கொரோனா…. இன்று உலகையே அச்சுறுத்தி வரும் பெயர். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ், இன்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைக் குடித்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இது வரை 1657 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 124 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மோடி சித்தா, யுனானி, ஆயுர்வேத மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் கொரோனா குறித்த அறிகுறிகளை முன்னிறுத்தி இதற்கு கபசுர குடிநீரைத் தினமும் 60 மிலி குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.

அன்றிலிருந்து இன்று வரை சித்த மருத்துவமனைகளிலும், நாட்டு மருந்தகங்களிலும் கபசுர குடிநீரை வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர். ஆனால் ஒரு சில மருத்துவர்கள், கபசுர குடிநீரானது முற்றிலும் சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே அருந்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆகவே கபசுர குடிநீர் குறித்த தெளிவான விளக்கத்தைத் தெரிந்து கொள்ள சித்த மருத்துவர் மரு.க.மது கார்த்தீஷ் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் அளித்த சில எச்சரிக்கைகளும், ஆலோசனைகளும் பின்வருமாறு:-

கபசுர குடிநீர் என்றால் என்ன ?

கபசுர குடிநீர் என்பது கபம் சம்பந்தமான அதாவது சளி, இருமல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கட்டுப்படுத்துவதற்குக் கொடுக்கப்படும் ஒரு கஷாயம் அவ்வளவே. இந்த கஷாயத்தில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை,வட்டத்திருப்பி வேர், நில வேம்பு உள்ளிட்ட 15 வகையான மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இது கொரோனாவுக்கான மருந்தல்ல. இது ஒரு அனுமான குடிநீர் மட்டுமே.

image

 

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு 234 ஆக உயர்வு

கபசுர குடிநீரை அனைவரும் குடிக்கலாமா?

இல்லை. இந்த குடிநீர் அனைவரும் குடிக்கத்தகுந்ததல்ல. சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே இதனை அருந்த வேண்டும். அவர்களும் அதனைக் கால் டம்ளர் அளவு மட்டுமே அருந்த வேண்டும். அப்படி அருந்தும் போது குடிநீர் சூடாக இருப்பது அவசியம். ஏனெனில் இந்த மூலிகைகள் அதிக வீரியம் கொண்டவை. இந்த வீரியத்தைக் கொஞ்சம் குறைப்பதற்காகக் குடிநீரைக் கொதிக்க வைத்தல் அவசியமாகிறது. இதுமட்டுமில்லாமல் ஒரு கஷாயத்தின் கால அளவு என்பது 3 மணி நேரம் மட்டுமே ஆகவே தயாரித்த 3 மணி நேரத்தில் இதனைக் குடிப்பது முக்கியமானது. கபசுர குடிநீரைக் குடிக்கும் போது அதோடு நீங்களாக எந்த பொருளையும் உட்கொள்ளக் கூடாது.

இதில் பிரச்னை என்னவென்றால் கபசுர குடிநீரை நோயாளிகள் தவிரப் பிற நபர்கள் தொடர்ந்து குடித்து வரும் போது , அவர்களின் உடலில் உஷ்ணம் அதிகமாகும். அதிகப்படியான உஷ்ணம் உடலில் ஏற்படும் போது, அது மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். இதுவும் தவிர இந்த காலம் வெயில் காலம். ஆகவே இவை இரண்டும் இணைந்தும் பல நோய்களுக்கு நம்மை ஆட்படுத்தி விடும் ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

image

கொரோனாவில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் ?

கொரோனாவின் அறிகுறிகளாகச் சளி, இருமல், தலைகணத்தல் போன்றவை சொல்லப்படுகிறது. ஆகவே அவற்றை ஏற்படுத்தக் கூடிய உணவுகளான பால், தயிர், பன்னீர் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். டீ குடிக்கலாம், ஆனால் அது கீரீன் டீ போன்றவையாக இருக்க வேண்டும். லெமன் டீ குடிக்கக்கூடாது.

முட்டை, இறால், அப்பளம், காலிப்ளவர், வெண்டை, தக்காளி போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் நம் வயிரை மந்தப்படுத்தி கபத்தை அதிகப்படுத்திவிடும். அதே போலச் சாம்பார் செய்யும் போது பருப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அதில் விளக்கெண்ணெய் விட்டு வேக வைப்பது சாலச்சிறந்தது. காரணம், அது நமது ஜீரண சக்தியை இலகுவாக்கும்.

இந்தக்காலங்களில் பேதிக்கு மருந்து எடுப்பதையும், நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் தவிர்க்கவேண்டும். ஏனெனில் இவை நம்மைப் பலவீனமாக்கும். இது நோய்த் தொற்றை நம்மை எளிதாக நெருங்கச்செய்து விடும்.

தூய்மை பணியாளர்களுக்கு பண மாலை அணிவித்து, பூக்கள் தூவி நன்றி – நெகிழ்ச்சி வீடியோ!!

 

image

சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன ?

மிளகு ரசம் தினமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் அதிகப்படியான மிளகு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மிளகும் நமது உடல் சூட்டை அதிகப்படுத்தும். குறிப்பாக வேப்பம் பூ ரசம், கண்டன் திப்பிலி ரசம் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

நமது பாரம்பரியமான துவையல் வகைகளை சேர்த்துக்கொள்வது அதிக பலனளிக்கும். குறிப்பாக இஞ்சி துவையல், தனியா துவையல் ( கொத்தமல்லி விதை), கரு வேப்பிலை துவையல் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.