக்கிறோம் என்பதால், வங்கியில் கடன் பெற்று, தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நிதி நெருக்கடி அதிகமாக இருக்கும். அவர்கள், ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன்களுக்கு பிப்ரவரி மாதம் 29-ம் தேதி வரை முறையாக தவணைத்தொகையைச் செலுத்தியிருக்கும் பட்சத்தில், நாங்கள் அவர்களுக்கு, வாங்கியிருக்கும் கடன் தொகையிலிருந்து கூடுதலாக 15% எக்ஸ்ட்ரா கடனுதவி வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

சிட்டி யூனியன் பேங்க்

தனிநபர்களுக்கும் கடன் தேவைகள் இருக்கும்பட்சத்தில், முறையான ஆவணங்களுடன், அவர்களும் எங்கள் வங்கியை அணுகலாம். 25 கோடிக்குக் கீழ் கடன் பெற்றிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கடனை மறு சீரமைப்பு (Restructuring) கட்டமைப்பு செய்வதற்கும் மத்திய அரசாங்மும், ஆர்.பி.ஐ-யும் பரிந்துரை செய்திருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளையும் எங்களுடைய வங்கி, வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான தடையுமின்றிச் செய்துகொடுக்கும். ஆனால், அவர்களும் பெற்றிருக்கும் கடனுக்கு பிப்ரவரி 29-ம் தேதி வரை முறையாக தவணைத்தொகையைச் செலுத்தி வந்திருக்க வேண்டியது அவசியம்” என்றார்.

வங்கிக்கும், வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும் ஒரே விதிமுறைதான்! 

ஆர்.பி.ஐ அறிவிப்புக்கு வங்கிசாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி,  நவரத்னா ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஆர்.கணேசனிடம் பேசினோம். “ரிசர்வ் வங்கியின் ஆணைப் படி, வங்கிகளும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்களிடம்  கடன் தவணையைக் கேட்டு வற்புறுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அவர்களின் பரிந்துரையை ஏற்று, எங்களுடைய வாடிக்கையாளர்களும் இந்தச் சலுகை மூலம் பயன்பெறும் நோக்கில், அனைவருக்கும் இந்தச் செய்தியை அறிக்கையாக மெயிலில் அனுப்பியிருக்கிறோம். அடுத்த மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ தொகையை அவர்கள் கட்டத்தேவையில்லை. தள்ளிக் கட்டிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Also Read: `முதல்முறையாக நிதி ஆண்டை மாற்றியமைத்த ஆர்.பி.ஐ!’ -பின்னணி என்ன தெரியுமா?

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்.எம்.எஸ்!

கனரா வங்கியின் உயர் அதிகாரியிடம், உங்களுடைய வங்கி நடைமுறை என்ன என்பது குறித்து பேசினோம். “எங்களுடைய வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி, அனைத்துச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இது சார்ந்த அறிவிப்புகளை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பியிருக்கிறோம். அவர்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, மேலும் அவர்களுக்குக் கடன் கொடுப்பது மூலமாக கனரா வங்கி அவர்களுடன் துணை நிற்கும்” என்றார்.

சுற்றறிக்கை போய்ச் சேராததால்தான் இந்தச் சிக்கல்!

இ.சி.எஸ் முறையில் வங்கிக்கடனைச் செலுத்துவோருக்கும், கிரெடிட் கார்டு மூலம் வங்கிக்கடன் பெற்றவர்களுக்கும் மூன்று மாதத்தவணையை ஒத்திவைத்திருப்பது பொருந்துமா என்று அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.சேகரனிடம் கேட்டபோது, ” வங்கி நிர்வாகம் முடிவெடுத்திருந்தாலும், இன்னமும் அதுகுறித்த சுற்றறிக்கை பெரும்பாலான வங்கிக் கிளைகளுக்கு அனுப்பப்படாமல் இருக்கிறது. இதனால் வங்கிகளும், வங்கியின் வாடிக்கையாளர்களும் சில இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இன்றைய தினம், அனைத்து வங்கிகளும் ஆண்டு இறுதிக் கலந்தாய்வுக்கூட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள். முறையான சுற்றறிக்கை வந்தபின் ஓரிரு நாள்களில் இதுகுறித்து தெளிவான பதில் கிடைக்கும்” என்றார். 

Reserve Bank of India

வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை!

எஸ்.பி.ஐ வங்கியின் தரப்பில் அதன் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் விசாரித்தபோது, பொதுவாக மத்திய அரசின் தரப்பில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்படும். அதன் பின்னரே அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி செயல்படுவார்கள். மூன்று மாத காலத்துக்குத் தவணையைத் தள்ளிவைத்திருப்பது குறித்து இன்னமும் சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை. எனினும், வங்கிக்கடன் வாங்கியவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வங்கியின் தலைமை அதிகாரி குறிப்பிட்டது போலவே, ரிசர்வ் வங்கியின் கட்டளையை ஏற்று, வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை வங்கி வழங்கும். அவர்கள் அச்சப்படத்தேவையில்லை” என்றார்.

தனியார்த் துறையைச் சேர்ந்த சில வங்கிகளிடம் பேசிய போதும், அவர்களும் வாடிக்கையாளன் நலன் கருதி, சலுகைகளை அறிவித்திருப்பதாகத் தெரிவித்தார்கள். குறிப்பாக, பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றான, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மும்பைக் கிளை அலுவலகத்தின் மீடியா பிரிவின் அதிகாரி ரவீந்தரன் சுப்ரமணியன், “எங்களுடைய வங்கி வாடிக்கையாளர்களுக்கு எப்போதுமே சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அதே சேவையைத் தொடர்ந்து செய்வோம். அதனால், அவர்கள் கவலை கொள்ளத்தேவையில்லை. ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் அறிவிப்புகளின்படி, மூன்று மாதங்களுக்கான கடன் தவணைத் தொகையை அவர்கள் கட்டத் தேவையில்லை. அந்தத் தொகையை, கடனுக்கான கால அளவுகளை மூன்று மாதம் அதிகமாக்கிக் கொள்வதன் மூலம், திருப்பிச் செலுத்தலாம்.

Also Read: இஎம்ஐ ஒத்திவைப்பு; கிரெடிட் கார்டுக்கு பொருந்துமா? -ஆர்பிஐ அறிவிப்பை விளக்கும் வங்கி ஊழியர் சங்கம்

ஆட்டோமேட்டிக் சிஸ்டம் என்பதால், கட்டாமல் போகும்போது தாமதக் கட்டணங்கள் பிடித்தமாக வாய்ப்பிருக்கிறது. அப்படி பிடித்தம் செய்தாலும் அதைத் திருப்பித் தரச்சொல்லி ஆர்.பி.ஐ சொல்லியிருக்கிறது. காலதாமதக் கட்டணம் பிடித்தம் செய்யாமல் இருக்க வங்கி சார்பில், வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. மூன்று மாதம் காலதாமதமாகக் கட்டுவதால், வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது. வங்கிகளுக்கு எம்.பி.ஏ ஆகாது.

மூன்று மாதம் கழித்து, கடனுக்கான வட்டியையும் அசலையும் சேர்த்து மொத்தமாக கட்ட வேண்டும் என மக்களின் சிலர் தவறாக பிரிந்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் அப்படியில்லை. உங்களுடைய கடனுக்கான கால அளவு என்னவோ, அதற்கான வட்டி மட்டுமே. எக்ஸ்ட்ரா வட்டி அல்ல. அதையும் நீங்கள் இந்த 3 மாதங்களுக்கு கட்டாயம் கட்டத் தேவையில்லை.

உதாரணத்திற்கு, 50 மாத கடன். மூன்று மாதம் கட்டவில்லை என்றால், மொத்த கடன் கால அளவு 53 மாதங்களாகும் அவ்வளவே. ஆனால் கடனுக்கான வட்டி, நீங்கள் கடன் எடுத்திருக்கும் 50 மாத கால அளவுக்கு மட்டுமே. ஏனெனில் சிஸ்டமேட்டிக் என்பதால், இதை எந்த வங்கியாலும் மாற்றத்திற்கு உட்படுத்த முடியாது. கடனுக்கான கால அளவு மட்டும்தான் அதிகமாகிறதே தவிர, வட்டி அதிகமாகாது. மூன்று மாதம் கழித்தும் வழக்கமான இ.எம்.ஐ பிடித்தம் செய்யப்படும்.

50 மாதங்களுக்கு கட்ட வேண்டிய இ.எம்.ஐ , 53 மாதங்களாக கட்டும்போது வங்கிகளுக்கும் நஷ்டம் ஏற்படாது.

மக்கள் இப்போதைக்கு லேட் பேமெண்ட், செக் பவுண்ஸ் கட்டணங்கள் என எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் சிஸ்டம் அப்டேட் படி அனைத்தையும் வங்கி எப்போதும் போலவே நடைமுறைப்படுத்தும். ஜூன் மாதம் முதல் தேதியில் அவை அனைத்தும் சரி செய்யப்படும். உங்களுக்கு கட்டணங்கள் போடப்பட்டிருந்தால், அது நீக்கப்படும்.

இப்போது இ.எம்.ஐ பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அதை வங்கியிடம் தெரிவித்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ந்து இ.எம்.ஐ செலுத்த நினைப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் கூடுமானவரை கடன் வங்கிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொள்ள வேண்டாம். அதில் பணம் இருந்தால் நிச்சயமாக பிடிக்கப்படும்” என்றார் தெளிவாக.

வங்கியின் கடன் வசூலிக்கும் நடைமுறைகள் அனைத்துமே ஆட்டோமேட்டிக் என்பதால், அதன்படி வசூல் ஆரம்பமாகியிருக்கிறதே தவிர எந்த வங்கிகளும் அரசின் கட்டளையைப் பின்பற்றாமல் இல்லை. அரசு சொல்லியிருக்கும் விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் ஃபாலோ செய்கின்றன என்பது, வங்கி உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேசிய பிறகு தெளிவாகியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.