ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி, 3 மாதத்தவணைகளைத் தள்ளிவைப்பது குறித்த சுற்றறிக்கையே பல வங்கிகளுக்கு முறையாக அனுப்பப்படவில்லை. நேற்றைய தினம் (31.3.2020) நிதி ஆண்டு இறுதி நாளுக்கான கணக்குவழக்குகளை முடிக்க வேண்டியிருந்ததாலும், இன்று சில முக்கிய வங்கிகளின் இணைப்புப் பணிகள் நடைபெறுவதாலும் சுற்றறிக்கை அனுப்புவது தாமதமாவதாகக் கூறப்படுகிறது.

முதியோர் பென்ஷன்

இந்த நிலையில், பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின்படி ஏழைப்பெண்களின் வங்கிக்கணக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கும் திட்டத்தின்படி நாளை (2.4.2020) 500 ரூபாய் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் 2,000 ரூபாயும் நாளைய தினம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வழங்கப்படவுள்ளது. மேலும், முதியோர்களுக்கான ஓய்வூதியப்பணமும் நாளைதான் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிகிறது.

நாளைய தினம், தங்களது வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காக, விவசாயிகள், முதியோர் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருக்கும் வங்கிக் கிளைகளில்தான் அதிக கூட்டம் சேரக்கூடும். அவர்களுக்கு வங்கிச்சேவை முழுமையாகக் கிடைப்பதற்காக, நாளைய தினம், அனைத்து வங்கி அலுவலர்களும் விடுப்பில்லாமல் பணிக்கு வந்தாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயிகள்

அதிக கூட்டம் சேர்வதால் கொரோனா தொற்று பரவக் கூடாது என்பதற்காக, ஸ்டேட் லெவல் பேங்கர்ஸ் கமிட்டி சார்பாகச் சில பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 200 டோக்கன்கள்வரை மட்டுமே வழங்கப்படும். வங்கியின் உட்புறத்தில் 8 முதல் 10 வாடிக்கையாளர்கள்வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஊழியர்கள் அனைவருக்கும் மாஸ்க், சானிடைஸர் போன்ற பாதுகாப்புக்கருவிகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி வங்கி மூலமாக வழங்குவது சரியான முறையாக இருக்குமா, இதனால் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பில் சிக்கல் எழுமா என்ற சந்தேகத்தை, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ஃபிராங்கோவிடம் கேட்டோம். “கொரோனா குறித்த விழிப்புணர்வு இப்போதும்கூட பெரிதாக மக்களிடம் இல்லாததுபோலவே உள்ளது. பொது இடங்களில் சகஜமாக மக்கள் கூட்டமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இத்தகைய நிலையில், ஒரு நாளைக்கு 200 பேர் வங்கிக்கு வருவதும்கூட ஆபத்தானதுதான். இப்படி வங்கிகள் மூலமாக வழங்குவதற்குப்பதிலாக, வீடுவீடாக நிதி உதவியை வழங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதைப்போல மத்திய அரசும் செயல்படலாம். அதேபோல, பெண்களுக்கு மூன்று தவணைகளாக 500 ரூபாயை வழங்குவதற்குப் பதிலாக, ஒரே தவணையாக 1,500 ரூபாயை வழங்கலாம். இதனால் ஒரே வேலையைத் திரும்பத்திரும்பச் செய்வதைத் தவிர்க்கலாம். பெண்களுக்கும் நெருக்கடியான சூழலில் உதவிகரமாக இருக்கும்” என்று கூறினார்.

தாமஸ் ஃபிராங்கோ

கொரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் பெரிதாக இல்லாத சூழலில் அவர்களின் வங்கிக்கணக்கில் நிதி உதவியை அளிப்பது, அவர்களை வீட்டை விட்டு வெளியேற வைப்பதோடு, கொரோனா தொற்றி பரவலுக்கு வாய்ப்பாகவும் அமையக்கூடும். எனவே, பொதுமக்கள் அனைவரும் வங்கிக்கிளைகளிலும், ஏடிஎம் மையங்களிலும் ஒரே நேரத்தில் கூடாமல், ஒருவருக்கொருவர் போதிய இடைவெளி விட்டு பணத்தை எடுக்க வேண்டும். இதை அந்தந்தப் பகுதி காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.